தாவரவியல் - தரைகீழ்த் தண்டின் உருமாற்றம் | 11th Botany : Chapter 3 : Vegetative Morphology of Angiosperm
தரைகீழ்த் தண்டின் உருமாற்றம் (Underground stem modifications)
பல்பருவ அல்லது இருபருவச் செடிகள் தரைகீழ் தண்டுகளைப் பெற்றிருக்கும். இவற்றை வேர் முனைத் தண்டு என்று அழைப்பர். வேர்முனைத் தண்டானது சேமிப்பு மற்றும் பாதுகாப்பு உறுப்பாகச் செயல்படுகிறது. இத்தண்டு சாதகமற்ற சூழ்நிலைகளில் பூமியின் கீழ் உயிருடன் இருக்கும். பின் சாதகமான சூழ்நிலைகளில் மீண்டும் வளரும். தரைகீழ் தண்டுகள் கணுக்கள், கணுவிடைப் பகுதிகள், செதில் இலைகள் மற்றும் மொட்டுகளைக் கொண்டிருப்பதால் இவை வேர்கள் அல்ல. வேர்முனைத் தண்டில் வேர் மூடியும், வேர்த் தூவியும் இல்லாமல் நுனி மொட்டுகளைப் பெற்றிருப்பத்தால் அவை தண்டாகவே கருதப்படும்.
1. குமிழம் (Bulb)
இவை சதைப்பற்றுள்ள செதில் இலைகளால் சூழப்பட்ட குறுக்கப்பட்ட கூம்பு அல்லது குவிந்த வடிவமுடைய தரைகீழ் தண்டாகும். இவை இரண்டு வகைப்படும்.
i. உறையுடை குமிழ்தண்டு (Tunicated (coated) bulb); இவ்வகையில் தண்டானது மிகவும் குறுகியும், வளையம் போன்ற பல அடுக்குகளாலான செதில் இலைகளாலும் சூழப்பட்டிருக்கும். இவை இரண்டு வகைப்படும்.
அ) சாதாரண உறையுடைய குமிழம் எடுத்துக்காட்டு:
அலியம் சீபா (வெங்காயம்).
ஆ) கூட்டு உறையுடைய குமிழம். எடுத்துக்காட்டு: அலியம் சட்டைவம் (பூண்டு).
2. கந்தம் (Corm)
இவை நேராக வளரும் நுனியைக் கொண்ட சதைப்பற்றுள்ள தரைகீழ் தண்டாகும். கந்தமானது செதில் இலைகளால் சூழப்பட்டு, கணுக்களையும் கணுவிடைப் பகுதிகளையும் கொண்டிருக்கும். எடுத்துக்காட்டு: அமார்ஃபோஃபேலஸ், கொலகேசியா, கால்சிகம்.
3. மட்டநிலத்தண்டு (Rhizome)
இவை கிடைமட்டமாக வளரும் பல பக்கவாட்டு வளர் நுனிகளைக் கொண்ட தரைகீழ் தண்டாகும். இவை செதில் இலைகளால் சூழப்பட்ட மிகத் தெளிவாகத் தெரியும் கணுக்களையும், கணுவிடைப் பகுதிகளையும் கொண்டுள்ளன. எடுத்துக்காட்டு: ஜிஞ்ஜிஃபெர் அஃபிசினாலே, கேனா, குர்குமா லாங்கா, மியூஸா.
4. கிழங்கு (Tuber)
இவை சதைப்பற்றுடைய கோள அல்லது உருளை வடிவம் கொண்ட தரைகீழ்
தண்டாகும். இவற்றில் பல கோண மொட்டுகள் அமிழ்ந்து காணப்படுகின்றன. இக்கோண மொட்டுகளுக்கு
‘கண்கள்’ என்று பெயர். எடுத்துக்காட்டு: சொலானம்
டியூபரோசம் (உருளைக்கிழங்கு), ஹீலியாந்தஸ்
டியூபரோசஸ்.