Home | 11 ஆம் வகுப்பு | 11வது பொருளாதாரம் | குறையும் விளிம்பு பயன்பாட்டுச் சட்டம் (DMU)

பொருளாதாரம் - குறையும் விளிம்பு பயன்பாட்டுச் சட்டம் (DMU) | 11th Economics : Chapter 2 : Consumption Analysis

   Posted On :  26.07.2022 04:24 am

11வது பொருளாதாரம் : அத்தியாயம் 2 : நுகர்வு பகுப்பாய்வு

குறையும் விளிம்பு பயன்பாட்டுச் சட்டம் (DMU)

இவ்விதி மனித விருப்பங்களின் பண்பான விருப்பங்கள் நிறைவேறக்கூடியவை என்பதனை அடிப்படையாகக் கொண்டது.

எண்ணளவை பயன்பாட்டு ஆய்வு


குறைந்து செல் இறுதிநிலைப் பயன்பாட்டு விதி 

அறிமுகம்

ஆஸ்திரிய பொருளியல் வல்லுநரான H.H.காசன் (Gossen) என்பவர் இவ்விதியை 1854ல் பொருளியலில் முதன்முதலாக உருவாக்கினார். எனவே ஜெவான்ஸ் இவ்விதியை 'காசனின் முதல் நுகர்வு விதி' என அழைத்தார். ஆனால் மார்ஷல் இவ்விதியை புகழடையச் செய்தார். ஏனெனில் இவ்விதியை எண்ணளவு ஆய்வின் அடிப்படையில் சரியாக முறைப்படுத்தினார். இவ்விதி மனித விருப்பங்களின் பண்பான விருப்பங்கள் நிறைவேறக்கூடியவை என்பதனை அடிப்படையாகக் கொண்டது


இலக்கணம்

ஒருவரிடம் உள்ள ஒரு பண்டத்தின் இருப்பு கூடுகின்றபொழுது ஒவ்வொரு கூடுதல் அலகிலிருந்தும் கிடைக்கும் பயன்பாடு குறைகிறது' என்று மார்ஷல் இவ்விதியை வரையறை செய்கிறார்.


அனுமானங்கள்

1. பயன்பாடு எண்ணளவையில் அளவிடப்பட வேண்டும். (உ.ம்) 1, 2, 3 ...... இவை போல. 

2. பணத்தின் இறுதிநிலைப் பயன்பாடு மாறாது இருக்க வேண்டும். 

3. நுகர்வோர் பகுத்தறிவாளராக இருக்க வேண்டும். மேலும் செலவைக் குறைப்பவராகவும் திருப்தியை அதிகப்படுத்துபவராகவும் இருக்க வேண்டும். 

4. நுகரப்படும் பண்ட அளவு ஒரே சீரானதாக இருக்க வேண்டும். 

5. நுகரப்படும் பண்டத்தின் எல்லா அளவுகளும் ஒத்த தன்மை கொண்டவை. (உ.ம்) எடை, தரம், சுவை, நிறம் போன்றவை. 

6. பண்டங்களை நுகரும் போது கால இடைவெளியின்றி தொடர்ந்து நுகர வேண்டும்.

7. நுகரும் காலத்தில் நுகர்வோரது சுவைக்கும் பாங்கு, பழக்க வழக்கங்கள், தெரிவுகள், நாகரிகங்கள், வருமானம் மற்றும் நுகர்வோரின் குணாதிசயங்கள் மாறாது இருக்க வேண்டும்.  



விளக்கம்

ஒரு நுகர்வோர் ஒரே பண்டத்தைதொடர்ந்து கால இடைவெளியின்றி தொடர்ச்சியாக நுகரும்போது ஒவ்வொரு கூடுதல் பொருளிலிருந்து கிடைக்கிற பயன்பாடு (இறுதிநிலைப் பயன்பாடு) குறைந்து செல்லும் என்று இவ்விதி விளக்குகிறது. அதாவது பண்டங்களின் கையிருப்பு அதிகரிக்கும்போது கூடுதல் பண்டங்களில் இருந்து பெறும் பயன்பாடு குறைந்துகொண்டு செல்லும். 


எடுத்துக்காட்டு – விளக்கம்

ஓர் எளிய எடுத்துக்காட்டின் மூலம் இவ்விதியை விளக்கலாம். ஒரு நுகர்வோர் 7 ஆப்பிள்களை ஒன்றன்பின் ஒன்றாக நுகர விரும்புகிறார். முதல் ஆப்பிளில் இருந்து அவர் பெற்ற பயன்பாடு 20 அலகுகள். ஆனால் இரண்டாவது ஆப்பிளில் இருந்து பெற்ற பயன்பாடானது முதல் ஆப்பிளை விட குறைவானதாகும் (15 அலகுகள்). மூன்றாவது பண்டத்திலிருந்து கிடைக்கும் பயன்பாடு இரண்டாவது ஆப்பிள் பயன்பாட்டை விடக் குறைவு (10 அலகுகள்). மேலும் ஐந்தாவது ஆப்பிளில் இருந்து அவர் பெற்ற பயன்பாடு பூஜ்ஜியம் ஆகும். மேலும் ஆறாவது, ஏழாவது ஆப்பிள்களை நுகர்ந்தால் அவர் பெறுவது எதிர்மறைப் பயன்பாடாகும். (விருப்பமில்லா நிலை அல்லது திகட்டும் நிலை). இந்தப் போக்கை கூறுவதே குறைந்து செல் இறுதிநிலை பயன்பாட்டு விதி ஆகும். கீழ்க்கண்ட அட்டவணை 2.1 இதை விளக்குகிறது

அட்டவணை 2.1ல் மொத்த பயன்பாடு உயர்ந்து செல்வதை நாம் பார்க்க முடிகிறது. மொத்த பயன்பாடு குறைந்து செல் விகிதத்தில் உயர்ந்து செல்வதைக் காணலாம். இறுதி நிலை பயன்பாடு பூஜ்ஜியமாக இருக்கும்போது மொத்த பயன்பாடு உச்ச நிலையை அடைகிறது. மேலும் இறுதி நிலை பயன்பாடு எதிர்மறையில் உள்ளபோது, மொத்த பயன்பாடு குறைகிறது.


குறைபாடுகள் 

1. பயன்பாட்டை எண்ணளவைகளில் அளவிட முடியாது. ஏனெனில் பயன்பாடு என்பது உள்ளுணர்வு சார்ந்தது.

2. இவ்விதி உண்மைக்கு மாறான அனுமானங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது. 

3. பகுக்க முடியாத பண்டங்களுக்கு  இவ்விதி பொருந்தாது. 


இவ்விதியின் விதிவிலக்குகள் 

1. பொழுதுபோக்குகள் 

2. குடிப்பழக்கமுள்ளவர்கள் 

3. கருமிகள்

4. இசை வல்லுநர்கள் மற்றும் கவிஞர்கள்

5. வாசித்தல் 


இவ்விதியின் முக்கியத்துவம் அல்லது நடைமுறைப் பயன்கள்

1. இவ்விதி நுகர்வு சார்ந்த விதிகளுக்கு அடிப்படையாக உள்ளது. பல்வேறு ஆய்வுகளுக்கு இவ்விதி பயன்படுகின்றது. 

2. தேவை விதி, தேவை நெகிழ்ச்சி, நுகர்வோர் உபரி மற்றும் பதிலீட்டு விதி போன்ற பல்வேறு நுகர்வு சார்ந்த விதிகளுக்கு குறைந்து செல் இறுதிநிலைப் பயன்பாட்டு விதி அடிப்படை விதியாக உள்ளது.

3. நிதி அமைச்சர் அதிக பணம் படைத்தவர்களுக்கு அதிக விகித வரியையும், குறைந்த பணம் கொண்டவர்களுக்கு குறைந்த விகித வரியையும் விதிக்கிறார். ஒரு மனிதரின் வருவாய் உயரும்பொழுது வரிவிகிதமும் அதிகரிக்கிறது. ஒருவருக்கு வருவாய் உயர்வதால், உயர்ந்த வருமானத்தில் இருந்து பெறும் இறுதி நிலைப் பயன்பாடு குறையும். இதன் மூலம் குறைந்து செல் இறுதிநிலைப் பயன்பாட்டு விதி வளர் விகித வரிவிதிப்பு முறைக்கு அடிப்படையாக அமைந்து உள்ளது.

4. இவ்விதி செல்வப் பகிர்வில் சமத்துவத்தை வலியுறுத்துகிறது. உயர் வருமானம் பெறுவோர்க்கு பணத்தின் இறுதி நிலைப் பயன்பாடு குறைவாக இருக்கும். எனவே, செல்வந்தர்களின் மேல் அதிக வரிவிதித்து கிடைத்த வருவாயை ஏழை மக்களின் கல்விக்காக செலவு செய்யலாம். இதனால் செல்வந்தரின் பயன்பாட்டு இழப்பை விட ஏழைமக்களின் பயன்பாட்டு அதிகரிப்பு அதிகமாக இருக்கும். இவ்வாறாக சமூக நீதியை நிலைநாட்ட இவ்விதி உதவுகிறது. 

5. ஆடம்ஸ்மித் தன்னுடைய புகழ்பெற்ற 'வைர - தண்ணீர் முரண்பாட்டுக் கோட்பாட்டை’ (Diamond-Water Paradox) விளக்குகிறார். பற்றாக்குறை காரணமாக வைரத்தின் விலை அதிகம். ஆனால் அதன் பயன்பாடு குறைவு. தண்ணீர் இன்றியமையாதது ஆனால் அதிக அளவில் கிடைக்கின்றது. அதன் விலையை வைரத்தின் விலையோடு ஒப்பிட்டால் தண்ணீர் விலை குறைவானது.



Tags : Economics பொருளாதாரம்.
11th Economics : Chapter 2 : Consumption Analysis : The Law of Diminishing Marginal Utility (DMU) Economics in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது பொருளாதாரம் : அத்தியாயம் 2 : நுகர்வு பகுப்பாய்வு : குறையும் விளிம்பு பயன்பாட்டுச் சட்டம் (DMU) - பொருளாதாரம் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது பொருளாதாரம் : அத்தியாயம் 2 : நுகர்வு பகுப்பாய்வு