இலையின் பண்புகள், பணிகள், பாகங்கள், வகைகள் - இலை | 11th Botany : Chapter 3 : Vegetative Morphology of Angiosperm
இலை (Leaf)
இலைகள் தண்டின் பசுமையான, மெல்லிய, தட்டையான, பக்கவாட்டில் தோன்றும் புறத்தோன்றி வளரிகளாகும். ஒளிச்சேர்க்கை மற்றும் நீராவிப்போக்கு நடைபெறும் முக்கியப் பகுதியாக இலைகள் விளங்குகின்றன. தாவரத்திலுள்ள அனைத்து இலைகளும் சேர்ந்த தொகுப்பிற்கு இலைத்தொகுதி என்று பெயர்.
I. இலையின் பண்புகள்:
1. இலைகள் தண்டின் பக்கவாட்டு வளரிகள் ஆகும்.
2. இவை தண்டின் கணுவிலிருந்து உருவாகின்றன.
3. இவை தண்டின் புறத்தோன்றிகளாக உருவாகின்றன.
4. இவை வரையறுக்கப்பட்ட வளர்ச்சியினைக் கொண்டுள்ளன.
5. நுனிமொட்டு அற்றவை.
6. இவை மூன்று முக்கியப் பகுதிகளைக் கொண்டுள்ளன. அவை முறையே இலையடிப்பகுதி, இலைக்காம்பு மற்றும் இலைப்பரப்பு ஆகும்.
7. இலைப்பரப்பில் வாஸ்குல இழைகளைப் பெற்ற முக்கிய அமைப்பு ஊடுருவி பரவிச் செல்கின்றன. இவற்றிற்கு நரம்புகள் என்று பெயர்.
II. இலையின் பணிகள்:
முதன்மை பணிகள்
1. ஒளிச்சேர்க்கை 2. நீராவிப்போக்கு 3. வாயு பரிமாற்றம் 4. மொட்டுகளைப் பாதுகாத்தல் 5. நீரையும், நீரில் கரைந்துள்ள பொருட்களையும் கடத்துதல்
இரண்டாம் நிலை பணிகள்
1. சேமித்தல் - எடுத்துக்காட்டு: அலோ, அகேவ்.
2. பாதுகாப்பு - எடுத்துக்காட்டு: ஒபன்ஷியா, ஆர்ஜிமோன் மெக்சிகானா.
3. தாங்குதல் - எடுத்துக்காட்டு: குளோரியோஸா (செங்காந்தள்), நெப்பந்தஸ்.
4. இனப்பெருக்கம் - எடுத்துக்காட்டு : பிரையோஃபில்லம், பெகோனியா, ஜாமியோ.
1. இலையின் பாகங்கள்:
இலையின் மூன்று முக்கிய பாகங்கள்
I. இலையடிப்பகுதி (Hypopodium)
II. இலைக்காம்பு (Mesopodium)
III. இலைப்பரப்பு (Epipodium)
I. இலையடிப்பகுதி
தண்டின் கணுவில் இணைக்கப்பட்டுள்ள இலையின் அடிப்பகுதி இலையடிப்பகுதி எனப்படும். பொதுவாக கோணப்பகுதியில் வளர்ந்து வரும் மொட்டுகளை இவை பாதுகாக்கின்றன.
இலை அதைப்பு: லெகூம் வகைத் தாவரங்களில் இலையடிப்பகுதியானது அகன்றும், பருத்தும் காணப்படுகிறது. இதற்கு இலை அதைப்பு என்று பெயர். எடுத்துக்காட்டு: கிளைட்டோரியா (சங்கு பூ), லாப்லாப் (அவரை), கேஷியா, ப்யூட்டியா.
உறை இலையடி : அரிக்கேசி, மியூசேசி, ஜின்ஜிஃபெரேசி, போயேசி போன்ற பல ஒருவிதையிலை குடும்பத் தாவரங்களில் இலையடி நீண்டு, உறைபோன்று மாறி, பகுதியாகவோ அல்லது முழுவதுமாகவோ தண்டின் கணுவிடைப் பகுதியைத் தழுவிக் கொண்டிருக்கும். மேலும் இத்தகைய இலையடி உதிரும்போது நிலையான தழும்பைத் தண்டின் மேல் விட்டுச் செல்கிறது.
II. இலைக்காம்பு (Petiole/ Stipe/ Mesopodium)
இது இலைப்பரப்பைத் தண்டுடன் இணைக்கும் பாலமாகும். இவை உருளை வடிவமாகவோ தட்டையாகவோ காணப்படும். காம்பைப் பெற்றிருக்கும் இலைகளை காம்புடைய இலைகள் என்று அழைக்கின்றோம். எடுத்துக்காட்டு: ஃபைகஸ், ஹைபிஸ்கஸ், காம்பற்ற இலைகளை காம்பிலி இலைகள் என்று அழைக்கின்றோம். எடுத்துக்காட்டு: கலோட்ரோபிஸ் (எருக்கு).
III. இலைப்பரப்பு / இலைத் தாள் (Lamina/ Leaf blade)
இலையின் விரிவாக்கப்பட்ட, தட்டையான, பசுமையான பகுதி இலைப்பரப்பு அல்லது இலைத் தாள் எனப்படும். இது ஒளிச்சேர்க்கை, வளி பரிமாற்றம், நீராவிப்போக்கு மற்றும் தாவரங்களின் பல வளர்ச்சிதை மாற்ற வினைகளின் இருப்பிடமாக உள்ளது. இலைத்தாளின் மையத்தில் மைய நரம்பும், அதிலிருந்து பல பக்கவாட்டு நரம்புகளும், இவற்றிலிருந்து பல மெல்லிய சிறிய நரம்புகளும் பரவியிருக்கின்றன. இலைத்தாளானது வடிவம், விளிம்பு , பரப்பு, தன்மை, வண்ணம், நரம்பமைவு , பிளவுகள் போன்றவற்றில் வேறுபாடுகளைக் கொண்டுள்ளது.
இலையடிச் செதில்கள் (Stipules)
பெரும்பாலான இருவிதையிலைத் தாவரங்களில் இலையடிப்பகுதி ஒன்று அல்லது இரண்டு பக்கவாட்டு வளரிகளைக் கொண்டுள்ளது. இந்தப் பக்கவாட்டு வளரிகளுக்கு இலையடிச் செதில்கள் என்று பெயர். இந்தப் பக்கவாட்டு வளரிகளைக் கொண்ட இலைகள் இலையடிச் செதில் உள்ளவை (Stipulate) என்றும், பக்கவாட்டு வளரிகள் அற்ற இலைகள் இலையடிச் செதிலற்றவை (Stipulate or Exstipulate) என்றும் அழைக்கப்படுகின்றன.
இலையடிச் செதில்கள் பொதுவாக இருவிதையிலைத் தாவரங்களில் காணப்படுகின்றன. சில வகையான புற்களில் (ஒருவிதையிலைத்தாவரம்) இலையடிப் பகுதிக்கும், இலைப்பரப்பிற்கும் இடையில் ஒரு துணைவளரி காணப்படுகிறது. இதற்கு லிக்யூல் என்று பெயர். சில சமயம் சிறிய இலையடிச் செதில் போன்ற வளரிகள் கூட்டிலையின் சிற்றிலைகளின் அடிப்பகுதியில் காணப்படுகின்றன, இதற்கு சிற்றிலையடிச் செதில்கள் என்று பெயர். மொட்டில் உள்ள இலையைப் பாதுகாப்பதே இலையடிச்செதிலின் முக்கியப் பணியாகும்.
2. நரம்பமைவு (Venation)
இலைத்தாள் அல்லது இலைப்பரப்பில் நரம்புகளும், கிளை நரம்புகளும் அமைந்திருக்கும் முறைக்கு நரம்பமைவு என்று பெயர். உள்ளமைப்பில் நரம்புகள் வாஸ்குலத் திசுக்களைப் பெற்றுள்ளன.
வழக்கமாக நரம்பமைவு இரண்டு வகையாக வகைப்படுத்தப்படும். அவை முறையே வலைப்பின்னல் நரம்பமைவு, இணைப்போக்கு நரம்பமைவு ஆகும்.
I. வலைப்பின்னல் நரம்பமைவு (Reticulate venation)
இதில் மையத்தில் ஒரு தெளிவான மைய நரம்பும், அதிலிருந்து தோன்றும் பல சிறிய இரண்டாம் நிலை நரம்புகளும் உள்ளன. இவை அனைத்தும் சேர்ந்து இலைப்பரப்பில் ஒரு வலைப்பின்னலை ஏற்படுத்துகின்றன. பொதுவாக இந்த வகையான நரம்பமைவை அனைத்து இருவிதையிலைத் தாவரங்களிலும் காணலாம். இது இரண்டு வகைப்படும்.
1. சிறகு வடிவ வலைப்பின்னல் நரம்பமைவு - ஒரு நடு நரம்ப மைவு (Pinnately reticulate venation - unicostate)
இதில் மையத்தில் ஒரே ஒரு மைய நரம்பு மட்டுமே உள்ளது. இம்மைய நரம்பிலிருந்து பல கிளை நரம்புகள் தோன்றி ஒரு வலைப்பின்னலை ஏற்படுத்துகின்றன. எடுத்துக்காட்டு : மாஞ்சிஃபெரா இண்டிகா.
2. அங்கை வடிவ வலைப்பின்னல் நரம்பமைவு - பல நடு நரம்ப மைவு (Palmate Reticulate venation - multicostate)
இதில் இரண்டு அல்லது பல மைய நரம்புகள் ஒரு புள்ளியிலிருந்து தோன்றி, இலையின் வெளிப்புறமாகவோ அல்லது மேற்புறமாகவோ செல்லும். அங்கை வடிவ வலைப்பின்னல் நரம்பமைவு மேலும் இரண்டு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
i. விரி நரம்பமைவு வகை (Divergent): இவ்வகை நரம்பமைவில் அனைத்து மைய நரம்புகளும் அடிப்பகுதியிலிருந்து தோன்றி இலையின் விளிம்பு வரை விரிந்து செல்கின்றன. எடுத்துக்காட்டு: காரிக்கா பப்பாயா (பப்பாளி).
ii. குவி நரம்பமைவு வகை (Convergent): இவ்வகை நரம்பமைவில் அனைத்து நரம்புகளும் இலையின் நுனிப்பகுதியில் குவிகின்றன. எடுத்துக்காட்டு: ஜிஜீஃபஸ் (இலந்தை), சின்னமோமம் (பிரிஞ்சி இலை).
II. இணைப்போக்கு நரம்பமைவு (Parallel venation)
இவ்வகை நரம்பமைவில் அனைத்து நரம்புகளும் ஒன்றுக்கொன்று இணையாகச் செல்கின்றன. மேலும் இங்கு தெளிவான வலைபின்னல் அமைப்பு தோன்றுவதில்லை. இவ்வகை நரம்பமைவு ஒருவிதையிலைத் தாவரஇலைகளின் சிறப்பமைவாகும். இதை இரண்டு துணை வகைகளாகப் பிரிக்கலாம்.
1. சிறகு வடிவ இணைப்போக்கு நரம்பமைவு - ஓர் நடு நரம்ப மைவு (Pinnately parallel venation - Unicostate)
இவ்வகை நரம்பமைவில் நடுவில் ஒரு தெளிவான மைய நரம்பு உள்ளது. இதிலிருந்து செங்குத்தாகவும், இணையாகவும் செல்லும் பல நரம்புகள் தோன்றுகின்றன. எடுத்துக்காட்டு: மியூசா, இஞ்சி.
2. அங்கை வடிவ இணைப்போக்கு நரம்பமைவு - பல நடு நரம்ப மைவு (Palmate parallel venation - Multicostate)
இவ்வகை நரம்பமைவில் காம்பின் நுனியிலிருந்து (இலைப்பரப்பின் அடியிலிருந்து) பல நரம்புகள் தோன்றி, பின் ஒன்றுக்கொன்று இணையாகச் சென்று நுனியில் கூடுகின்றன. இவை இரண்டு வகைப்படும்.
i. விரி நரம்பமைவு வகை (Divergent): இவ்வகை நரம்பமைவில் அனைத்து முக்கிய நரம்புகளும் இலைப்பரப்பின் அடியிலிருந்து உருவாகி விளிம்பை நோக்கி விரிகின்றன. எடுத்துக்காட்டு: பொராஸஸ் ஃபிளாபெல்லிஃபர்.
ii. குவி நரம்பமைவு வகை (Convergent type): இவ்வகை நரம்பமைவில் அனைத்து முக்கிய நரம்புகளும் இலைப்பரப்பின் அடியிலிருந்து உருவாகி, இணையாகச் சென்று நுனியில் குவிகின்றன. எடுத்துக்காட்டு : மூங்கில், நெல், வெங்காயத்தாமரை.
3. இலை அடுக்கமைவு (Phyllotaxy):
தண்டில் இலைகள் அமைந்திருக்கும் முறைக்கு இலை அடுக்கமைவு என்று பெயர். (Greek - Phyllon = leaf; taxis=arrangement). இலைகள் நெருக்கமாக அமைவதைத் தவிர்த்து ஒளிச்சேர்க்கைக்குத் தேவையான சூரிய ஒளி இலைகளில் அதிகமாக விழச் செய்வதே இலை அடுக்கமைவின் நோக்கமாகும். நான்கு முக்கிய இலை அடுக்கமைவு வகைகள்.
1. மாற்றிலை அடுக்கமைவு
2. எதிரிலை அடுக்கமைவு
3. மூவிலை அடுக்கமைவு
4. வட்ட இலை அடுக்கமைவு
1. மாற்றிலை அடுக்கமைவு (Alternate phyllotaxy)
இவ்வகை இலையமைவில் ஒரு கணுவில் ஒரே ஒரு இலை மட்டும் காணப்படும். அடுத்தடுத்துள்ள கணுக்களில் இவ்விலைகள் மாறிமாறி மாற்றிலை அமைவில் அமைந்திருக்கும். இலைகள் சுழல் முறையில் அமைந்திருப்பது பல நெடுக்கு வரிசைகள் போன்று தோற்றம் அளிக்கின்றன. இதற்கு ஆர்தோஸ்டிகிஸ் என்று பெயர். இது இரண்டு வகைப்படும்.
அ) சுழல் மாற்றிலை அடுக்கமைவு (Alternate spiral): இவ்வகையில் இலைகள் மாற்றிலை அமைவில் சுழல் அமைப்பு முறையில் அமைந்துள்ளன. எடுத்துக்காட்டு: ஹைபிஸ்கஸ், ஃபைகஸ்.
ஆ) இருவரிசை மாற்றிலை அல்லது பைஃபேரியஸ் (Alternate distichous Bifarious): இவ்வகையில் இலைகள் மாற்றிலை அமைவில் தண்டின் ஒவ்வொரு பக்கத்திலும் இரண்டு வரிசைகளில் அமைந்துள்ளன. எடுத்துக்காட்டு: முனூன் லான்ஜிஃபோலியம் (பாலியால்தியா லான்ஜிஃபோலியா)
2. எதிரிலை அடுக்கமைவு (Opposite phyllotaxy)
இவ்வகை இலையமைவில் ஒவ்வொரு கணுவிலும் இரண்டு இலைகள், ஒன்றுக்கொன்று எதிரெதிராக அமைந்துள்ளன. இவை இரு வெவ்வேறு முறைகளில் அமைந்திருக்கின்றன.
i. ஒருபோக்கு எதிரிலை அடுக்கமைவு (Opposite superposed): இதில் அடுத்தடுத்துள்ள கணுக்களில் இணையாக உள்ள இலைகள் ஒரே போக்கில் அமைந்துள்ளன. அதாவது ஒரு கணுவில் உள்ள இரண்டு எதிரெதிர் இலைகள் கீழே உள்ள கணுவிலுள்ள இலைகளுக்கு நேர்மேலாக உள்ளன. எடுத்துக்காட்டு: சிடியம், குவிஸ்குவாலிஸ் (ரங்கூன் மல்லி ).
ii. குறுக்கு மறுக்கு எதிரிலை அடுக்கமைவு (Opposite decussate): அடுத்தடுத்த கணுக்களில் அமைந்துள்ள இணை இலைகள் ஒன்றுக்கொன்று செங்குத்தாக (குறுக்கு மறுக்கு) அமைந்திருக்கும். எடுத்துக்காட்டு: கலோட்ராபிஸ், ஆசிமம் (துளசி).
3. மூவிலை அடுக்கமைவு (Ternate Phyllotaxy)
இவ்வகை இலையமைவில் ஒவ்வொரு கணுவிலும் மூன்று இலைகள் அமைந்துள்ளன. எடுத்துக்காட்டு: நீரியம் (அரளி).
4. வட்ட இலை அடுக்கமைவு (Whorled or verticillate type of phyllotaxy)
இவ்வகை இலையமைவில் ஒவ்வொரு கணுவிலும் மூன்றிற்கு மேற்பட்ட இலைகள் வட்டமாக அமைந்து காணப்படுகின்றன. எடுத்துக்காட்டு: அலமாண்டா.
4. ஒளிசார் பரவிலை அமைவு (Leaf mosaic)
ஒளிசார் பரவிலை அமைவில் ஒரு இலை மற்றொரு இலைக்கு நிழலை ஏற்படுத்தாதவாறும், அனைத்து இலைகளுக்கும் அதிகபட்ச சூரிய ஒளி கிடைக்கும் விதத்திலும், ஒன்றின் மேல் ஒன்று தழுவாதவாறு தங்களுக்குள் சரிசெய்து கொள்ள முனைகின்றன. கீழ்ப் பகுதியில் அமைந்துள்ள இலைகள் நீண்ட இலைக்காம்பினையும், மேல் பகுதியில் அமைந்துள்ள இலைகள் நீளம் குறைந்த இலைக்காம்பினையும் பெற்று அமைந்துள்ளன. எடுத்துக்காட்டு: அகாலிஃபா (குப்பைமேனி).
5. இலை வகை (Leaf type)
இலையின் வெவ்வேறான கூறுகளை அல்லது பிரிவுகளை உள்ளடக்கிய முறையையே இலை வகை என்கிறோம். பிரிவுகளின் எண்ணிக்கை அடிப்படையில் இலையானது கீழ்வருமாறு பிரிக்கப்படுகின்றது.
I. தனி இலை (Simple leaf)
ஒரு இலைக்காம்பில் ஒரே ஒரு இலைத்தாள் மட்டும் இருந்தால் அதற்குத் தனி இலை என்று பெயர். இந்த இலைத்தாள் பகுப்படையாமல் முழுவதுமாகவோ (எடுத்துக்காட்டு: மா) ஏதோ ஓர் அளவில் ஆழமாகப் பிளவுப்பட்டு, அதேசமயம்பிளவுமைய நரம்புவரையோ அல்லது இலைக்காம்பு வரையோ பரவா வண்ணம் அமைந்திருக்கும். எடுத்துக்காட்டு: குக்கர்பிட்டா.
II. கூட்டிலை (Compound leaf)
ஓர் இலைக்காம்பில் பல இலைத்தாள்களிருந்தால் அதற்குக் கூட்டிலை என்று பெயர். அதிலுள்ள ஒவ்வொரு இலைத்தாளிற்கும் சிற்றிலை என்று பெயர். கூட்டிலைகள் மொத்த இலைப்பரப்பை அதிகரிக்கச் செய்கின்றன. மொத்தக் கூட்டிலைக்கும் ஒரே ஒரு கோணமொட்டு காணப்படுகிறது. ஆனால் சிற்றிலைகளில் எவ்விதக் கோணமொட்டும் கிடையாது.
1. சிறகு வடிவக் கூட்டிலைகள் (Pinnately compound leaf)
சிறகு வடிவக் கூட்டிலைகள் என்பவை கூட்டிலைக் காம்பு என்ற அச்சில் பல பக்கவாட்டுச் சிற்றிலைகளை மாற்றிலை அமைவிலோ அல்லது எதிரிலை அமைவிலோ கொண்டு அமைந்திருக்கும். எடுத்துக்காட்டு: டாமரின்டஸ் (புளி), கேசியா.
i. ஒரு மடிக் கூட்டிலை (Unipinnate) : இவற்றில் கூட்டிலை காம்பு தனித்தும், கிளைகளற்றும், சிற்றிலைகள் நேரடியாக நடு அச்சில் மாற்றிலை அமைவிலோ அல்லது எதிரிலை அமைவிலோ அமைந்திருக்கும். எடுத்துக்காட்டு: ரோஜா, வேம்பு. ஒருமடிக்கூட்டிலை இரண்டு வகைப்படும்.
அ. சிற்றிலைகள் இரட்டைப்படை எண்ணிக்கையில் அமைந்திருந்தால் அதற்கு இரட்டைப்படை ஒருமடிக்கூட்டிலை என்று பெயர். எடுத்துக்காட்டு: டாமரின்டஸ்.
ஆ. சிற்றிலைகள் ஒற்றைப் படையில் அமைந்திருந்தால் அதற்கு ஒற்றைப்படை ஒருமடிக்கூட்டிலை என்று பெயர்.
எடுத்துக்காட்டு: அசாடிராக்டா (வேம்பு).
ii. இருமடிக் கூட்டிலை (Bipinnate) முதல்நிலை கூட்டிலை அச்சிலிருந்து இரண்டாம் நிலை அச்சுகள் உருவாகி, அதிலிருந்து சிற்றிலைகள் தோன்றுகின்றன. இரண்டாம் நிலை அச்சுகளுக்குப் பின்னா என்று பெயர். சிற்றினங்களைப் பொறுத்து இந்தப் பின்னாக்களின் எண்ணிக்கை மாறுபடும்.
iii. மும்மடிக்கூட்டிலை (Tripinnate): இவ்வகையில் கூட்டிலை அச்சு மூன்றாகக் கிளைக்கிறது. அதாவது இரண்டாம் நிலை அச்சு கிளைத்து, இலைகளைத் தாங்கும் மூன்றாம் நிலை அச்சுகளை உருவாக்குகிறது. இதற்கு மும்மடிக்கூட்டிலை என்று பெயர்.
எடுத்துக்காட்டு: மொரிங்கா (முருங்கை).
iv. பன்மடிக்கூட்டிலை (Decompound): கூட்டிலைகள் மூன்று முறைக்கும் மேலாகக் கிளைத்திருந்தால் அதனைப் பன்மடிக்கூட்டிலை என்கிறோம். எடுத்துக்காட்டு : டாக்கஸ் கரோட்டா, கொரியாண்டர் சட்டைவம் (கொத்தமல்லி).
2. அங்கை வடிவக் கூட்டிலை (Palmately compound leaf)
அனைத்துச் சிற்றிலைகளும் இலைக்காம்பின் நுனியில் ஒரே புள்ளியில் இணைக்கப்பட்டிருந்தால் அதை அங்கை வடிவக் கூட்டிலை என்கிறோம். உள்ளங்கையிலிருந்து விரல்கள் தோன்றுவது போல இங்கு சிற்றிலைகள் ஆரநீட்சிகளாக தோன்றுகிறது. இக்கூட்டிலை பல வகைப்படும். அவையாவன.
i. ஒருசிற்றிலை அங்கைக் கூட்டிலை (Unifoliolate): இலைக்காம்பில் ஒரே ஒரு சிற்றிலை மட்டுமே அமைந்திருந்தால் அதற்கு ஒரு சிற்றிலை அங்கைக்கூட்டிலை என்று பெயர். எடுத்துக்காட்டு: சிட்ரஸ்.
ii. இருசிற்றிலை அங்கைக்கூட்டிலை (Bifoliolate): இலைக் காம்பில் இரண்டு சிற்றிலைகள் அமைந்திருந்தால் அதற்கு இருசிற்றிலை அங்கைக்கூட்டிலை என்று பெயர். எடுத்துக்காட்டு: ஜோர்னியா டைஃபில்லா.
iii. முச்சிற்றிலை அங்கைக் கூட்டிலை (Trifoliolate):
இலைக்காம்பில் மூன்றுசிற்றிலைகள் அதற்கு முச்சிற்றிலை அங்கைக் கூட்டிலை என்று பெயர். எடுத்துக்காட்டு: ஏகில் மார்மிலஸ், டிரைஃபோலியம்.
iv. நாற்சிற்றிலை அங்கைக்கூட்டிலை (Quadrifoliate):
இலைக்காம்பில் நான்கு சிற்றிலைகள் அமைந்திருந்தால் அதற்கு நாற்சிற்றிலை அங்கைக் கூட்டிலை என்று பெயர். எடுத்துக்காட்டு: பாரிஸ் குவாட்டிரிஃபோலியா, மார்சீலியா.
v. பல் சிற்றிலை அங்கைக் கூட்டிலை (Multifoliate or Digitate): ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட சிற்றிலைகள் இணைந்து உள்ளங்கையிலிருந்து விரல்கள் அமைந்திருப்பது போல் காணப்படுவதற்கு பல்சிற்றிலை அங்கைக் கூட்டிலை என்று பெயர். எடுத்துக்காட்டு: கிளியோம் பெண்டாஃபில்லா, பாம்பாக்ஸ் சீபா.
6. இலை உருமாற்றம் (Modification of Leaf):
இலையின் மிக முக்கியப்பணி ஒளிச்சேர்க்கையின் மூலம் உணவு தயாரித்தல் ஆகும். சில சிறப்பு பணிகளைச் செய்ய இலையானது உருமாற்றம் அடைகின்றது. அவை கீழே விவரிக்கப்பட்டுள்ளன.
I. இலை பற்றுக்கம்பிகள் (Leaf tendrils):
சில தாவரங்கள் மிகவும் நலிந்த தண்டுகளைக் கொண்டுள்ளதால் இவை ஆதாரத்தைப் பற்றிக் கொள்ள சில சிறப்பு பற்றுருப்புகளைப் பெற்றுள்ளன. எனவே இவ்வகைத் தாவரங்களின் இலைகள் பாதியாகவோ அல்லது முழுமையாகவோ பற்றுக் கம்பிகளாக உருமாறியுள்ளன. பற்றுக்கம்பி என்பது மிக மெலிந்த, சுருள் கம்பி போன்றமைந்து பற்றி ஏற உதவும் ஒரு அமைப்பாகும். சில உருமாற்றமடைந்த இலைப்பற்றுக் கம்பிகள் கீழே தரப்பட்டுள்ளன.
முழு இலை - லத்தைரஸ்; இலையடிச் செதில் - ஸ்மைலாக்ஸ்; நுனிச்சிற்றிலைகள் - நரவேலியா, பைசம்; இலை நுனி - குளோரியோஸா; இலைக்காம்பு - கிளிமாடிஸ்.
II. இலைக் கொக்கிகள் (Leaf hooks):
சில தாவரங்களின் இலைகள் கொக்கி போன்ற அமைப்புகளாக மாறி தாவரங்கள் பற்றி ஏறுவதற்கு உதவுகின்றன. பிக்னோனியா உங்கிஸ்கேட்டி நுனிச்சிற்றிலைகள் மூன்று கூர்மையான, வளைந்த பூனை நகம் போன்ற அமைப்பாக மாறியுள்ளன. இக்கொக்கிகள் மரங்களின் பட்டையை தொற்றிக் கொண்டு ஏறுவதற்குத் துணை செய்கின்றன. அஸ்பராகஸில் (தண்ணீர்விட்டான் கிழங்கு) உருமாற்றம் பெற்ற இலை முட்கள் கொக்கிகளாகச் செயல்படுகின்றன.
III. இலை முட்கள், புறவளரிசிறுமுட்கள் (Leaf spines, Prickles):
சில தாவரங்களின் இலைகள் முட்கள் போன்ற அமைப்பை இலைப்பரப்பின் மீதோ அல்லது இலை விளிம்பிலோ உருவாக்குகின்றன. இந்த முட்கள் மேயும் விலங்குகளிடமிருந்து தப்பிக்கவும், வறண்ட கால நிலைகளைத் தாங்கவும் தோன்றும் தகவமைப்புகளாகும். எடுத்துக்காட்டு: ஜிஜிஃபஸ், ஆர்ஜிமோன் மெக்சிகானா (பிரம்மன் தண்டு), சொலானம் டிரைலோபேட்டம் (தூதுவளை), வறண்ட நிலத்தாவரங்களான ஒபன்ஷியா, யூஃபோர்பியா போன்றவற்றில் இலைகளும் இலையடிச் செதில்களும் முட்களாக உருமாற்றம் அடைந்துள்ளன.
சிறு முட்கள் (Prickles) என்பவை தண்டு அல்லது இலையின் புறத்தோல் திசுவிலிருந்து வெளித் தோன்றுவிகளாக உருவாகும் சிறிய, கூரிய அமைப்புகளாகும். இவை ஆதாரத்தைப் பற்றிப்படர உதவுவதோடு மட்டுமின்றி, மேயும் விலங்குகளிலிடமிருந்தும் தாவரத்தைப் பாதுகாக்கின்றன. எடுத்துக்காட்டு: ரோசா சிற்றினம்.
IV. சேமிக்கும் இலைகள் (Storage Leaves)
உவர் நில மற்றும் வறண்ட நிலத்தில் வாழும் சில தாவரங்களும், கிராசுலேசி குடும்பத்தைச் சார்ந்த சில தாவரங்களும் பொதுவாகச் சதைப்பற்றுடன் கூடிய அல்லது தடித்த இலைகளைக்கொண்டுள்ளன. இந்தச் சதைப்பற்றுள்ள இலைகள் நீரையும், மியூசிலேஜ் அல்லது உணவையும் சேமிக்கின்றன. இவ்வகை இலைகள் வறட்சியைத் தாங்கும் தன்மையைப் பெற்றுள்ளன. எடுத்துக்காட்டு: ஆலோ, அகேவ், பிரையோஃபில்லம்.
V. இலைத்தொழில் காம்பு (Phyllode)
இலைத்தொழில் காம்பு என்பது தட்டையான, பசுமையான இலை போன்று உருமாற்றம் அடைந்த இலைக்காம்பு அல்லது கூட்டிலைக் காம்பாகும். இவற்றில் சிற்றிலைகள் அல்லது இலையின் பரப்பு மிகவும் குறைந்துள்ளது அல்லது உதிர்ந்துவிடுகிறது. இந்த இலைத்தொழில் காம்பானது ஒளிச்சேர்க்கை மற்றும் இலையின் பல்வேறு வேலைகளை மேற்கொள்கின்றது. எடுத்துக்காட்டு: அகேஷியா ஆரிகுலிஃபார்மிஸ் (ஆஸ்திரேலிய அகேஷியா), பார்கின்சோனியா.
VI. குடுவை (Pitcher)
குடுவைத் தாவரத்திலும் (நெப்பந்தஸ்), சர்ரசினியா தாவரத்திலும் இலையானது குடுவை வடிவத்தில் மாறுபாடு அடைந்துள்ளது. நெப்பந்தஸ் தாவரத்தில் இலையின் அடிப்பகுதியானது (இலைக்காம்பு) இலைப்பரப்பாகவும், மைய நரம்பானது சுருள் கம்பி போன்று பற்றுக் கம்பியாகவும், இலையின் மேற்பரப்பானது குடுவையாகவும், இலை நுனியானது குடுவையை மூடும் மூடியாகவும் உருமாற்றமடைந்துள்ளது.
VII. பை (Bladder)
பிளேடர்வார்ட் (யூட்ரிகுலேரியா) ஒரு வேரற்ற, தனித்து மிதக்கும் அல்லது சற்றே மூழ்கி வாழும், மிகவும் பிளவுபட்ட இலைகளையுடைய தாவரமாகும். இந்தப் பிளவுப்பட்ட இலைகளின் சில பகுதிகள் பை போன்று உருமாற்றம் அடைகின்றன. பை போன்ற இந்த அமைப்புகள் நீர் மூலம் உள்ளே செல்லும் சிறு உயிரினங்களைப் பிடித்து உண்ணுகின்றன.
VIII. பூவிலைகள் (Floral leaves)
பூவிதழ்களான அல்லிவட்டம், புல்லிவட்டம், மகரந்தத்தாள் வட்டம், சூலக வட்டம் ஆகியவை அனைத்தும் இலையின் உருமாற்றங்களே ஆகும். துணைவட்டங்களாகக் கருதப்படும் அல்லிவட்டமும், புல்லிவட்டமும் இலையைப் போன்று தோற்றமளிக்கின்றன. இவற்றின் பணி பாதுகாத்தலாகும். இதில் அல்லிவட்டம் மகரந்தச் சேர்க்கைக்குப் பூச்சிகளைக் கவர்வதற்கேற்றவாறு பலவண்ணங்களில் காணப்படுகிறது. மகரந்தத்தூள்களைக் கொண்டுள்ள மகரந்தத்தாள் வட்டம் சிறுவித்தக இலை (மைக்ரோஸ்போரோஃபில்) என்றும், சூலிலைகளைக் கொண்டுள்ள சூலக வட்டம் பெரு வித்தக இலை (மெகாஸ்போரோஃபில்) என்றும் அழைக்கப்படும்.
7. இலையின் வாழ்நாள் (Leaf duration):
இலைகள் பெரும்பாலும் தாவரங்களில் தங்கியிருத்தல் மற்றும் அதன் பணிகளைப் பொறுத்து சில நாட்கள் முதல் பல வருடங்கள் வரை வாழும். இவை பெரும்பாலும் சூழ்நிலை காரணங்களின் தகவமைப்பினால் நிர்ணயிக்கப்படுகின்றன.
உடன் உதிர்பவை (Cauducous - Fagacious)
இவற்றில் இலைகள் உருவான உடனே உதிர்ந்துவிடும். எடுத்துக்காட்டு : ஒபன்ஷியா, சிஸ்சஸ் குவாட்டிராங்குலாரிஸ்.
முதிர் உதிர்பவை (Deciduous)
இவற்றில் இலைகள் வளரும் பருவத்தின் முடிவில் முதிர்ந்து உதிர்ந்துவிடுகின்றன. மரமோ, செடியோ குளிர்காலத்திலோ அல்லது கோடைகாலத்திலோ இலைகளற்றதாகக் காணப்படும். எடுத்துக்காட்டு: மாப்பில், புளுமேரியா, லானியா, எரித்ரினா.
பசுமை மாறாதவை (Evergreen):
இலைகள் சீரான இடைவெளிகளில் உதிர்வதால் இத்தாவரங்களில் இலைகள் எப்பொழுதும் நிலைத்திருக்கும். எனவே தாவரம் முழுவதுமாக இலையற்றுக் காணப்படுவதில்லை. எடுத்துக்காட்டு: மைமூசாப்ஸ், கேலோஃபில்லம்.
உதிரா இலைகள் (Marcescent):
ஃபேகேசி குடும்பத் தாவரங்களில் இலைகள் உலர்ந்து உதிராமல் தாவரத்திலேயே இருக்கும்.