தாவரவியல் - தரை ஒட்டியதண்டின் உருமாற்றம் | 11th Botany : Chapter 3 : Vegetative Morphology of Angiosperm
தரை ஒட்டியதண்டின் உருமாற்றம் (Sub aerial stem modification)
மெல்லிய தண்டுடைய தாவரங்களின் தரைமேல் படரும் தண்டிலிருந்து பலகிளைகள் கிடைமட்டமாக வளரும். இக்கிளைகள் உடல இனப்பெருக்கத்திற்கானவை. இவை தரை ஒட்டியோ பகுதி புதைந்தோ காணப்படும்.
1. ஓடுதண்டு (Runner)
இவைமெல்லிய, கணுக்களில் வேர்விடும் கிடைமட்டக் கிளைகளாகும். எடுத்துக்காட்டு: சென்டெல்லா, சைனோடான் டாக்டைலான்.
2. ஸ்டோலன் (Stolon)
இதுவும் மெல்லிய, பக்கவாட்டுக் கிளையாகத் தண்டின் அடிப்பகுதியிலிருந்து தோன்றுகிறது. முதலில் இது சாய்வாக மேல்நோக்கி வளர்ந்து பின்னர் வளைந்து, தரையை நோக்கி வளர்கிறது. தரையைத் தொட்டவுடன் வேர்களைத் தோற்றுவித்து தனித்த சிறு தாவரமாக உருவாகிறது. எடுத்துக்காட்டு: மென்தா பைபெரிடா (புதினா),
ஃபிரகேரியா இண்டிகா (காட்டு ஸ்ட்ராபெர்ரி)
3. தரைகீழ் உந்து தண்டு (Sucker)
இது தரைகீழ்த் தண்டிலிருந்து தோன்றி சாய்வாக மேல்நோக்கி
வளர்ந்து, தனித்த சிறு தாவரமாக உருவாகிறது. எடுத்துக்காட்டு: கிரைசாந்திமம் (சாமந்தி), பாம்புசா
(மூங்கில்).
4. நீர் ஓடுதண்டு (Offset)
இவை ஓடுதண்டைப் போன்றவையே. ஆனால் இத்தகைய தண்டு நீர்வாழ் தாவரங்களில், குறிப்பாக வட்ட அடுக்கு இலைகளைக் கொண்ட தாவரங்களில் காணப்படுகின்ற அமைப்பாகும். இது கீழ் கக்கத்திலிருந்து தோன்றும் சிறிய, தடித்த இலைகளற்று சிறிது தூரம் கிடைமட்டமாக வளரும் தண்டாகும். பின்னர் இத்தண்டின் கணுவிலிருந்து வட்ட அடுக்கு இலைகளும், வேர்களும் உருவாகும். எடுத்துக்காட்டு : ஐக்கோர்னியா (வெங்காயத் தாமரை), பிஸ்டியா (ஆகாயத் தாமரை).