கலவினைகளின் வெப்ப இயக்கவியல் | மின் வேதியியல் - மின்னாற்பகுப்புக் கலன் மற்றும் மின்னாற்பகுத்தல் | 12th Chemistry : UNIT 9 : Electro Chemistry
மின்னாற்பகுப்புக் கலன் மற்றும் மின்னாற்பகுத்தல்
மின்னாற்பகுத்தல் என்பது, மின்னாற்றலைப் பயன்படுத்தி தன்னிச்சையற்ற ஒரு வினையை நிகழ்த்தும் செயல்முறையாகும். பெரும்பாலான நேரங்களில், சேர்மத்தை அதன் தனிமங்களாக சிதைப்பதற்கு மின்னாற்றல் பயன்படுத்தப்படுகிறது. மின்னாற்பகுத்தலை நிகழ்த்தப் பயன்படும் மின்கலனானது, மின்னாற்பகுப்புக் கலன் என்றழைக்கப்படுகிறது. மின்னாற்பகுப்புக் கலன் மற்றும் கால்வானிக் மின்கலன்களில் நிகழும் மின் வேதிச் செயல்முறைகள் ஒன்றுக்கொன்று எதிரெதிரானவைகளாகும். உருகிய சோடியம் குளோரைடு கரைசலை மின்னாற்பகுப்பதன் மூலம் மின்னாற்பகுப்புக் கலனின் செயல்பாட்டை நாம் அறிந்து கொள்வோம்.
மின்னாற்பகுப்புக் கலனில் இரண்டு இரும்பு மின்முனைகள் உருகிய சோடியம் குளோரைடினுள் மூழ்கவைக்கப்பட்டுள்ளன, மேலும் அவை DC மின் மூலத்துடன் சாவியின் உதவியால் இணைக்கப்பட்டுள்ளன. மின் மூலத்தின் எதிர் முனையுடன் இணைக்கப்பட்டுள்ள மின் முனையானது எதிர் மின் முனை என்றழைக்கப்படுகிறது.
மின்மூலத்தின் நேர் முனையுடன் இணைக்கப்பட்டுள்ள மின்முனையானது நேர்மின்முனை என்றழைக்கப்படுகிறது. சாவி கொண்டு மூடிய உடன் வெளிப்புற DCமின்மூலமானது, எதிர்மின்முனை வழியே எலக்ட்ரான்களை பாய்ச்சுகிறது. அதே நேரத்தில், நேர்மின்முனை வழியே எலக்ட்ரான்களை இழுக்கிறது.