உறவுகளும் சார்புகளும் | கணக்கு - வரிசைச் சோடி | 10th Mathematics : UNIT 1 : Relation and Function
வரிசைச் சோடி (Ordered Pair)
கொடுக்கப்பட்ட அரங்கில் (படம் 1.1) அமர்வதற்காக உள்ள இருக்கைகளை உற்று நோக்கவும். ஒருவர் அவரது இருக்கையில் அமரும் இடத்தைக் கண்டறிய உதவும்படி, (1,5), (7,16), (3,4), (10,12) .... என இருக்கை எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
ஒருவருக்கு (4,10) எனக் கிடைத்தால் அவர் 4-வது வரிசையில் 10-வது இருக்கையில் அமர வேண்டும். எனவே, முதல் எண் வரிசையையும், இரண்டாவது எண் இருக்கை எண்ணையும் குறிப்பிடுகின்றன. (5,9) என்ற இருக்கை எண்ணைப் பெறும் பார்வையாளர் எந்த இடத்தில் அமர்வார்? அவர் 9-வது வரிசையில் 5-வது இருக்கைக்குச் செல்லலாமா? (9,5) மற்றும் (5,9) இரண்டும் ஒரே இருக்கையைக் குறிக்கின்றனவா? கண்டிப்பாக இல்லை. (2,3), (6,3) மற்றும் (10,3) என்ற இருக்கை எண்களைப் பற்றி என்ன கூறுகிறீர்கள்?
இருப்பிடத்தைத் துல்லியமாகக் குறிக்கின்ற எண்களின் சோடிக்கு இது ஓர் எடுத்துக்காட்டு. இத்தகைய சோடிகளை எண்களின் “வரிசை சோடி" என்கிறோம். கணிதத்தில் காணும் "உறவுகள்" என்ற கோட்பாட்டைக் கற்க வரிசைச் சோடிகள் பயன்படுகின்றன.