பிரௌனியன் இயக்கம்
1827ஆம் ஆண்டு இராபர்ட் பிரௌன் என்ற தாவரவியல் அறிஞர் திரவப்பரப்பிலுள்ள மகரந்தத்துகள்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு ஒழுங்கற்று இயங்குகின்றன எனக் கண்டறிந்தார். திரவப்பரப்பிலுள்ள இந்த மகரந்தத் துகள்களின் ஒழுங்கற்ற (குறுக்கு - நெடுக்கான) இயக்கம் பிரௌனியன் இயக்கம் எனப்படும். நீர்ப்பரப்பிலுள்ள தூசுத்துகள்களின் ஒழுங்கற்ற இயக்கத்தை நாம் சாதாரணமாகக் காணலாம். இக்கண்டுபிடிப்பு நெடுங்காலமாக ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு புரியாத புதிராகவே இருந்து வந்தது. மகரந்தத் துகள்களின் ஒழுங்கற்ற இயக்கத்தை விளக்குவதற்கு பல்வேறு விளக்கங்களை அறிவியல் அறிஞர்கள் எடுத்துரைத்தாலும், எந்த ஒரு விளக்கமும் இதனை முழுமையாக விளக்கவில்லை. முறையான ஆய்வுகளுக்குப் பின்பு, வீனர் மற்றும் ஃகோய் (Wiener and Gouy) என்ற இரு அறிஞர்கள் பிரௌனியன் இயக்கத்திற்கான உரிய விளக்கத்தினை கொடுத்தனர். இவ்விளக்கத்தின்படி திரவப்பரப்பிலுள்ள துகள்களின் மீது, அதனைச் சூழ்ந்துள்ள திரவ மூலக்கூறுகள் தொடர்ந்து மோதுவதால் அத்துகள்கள் ஒழுங்கற்ற இயக்கத்தை மேற்கொள்கின்றன. ஆனால் 19ஆம் நூற்றாண்டு மக்களால் அனைத்து பொருட்களும் அணுக்களால் அல்லது மூலக்கூறுகளால் ஆக்கப்பட்டுள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 1905 ஆம் ஆண்டு ஐன்ஸ்டீன் வாயுக்களின் இயக்கவியற் கொள்கையின் அடிப்படையில் பிரௌனியன் இயக்கத்திற்கான முறையான கொள்கை விளக்கத்தைக் கொடுத்தார். இக்கொள்கையிலிருந்து மூலக்கூறு ஒன்றின் சராசரி அளவினைக் கணக்கிட்டார்.
இயக்கவியல் கொள்கையின்படி, திரவம் அல்லது வாயுவில் மிதந்து கொண்டிருக்கும் எந்த ஒரு துகளும் அனைத்து திசைகளிலிருந்தும் தொடர்ந்து தாக்கப்படும். எனவே சராசரி மோதலிடைத்தூரம் கிட்டத்தட்ட புறக்கணிக்கப்படும். இதன் விளைவாக படம் (9.9) இல் காட்டியுள்ளவாறு துகள்கள் ஒழுங்கற்ற மற்றும் குறுக்கு நெடுக்கான இயக்கத்தை மேற்கொள்ளும் ஆனால் நம் விரல்களை நீர்ப்பரப்பில் வைக்கும் போது இவ்வகையான இயக்கம் ஏற்படுவதில்லை ஏனெனில், நமது விரல்களின் நிறை நீர் மூலக்கூறுகளுடன் ஒப்பிடும்போது மிக அதிகம். எனவே மூலக்கூறு மோதல்களில் ஏற்படும் உந்தப்பரிமாற்றம் விரல்களை நகர்த்துவதுற்கு போதுமானதல்ல.
பிரௌனியன் இயக்கத்தைப் பாதிக்கும் காரணிகள்
1. வெப்பநிலை உயரும்போது பிரௌனியன் இயக்கமும் அதிகரிக்கும்.
2. திரவம் அல்லது வாயுத் துகள்களின் பருமன் அதிகரிக்கும்போதும், உயர் பாகியல் தன்மை மற்றும் அடர்த்தி காரணமாகவும் பிரௌனியன் இயக்கம் குறையும்.
குறிப்பு
பிரௌனியன் இயக்கம் பற்றிய ஐன்ஸ்டீனின் கொள்கை விளக்கத்திற்கான சோதனை முடிவுகளை 1908 ஆம் ஆண்டு ஜீன் பெரின் (Jean Perrin) என்ற அறிவியல் அறிஞர் வெளியிட்டார். பிரௌனியன் இயக்கம் பற்றிய ஐன்ஸ்டீனின் கொள்கை விளக்கங்கள் மற்றும் ஜீன் பெரினின் சோதனை முடிவுகளும் இயற்பியல் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். ஏனெனில், அணுக்கள் மற்றும் மூலக்கூறுகள் இருப்பதற்கான நேரடிச் சான்றாக இவைகள் உள்ளன.