புறப்பரப்பு வேதியியல் - பால்மங்கள் | 12th Chemistry : UNIT 10 : Surface Chemistry

12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 10 : புறப்பரப்பு வேதியியல்

பால்மங்கள்

பால்மங்கள் என்பவை ஒரு நீர்மத்தில் மற்றொரு நீர்மம் விரவியுள்ள கூழ்மக்கரைசல்களாகும்.

பால்மங்கள்

பால்மங்கள் என்பவை ஒரு நீர்மத்தில் மற்றொரு நீர்மம் விரவியுள்ள கூழ்மக்கரைசல்களாகும். பொதுவாக இரண்டு வகையான பால்மங்கள் உள்ளன.

(i) எண்ணெய்விரவிய நீர்(O/W) (ii) நீர்விரவிய எண்ணெய் (W/O) 

எடுத்துக்காட்டு:

கெட்டியான மசகுகள் (Stiff greases) என்பவை எண்ணெய்யில் நீர் விரவியுள்ள பால்மங்களாகும். அதாவது நீரானது உயவு எண்ணெய்யில் விரவச் செய்யப்பட்டுள்ளது.

ஒரு நீர்மத்தை, மற்றொரு நீர்மத்தில் விரவச்செய்து பால்மங்களை தயாரிக்கும் செயல்முறையானது பால்மமாக்கல் என்றழைக்கப்படுகிறது.

இரண்டு நீர்மங்களை கலக்குவதற்காக, கூழ்ம ஆலையை ஒருபடித்தாக்கியாக பயன்படுத்திக் கொள்ள முடியும். அதிக நிலைப்புத் தன்மை கொண்ட பால்மத்தை பெற அதனுடன் சிறிதளவு பால்மமாக்கி அல்லது பாலம்மாக்கும் காரணி சேர்க்கப்படுகிறது.

பல்வேறு வகை பால்மக் காரணிகள் உள்ளன

i. பெரும்பாலான கரைப்பான் விரும்பும் கூழ்மங்களும் பால்மமாக்கிகளாக செயல்படுகின்றன. எடுத்துக்காட்டு: பசை, ஜெலாட்டின்

ii. சோப்பு மற்றும் சல்பானிக் அமிலங்கள் போன்ற முனைவுற்ற தொகுதிகளுடன் கூடிய நீண்ட சங்கிலிச் சேர்மங்கள்

iii. களிமண் மற்றும் விளக்குக் கரி போன்ற நீரில்கரையாத மாவுப் பொருட்களும் பால்மமாக்கிகளாக செயல்படுகின்றன


பால்மத்தின் வகையை கண்டறிதல்

பின்வரும் சோதனைகளின் மூலம் இருவகை பால்மங்களை கண்டறிய முடியும்.

(i) சாய சோதனை:

சிறிதளவு எண்ணெய்யில் கரையும் சாயம் , பால்மத்துடன் சேர்த்து நன்கு குலுக்கப்படுகிறது. நீர்ம பால்மம் சாயத்தின் நிறத்தை ஏற்பதில்லை. ஆனால், எண்ணெய்ப் பால்மமானது சாயத்தின் நிறத்தை ஏற்கிறது.

(ii) பாகுநிலை சோதனை

பால்மத்தின் பாகுநிலைத் தன்மையானது சோதனைகள் மூலம் கண்டறியப்படுகிறது. எண்ணெய் பால்மங்கள் , நீர்ம பால்மங்களை விட அதிக பாகுநிலைத் தன்மையை பெற்றுள்ளன

(iii) கடத்துத்திறன் சோதனை

நீர்ம பால்மங்களின் கடத்துத்திறன் எப்பொழுதும் எண்ணெய் பால்மங்களை விட அதிகம்

(iv) பரவுதல் சோதனை

பால்மங்களை எண்ணெய் பரப்பின் மீது பரவச் செய்யும்போது, நீர்ம பால்மங்களைவிட எண்ணெய் பால்மங்கள், எளிதாக பரவுகின்றன


பால்மச்சிதைவு:

பால்மங்களை இரண்டு தனித்தனி அடுக்குகளாக பிரிக்க முடியும். இச்செயல்முறையானது பால்மச்சிதைவு என்றழைக்கப்படுகிறது.

பல்வேறு பால்மச்சிதைவு உத்திகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன

1. ஒரு பகுதிக்கூறை மட்டும் வாலைவடித்தல் 

2. ஒரு மின்பகுளியை சேர்த்து மின்சுமையை தகர்த்தல்

3. வேதிமுறைகளை பயன்படுத்தி பால்மக் காரணிகளை சிதைத்தல்

4. கரைப்பான் சாறு இறக்குதல் முறையை பயன்படுத்தி ஒரு பகுதிகூறை நீக்குதல்

5. ஒரு பகுதிகூறை மட்டும் உறையவைத்தல்

6. மையவிலக்கு விசையை செலுத்துதல்

7. நீர் விரவிய எண்ணெய் (W/O) வகை பால்மத்துடன் நீர்நீக்கும் காரணிகளை சேர்த்தல்

8. மீயொலி அலைகளை பயன்படுத்துதல்

9. உயர் அழுத்தத்தில் வெப்பப்படுத்துதல்.

நிலைமை நேர்மாற்றம்:

W/O பால்மத்தை O/W பால்மமாக மாற்றும் செயல்முறையானது நிலைமை நேர் மாற்றம் என்றழைக்கப்படுகிறது

எடுத்துக்காட்டாக:

பொட்டாசியம் சோப்பை பால் மக்காரணியாக கொண்டுள்ள எண்ணெய் விரவிய நீர்பால்மத்துடன் CaCl2 அல்லது AlCl3 ஆகியவற்றை சேர்ப்பதன் மூலம் அதை நீர் விரவிய எண்ணெய் பால்மமாக மாற்ற முடியும். இந்த நிலைமை நேர்மாற்ற வழிமுறையானது அண்மைக்கால ஆராய்ச்சிகளில் பயன்படுத்தப்படுகிறது.


Tags : Surface Chemistry புறப்பரப்பு வேதியியல்.
12th Chemistry : UNIT 10 : Surface Chemistry : Emulsions Surface Chemistry in Tamil : 12th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 10 : புறப்பரப்பு வேதியியல் : பால்மங்கள் - புறப்பரப்பு வேதியியல் : 12 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 10 : புறப்பரப்பு வேதியியல்