வகை | தாவரவியல் - நரம்பமைவு | 11th Botany : Chapter 3 : Vegetative Morphology of Angiosperm

   Posted On :  06.07.2022 12:31 am

11 வது தாவரவியல் : அலகு 3 : உடலப் புற அமைப்பியல்

நரம்பமைவு

இலைத்தாள் அல்லது இலைப்பரப்பில் நரம்புகளும், கிளை நரம்புகளும் அமைந்திருக்கும் முறைக்கு நரம்பமைவு என்று பெயர்.

நரம்பமைவு (Venation)

இலைத்தாள் அல்லது இலைப்பரப்பில் நரம்புகளும், கிளை நரம்புகளும் அமைந்திருக்கும் முறைக்கு நரம்பமைவு என்று பெயர். உள்ளமைப்பில் நரம்புகள் வாஸ்குலத் திசுக்களைப் பெற்றுள்ளன.

வழக்கமாக நரம்பமைவு இரண்டு வகையாக வகைப்படுத்தப்படும். அவை முறையே வலைப்பின்னல் நரம்பமைவு, இணைப்போக்கு நரம்பமைவு ஆகும்.


I. வலைப்பின்னல் நரம்பமைவு (Reticulate venation)

இதில் மையத்தில் ஒரு தெளிவான மைய நரம்பும், அதிலிருந்து தோன்றும் பல சிறிய இரண்டாம் நிலை நரம்புகளும் உள்ளன. இவை அனைத்தும் சேர்ந்து இலைப்பரப்பில் ஒரு வலைப்பின்னலை ஏற்படுத்துகின்றன. பொதுவாக இந்த வகையான நரம்பமைவை அனைத்து இருவிதையிலைத் தாவரங்களிலும் காணலாம். இது இரண்டு வகைப்படும்.

1. சிறகு வடிவ வலைப்பின்னல் நரம்பமைவு - ஒரு நடு நரம்ப மைவு (Pinnately reticulate venation - unicostate)

இதில் மையத்தில் ஒரே ஒரு மைய நரம்பு மட்டுமே உள்ளது. இம்மைய நரம்பிலிருந்து பல கிளை நரம்புகள் தோன்றி ஒரு வலைப்பின்னலை ஏற்படுத்துகின்றன. எடுத்துக்காட்டு : மாஞ்சிஃபெரா இண்டிகா.

2. அங்கை வடிவ வலைப்பின்னல் நரம்பமைவு - பல நடு நரம்ப மைவு (Palmate Reticulate venation - multicostate)

 

இதில் இரண்டு அல்லது பல மைய நரம்புகள் ஒரு புள்ளியிலிருந்து தோன்றி, இலையின் வெளிப்புறமாகவோ அல்லது மேற்புறமாகவோ செல்லும். அங்கை வடிவ வலைப்பின்னல் நரம்பமைவு மேலும் இரண்டு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

i. விரி நரம்பமைவு வகை (Divergent): இவ்வகை நரம்பமைவில் அனைத்து மைய நரம்புகளும் அடிப்பகுதியிலிருந்து தோன்றி இலையின் விளிம்பு வரை விரிந்து செல்கின்றன. எடுத்துக்காட்டு: காரிக்கா பப்பாயா (பப்பாளி).

ii. குவி நரம்பமைவு வகை (Convergent): இவ்வகை நரம்பமைவில் அனைத்து நரம்புகளும் இலையின் நுனிப்பகுதியில் குவிகின்றன. எடுத்துக்காட்டு: ஜிஜீஃபஸ் (இலந்தை), சின்னமோமம் (பிரிஞ்சி இலை).


II. இணைப்போக்கு நரம்பமைவு (Parallel venation)

இவ்வகை நரம்பமைவில் அனைத்து நரம்புகளும் ஒன்றுக்கொன்று இணையாகச் செல்கின்றன. மேலும் இங்கு தெளிவான வலைபின்னல் அமைப்பு தோன்றுவதில்லை. இவ்வகை நரம்பமைவு ஒருவிதையிலைத் தாவரஇலைகளின் சிறப்பமைவாகும். இதை இரண்டு துணை வகைகளாகப் பிரிக்கலாம்.

1. சிறகு வடிவ இணைப்போக்கு நரம்பமைவு - ஓர் நடு நரம்ப மைவு (Pinnately parallel venation - Unicostate)

இவ்வகை நரம்பமைவில் நடுவில் ஒரு தெளிவான மைய நரம்பு உள்ளது. இதிலிருந்து செங்குத்தாகவும், இணையாகவும் செல்லும் பல நரம்புகள் தோன்றுகின்றன. எடுத்துக்காட்டு: மியூசா, இஞ்சி.

 

2. அங்கை வடிவ இணைப்போக்கு நரம்பமைவு - பல நடு நரம்ப மைவு (Palmate parallel venation - Multicostate)

இவ்வகை நரம்பமைவில் காம்பின் நுனியிலிருந்து (இலைப்பரப்பின் அடியிலிருந்து) பல நரம்புகள் தோன்றி, பின் ஒன்றுக்கொன்று இணையாகச் சென்று நுனியில் கூடுகின்றன. இவை இரண்டு வகைப்படும்.

i. விரி நரம்பமைவு வகை (Divergent): இவ்வகை நரம்பமைவில் அனைத்து முக்கிய நரம்புகளும் இலைப்பரப்பின் அடியிலிருந்து உருவாகி விளிம்பை நோக்கி விரிகின்றன. எடுத்துக்காட்டு: பொராஸஸ் ஃபிளாபெல்லிஃபர்.

ii. குவி நரம்பமைவு வகை (Convergent type): இவ்வகை நரம்பமைவில் அனைத்து முக்கிய நரம்புகளும் இலைப்பரப்பின் அடியிலிருந்து உருவாகி, இணையாகச் சென்று நுனியில் குவிகின்றன. எடுத்துக்காட்டு : மூங்கில், நெல், வெங்காயத்தாமரை.


Tags : Leaf | Botany வகை | தாவரவியல்.
11th Botany : Chapter 3 : Vegetative Morphology of Angiosperm : Venation and its Types Leaf | Botany in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது தாவரவியல் : அலகு 3 : உடலப் புற அமைப்பியல் : நரம்பமைவு - வகை | தாவரவியல் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது தாவரவியல் : அலகு 3 : உடலப் புற அமைப்பியல்