தாவரவியல் - ஆணிவேர் உருமாற்றம் | 11th Botany : Chapter 3 : Vegetative Morphology of Angiosperm

ஆணிவேர் உருமாற்றம் (Tap root modification)
அ. சேமிப்பு வேர்கள் (Storage roots)
1. கூம்பு வடிவ வேர்கள் : கூம்பு வடிவம் கொண்ட இவ்வேர்கள் அடிப்பகுதியில் அகன்றும், நுனி நோக்கிக் குறுகியும் காணப்படும். எடுத்துக்காட்டு: டாக்கஸ் கரோட்டா (கேரட்).
2. இருமுனைக் கூர் வடிவ வேர்கள் : இவ்வேர்கள் நடுவில் பருத்தும், இருமுனைகளை நோக்கி கூர்ந்தும் காணப்படும். எடுத்துக்காட்டு: ரஃபானஸ் சட்டைவஸ் (முள்ளங்கி).
3. பம்பர வடிவ வேர்கள் : இவற்றில் மேல்பகுதி மிகப்பருத்து நுனியில் திடீரென வால்போல் குறுகியிருக்கும். எடுத்துக்காட்டு: பீட்டா வல்காரிஸ் (பீட்ரூட்).
ஆ. சுவாச வேர்கள் (Respiratory roots)
நீர் நிரம்பிய சதுப்பு நிலங்களில் காற்றோட்டம் மிகக்
குறைவாக இருக்கும். இவ்வகைச் சூழலில் வளரும் அலையாத்திக் காட்டுத்தாவரங்களான அவிசென்னியா,
ரைசோஃபோரா புருகீரா போன்றவை சுவாசத்திற்காக எதிர்புவிநாட்டமுடைய சிறப்பு வேர்களை
உருவாக்குகின்றன. இச்சுவாச வேர்கள் வளிமாற்றத்திற்கு ஏதுவாக அதிக எண்ணிக்கையிலான சுவாசத் துளைகளைக் கொண்டிருக்கும்.
