நுகர்வு பகுப்பாய்வு | பொருளாதாரம் - மனித விருப்பங்களின் பண்புகள் | 11th Economics : Chapter 2 : Consumption Analysis
மனித விருப்பங்களின் பண்புகள்
அ) விருப்பங்கள் எண்ணற்றவை
மனித விருப்பங்கள் எண்ணிலடங்காதவை மற்றும் பல வகையானவை. ஒரு விருப்பம் நிறைவடையும் போது மற்றொரு விருப்பம் தோன்றும். வளர்ச்சியும் நாகரிகமும் வளர வளர மனித விருப்பங்கள் பல்கிப் பெருகும்.
ஆ) விருப்பங்கள் பழக்க வழக்கங்களாக மாறும்
விருப்பங்கள் பழக்கங்களாகவும், வழக்கங்களாகவும் மாறும். எடுத்துக்காட்டாக காலையில் நாளிதழ் படிக்கின்ற மனிதனின் விருப்பம் பழக்கமாக மாறிவிடுகிறது. தேனீர் அருந்துதல் மற்றும் வெற்றிலை மெல்லுதல் போன்றவையும் இவ்வாறே பழக்கமாக மாறிவிடுகின்றன.
இ) விருப்பங்கள் நிறைவேறக் கூடியவை
நாம் நம்முடைய அனைத்து விருப்பங்களையும் நிறைவு செய்ய இயலாது. ஆனால் நாம் குறிப்பிட்ட விருப்பங்களை குறித்த நேரத்தில் நிறைவு செய்ய இயலும். ஒருவருக்கு பசியெடுக்கும்போது அவர் உணவு உண்பதால் அந்த விருப்பம் நிறைவடைகிறது.
ஈ) விருப்பங்கள் மாற்றுப் பொருளால் நிறைவு பெறுபவை
ஒரு விருப்பத்தை வெவ்வேறு வழிகளில் நிறைவேற்றிக் கொள்ளலாம். (உ.ம்.) இட்லி, தோசை, சப்பாத்தி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைக்கொண்டு உணவு உண்ணும் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம்.
உ) விருப்பங்கள் போட்டியிடுபவை
நமது அனைத்து விருப்பங்களும் சமமான முக்கியத்துவம் பெற்றவை அல்ல. ஆகவே விருப்பங்களிடையே போட்டி ஏற்படுகின்றது. ஆதலால் குறைந்த தீவிரமுடைய விருப்பத்தைக் காட்டிலும் அதிக தீவிரம் உடைய விருப்பத்தையே நாம் முதலில் தேர்ந்தெடுக்கிறோம்.
ஊ) விருப்பங்கள் ஒன்றை ஒன்று சார்ந்துள்ளன
சில நேரங்களில் குறிப்பிட்ட ஒரு விருப்பத்தை நிறைவு செய்ய ஒன்றுக்கு மேற்பட்ட பண்டங்கள் பயன்படுகின்றன. (உ.ம்.) மகிழ்வுந்தும் பெட்ரோலும், பேனாவும் மையும்.
எ) விருப்பங்கள் மீளத் தோன்றுபவை
சில விருப்பங்கள் மீண்டும், மீண்டும் தோன்றக்கூடியவை. (உ.ம்) நமக்கு பசியெடுக்கும்போது உணவு உண்டால் விருப்பம் நிறைவேறுகிறது. ஆனால் சில மணி நேரங்களில் நமக்கு மீண்டும் பசியெடுக்கிறது. மீண்டும் உணவு உண்ணும் விருப்பம் தோன்றுகிறது.