வகைகள், தொலைநோக்கிகளின் நன்மைகள், குறைபாடுகள் - தொலைநோக்கிகள் | 10th Science : Chapter 2 : Optics
தொலைநோக்கிகள்
சமீபத்தில் தோன்றிய சந்திரகிரகணத்தை
நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?
வெற்றுக் கண்களால், அந்நிகழ்வைத் தெளிவாக காண
இயலாது. வெகுதொலைவில் உள்ள பொருள்களை நாம் தெளிவாகக் காண தொலைநோக்கிகள்
உதவுகின்றன.
தொலைவில் உள்ள பொருள்களைக் காண
உதவும் ஒளியியல் கருவிகள் தொலைநோக்கிகள் எனப்படுகின்றன. 1608 ஆம் ஆண்டு ஜோகன்
லிப்ரஷே என்பவரால் முதன் முதலில் தொலை நோக்கி உருவாக்கப்பட்டது. விண்மீன்களை உற்று
நோக்குவதற்காக கலிலியோ ஒரு தொலைநோக்கியை உருவாக்கினார். அவர் கண் கண்ணாடிகள்
செய்யும் கடைக்காரர் ஒருவரின் கடையில் வைக்கப்பட்டிருந்த லென்சின் வழியாகத்
தொலைவில் உள்ள காலநிலைக்காட்டியின் பெரிதாக்கப்பட்ட பிம்பத்தைக் கண்டார். இதனை
அடிப்படையாகக் கொண்டு தொலைநோக்கியை உருவாக்கினார். இத் தொலைநோக்கி மூலம் வியாழன்
கோளையும், சனி கோளைச் சுற்றியுள்ள வளையங்களையும்
ஆராய்ந்தார். கெப்ளர் என்ற இயற்பியலாளர் 1611 ஆம் ஆண்டு ஒரு
தொலைநோக்கியை உருவாக்கினார். இது அடிப்டையில் தற்கால வானியல் தொலைநோக்கியை
ஒத்திருந்தது.
ஒளியியல் பண்புகளை அடிப்படையாகக்
கொண்டு தொலைநோக்கிகள்
1. ஒளி விலகல் தொலை
நோக்கிகள்
2. ஒளி எதிரொளிப்புத்
தொலை நோக்கிகள்
என இருவகைகளாக
வகைப்படுத்தப்படுகின்றன.
ஒளிவிலகல் தொலை நோக்கிகளில் 'லென்சுகள்' பயன்படுத்தப்படுகின்றன. கலிலியோ தொலை நோக்கி, கெப்ளர்
தொலை நோக்கி, நிறமற்ற ஒளி விலக்கிகள் (Achromatic
refractors) ஆகியவை ஒளிவிலகல் தொலை நோக்கிகளுக்கு
எடுத்துக்காட்டுகள் ஆகும்.
ஒளி எதிரொளிப்பு
தொலைநோக்கிகளில்
'கோளக ஆடிகள்'
பயன்படுத்தப்படுகின்றன. கிரிகேரியன், நியூட்டன்,
கேஸ்கிரைன் தொலை நோக்கிகள் போன்றவை ஒளி எதிரொளிப்பு தொலை
நோக்கிகளுக்கு எடுத்துக் காட்டுகள் ஆகும்.
தொலை நோக்கிகளைப் பயன்படுத்தி காணக்
கூடிய பொருள்களை அடிப்படையாகக் கொண்டு தொலை நோக்கிகள்
1. வானியல் தொலை
நோக்கிகள்
2 நிலப்பரப்பு தொலை
நோக்கிகள்
என இரு பெரும் பிரிவுகளாகப்
பிரிக்கப்படுகின்றன.
இவை வான்பொருட்களான கோள்கள், விண்மீன்கள்,
விண்மீன் திரள்கள், துணைக் கோள்கள்
போன்றவற்றைக் காணப் பயன்படுகின்றன.
வானியல் தொலை நோக்கிகளில்
கிடைக்கும் இறுதி பிம்பமானது தலை கீழ் பிம்பமாக இருக்கும். எனவே, இத்தொலைநோக்கிகள்
புவிப்பரப்பில் உள்ள பொருள்களைக் காண்பதற்கு ஏற்றவை அல்ல என்பதால் நிலப்பரப்பு
தொலைநோக்கிகள் பயன்படுத்தப் படுகின்றன. நேரான இறுதி பிம்பத்தை உருவாக்குவது
மட்டுமே வானியல் தொலை நோக்கிகளுக்கும், நிலப்பரப்பு
தொலைநோக்கிகளுக்கும் இடையே உள்ள முக்கிய வேறுபாடு ஆகும்.
தொலைநோக்கிகளின்
நன்மைகள்
· கோள்கள், விண்மீன்கள்,
விண்மீன் திரள்கள் குறித்த விரிவான பார்வையைத் தருகிறது.
· தொலைநோக்கியுடன்
ஒளிப்படக்கருவியை இணைப்பதன் மூலம் வான் பொருள்களை ஒளிப்படம் எடுக்கலாம்.
· குறைவான
செறிவுடைய ஒளியிலும் தொலை நோக்கியைப் பயன்படுத்தலாம்.
குறைபாடுகள்
· தொலைநோக்கிகளைத்
தொடர்ந்து பராமரித்தல் வேண்டும்.
· இவற்றை
எளிதாக வேறு இடத்திற்கு எடுத்துச் செல்ல முடியாது.