புவிமையக்கொள்கையும் - சூரியமையக் கொள்கையும்
தொடர்ந்து சில மாதங்களுக்கு இரவில் வெறுங்கண்களால் கோள்களின் இயக்கங்களை உற்று நோக்கினோம் எனில் கோள்கள் கிழக்கு திசையில் பயணித்து பின்பு பின்னோக்கி மேற்கு திசையில் இயங்கி மீண்டும் கிழக்கு திசையில் பயணிப்பதை காணலாம். இதற்கு "கோள்களின் பின்னோக்கு இயக்கம்" (Retro grade motion) என்று பெயர். செவ்வாயின் பின்னோக்கு இயக்கத்தை படம் 6.25 இல் காணலாம்.
ஓர் ஆண்டு காலத்திற்கு செவ்வாய் கோளின் இயக்கத்தை உற்று நோக்கும் போது அது முதலில் கிழக்கு திசை நோக்கி (பிப்ரவரி முதல் ஜுன்) செல்லும். பின்பு பின்னோக்கி (ஜுலை, ஆகஸ்டு, செப்டம்பர்) செல்லும். பிறகு அக்டோபர் முதல் மீண்டும் கிழக்கு திசையில் செல்கிறது. முற்காலத்தில் வானியல் அறிஞர்கள் கண்ணுக்கு புலனாகும் அனைத்து கோள்களின் பின்னோக்கு இயக்கத்தை பதிவு செய்து அதனை விளக்க முயற்சி செய்தனர். சூரியன் மற்றும் அனைத்து கோள்களும் புவியை மையமாகக் கொண்டு வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன என அரிஸ்டாட்டில் கூறினார். அவ்வாறு வட்டப்பாதையில் கோள்கள் இயங்கினால் குறுகிய காலத்திற்கு ஏன் கோள்கள் பின்னோக்கி இயங்குகின்றன? என்பதை விளக்க முடியவில்லை.
எனவே தாலமி இந்த புவிமையக் கோட்பாடில்" பெருவட்டத்தின் மேல் அமையும் சிறு வட்டச்சுழற்சி (epicycle) என்ற கருத்தினை முன்மொழிந்தார். இக்கருத்தின்படி, புவியினைக் கோள் வட்டப் பாதையில் சுற்றும் அதே வேளையில் மற்றும் ஒரு வட்டப்பாதை இயக்கத்திற்கும் உள்ளாகும். அதற்கு பெருவட்டத்தின் மேல் அமையும் சிறுவட்ட சுழற்சி எனப் பெயர். வட்டப்பாதையில் புவியினை சுற்றும் இயக்கத்தையும், பெருவட்டத்தின் மேல் அமையும் சிறுவட்ட இயக்கத்தையும் ஒன்றிணைக்கும்போது புவியினை ஒரு பொருத்து கோள்கள் பின் நோக்கி செல்வது போல தோன்றும் இயக்கத்தை தருகிறது. அரிஸ்டாட்டிலின் புவிமையக் கருத்துடன் பெருவட்டத்தின் மேல் அமையும் சிறுவட்ட இயக்கத்தை தாலமி இணைத்தார்.
ஆனால் தலாமியின் இந்த சிறு வட்டச் சுழற்சி விளக்கமானது மிகவும் கடினமாக இருந்தது. 15 ஆம் நூற்றாண்டில் போலந்து நாட்டு வானியல் அறிஞர் கோபர்நிக்கஸ், இந்த சிக்கலை எளிய முறையில் தீர்க்கும் விதமாக சூரிய மையக் கொள்கையை முன்மொழிந்தார். இக்கொள்கைப்படி, சூரிய குடும்ப அமைப்பின் மையம் சூரியனே. அனைத்து கோள்களும் சூரியனைச் சுற்றி வருகின்றன. புவியினைச் சார்ந்து கோள்களின் சார்பு இயக்கத்தின் காரணமாக கோள்கள் ‘’பின் நோக்கி செல்வது போன்ற இயக்கத்தை" (Retrograde motion) பெறுகின்றன. சூரிய மையக் கொள்கையின் அடிப்படையில் கோள்களின் இந்த பின் நோக்கி செல்வது போன்ற இயக்கம் படம் 6.27 இல் காட்டப்பட்டுள்ளது.
புவியானது செவ்வாய் கோளை விட விரைவாக சூரியனை சுற்றி வருகிறது. புவிக்கும் செவ்வாய் கோளுக்கும் இடையேயான சார்பு இயக்கத்தின் (Relativemotion) காரணமாக ஜுலை முதல் அக்டோபர் வரை செவ்வாய் கோள் பின் நோக்கி செல்வது போல தோன்றுகிறது. இதே போல பிற கோள்களின் பின்னோக்கு இயக்கங்களையும் கோபர் நிகஸின் சூரிய மையக் கொள்கையால் விளக்க முடிந்தது. இந்த எளிமைத் தன்மையின் காரணமாகவே சூரிய மையக் கொள்கை புவி மையக் கொள்கைக்கு பதிலாக படிப்படியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இயற்கை நிகழ்வுகளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விளக்கங்கள் தரப்படும் போது, எளிமையான விளக்கமே அல்லது மாதிரியே பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படும். மேற்கூறிய கருத்து மட்டுமல்லாது, தாலமியின் கொள்கைக்கு பதிலாக கோபர்நிகஸ் கொள்கை ஏற்றுக் கொள்ளபட்டதற்கான விரிவான விளக்கத்தை வானியல் நூல்களில் காணலாம்.