பொருளாதாரம் - தேவை விதி | 11th Economics : Chapter 2 : Consumption Analysis

   Posted On :  26.07.2022 07:40 pm

11வது பொருளாதாரம் : அத்தியாயம் 2 : நுகர்வு பகுப்பாய்வு

தேவை விதி

பொருளாதாரத்தில் தேவை என்பது நல்ல தேவைக்கு பணம் செலுத்துவதற்கு போதுமான பணத்தால் ஆதரிக்கப்படும் ஆசை.

தேவை விதி

ஒரு நிறுவனம் உருவாக்குவதற்கும், நீடித்திருப்பதற்கும், இலாபம் பெறுவதற்கும் தேவை அடிப்படையாகும். பொருளியலில் ஒரு பொருளுக்கான தேவை என்பது 'பொருளை வாங்குவதற்கான விருப்பத்தையும், போதிய வாங்கும் சக்தியையும், வாங்கிவிட வேண்டும் என்ற எண்ணத்தையும் குறிக்கும்' என்கிறார் ஜே.ஹார்வி.

பொருளியலில் 'தேவை என்பது பண்டத்தை வாங்கும் திறனுடன் கூடிய விருப்பத்தை குறிக்கிறது' என ஸ்டோனியர் மற்றும் ஹேக் (Stonier and Hague) விளக்குகின்றனர்.

1. தேவையின் பண்புகள்

விலை : தேவை எப்போதும் விலையுடன் சார்ந்துள்ளது. 

காலம் : தேவை என்பது ஒரு குறிப்பிட்ட பொருளுக்கான, குறிப்பிட்ட நாள், குறிப்பிட்ட வாரம், குறிப்பிட்ட மாதம், குறிப்பிட்ட வருடத்திற்கானது. 

சந்தை : தேவை என்பது விற்பவர், வாங்குபவர்கள் கூடிய சந்தையைச் சார்ந்துள்ளது. 

அளவு : தேவை என்பது நுகர்வோர் வாங்க விரும்பும் அளவாகும்.


2. தேவைச் சார்பு

தேவை விலையைச் சார்ந்துள்ளது. அதாவது ஒரு பண்டத்தின் தேவையானது அந்தப் பண்டத்தின் விலையோடு தொடர்புடையது. தேவைச் சார்பை கணிதக் குறியீட்டின் படி கீழ்க்கண்டவாறு குறிக்கலாம்.

D = f (P)

இதில், D = தேவை, f = சார்பு, P = விலை


3. தேவை விதி

தேவை விதியை முதலில் 1838ல் அகஸ்டின் கூர்னாட் (Augustin Cournot) விளக்கினார். பின் ஆல்ஃப்ரட் மார்ஷல் இதைச் சீர்படுத்தி விரிவாக்கினார். 

இலக்கணம்

'விலை குறையும்போது தேவையின் அளவு அதிகரிக்கிறது, விலை அதிகரிக்கும்போது தேவையின் அளவு குறைகிறது' என மார்ஷல் தேவை விதியை வரையறுக்கிறார்.

'மற்றவை மாறாமல் இருக்கும்போது, ஒரு பொருளுக்கானவிலை குறையும்போது மக்கள் அப்பொருளை அதிகம் வாங்குவர், விலை ஏறும்போது குறைவாக வாங்குவர்' - சாமுவேல்சன்.

அனுமானங்கள்

1. நுகர்வோர் வருமானத்தில் மாற்றமில்லை 

2. நுகர்வோரது சுவையிலும், தேர்ந்தெடுத்தலிலும் மற்றும் பழக்கத்திலும் மாற்றமில்லை. 

3. பிற பொருட்களின் விலையில் மாற்றமில்லை. 

4. பிற பதிலிகள் இல்லை . 

5. பண்டத்திற்கான தேவை தொடர்ச்சியானது. 

6. பண்டத்தின் தரத்தில் எவ்வித மாற்றமும் இல்லை .

மேற்கண்ட எடுகோள்களின் அடிப்படையில் தேவை விதி செயல்படும். கொடுக்கப்பட்ட அனுமானங்களில் ஏதேனும் ஒன்றில் மாற்றம் ஏற்பட்டாலும் இவ்விதி செயல்படாது.
தேவை விதி விலை மற்றும் பொருளுக்கான தேவையின் உறவை விளக்குகிறது. விலை குறையும் போது தேவை அதிகரிக்கும். விலை அதிகரிக்கும் போது தேவை குறையும். மாறாக விலை உயர்வு தேவை சுருக்கத்தையும் விலை குறைவு தேவை விரிவையும் ஏற்படுத்தும். எனவே தேவை விதி ஒரு பொருளின் தேவைக்கும் அதின் விலைக்கும் உள்ள எதிர்மறை உறவை விளக்குகிறது.

வரைபட விளக்கம்

வரைபடம் 2.4ல் X அச்சில் பண்ட அளவும், Y அச்சில் விலையும் குறிப்பிடப்படுகின்றன. DD என்பது தேவைக் கோடாகும். அது கீழ் நோக்கிச் சரிந்து செல்கிறது. அதாவது இடமிருந்து வலமாக கீழ் நோக்கிச் சரிகிறது. இதன்மூலம் விலை குறைந்தால் தேவை விரிவடையும் என்றும் விலை கூடினால் தேவை சுருக்கம் அடையும் என்றும் அறியலாம்.

பண்டத்திற்கான அங்காடித் தேவை


அங்காடியில் உள்ள அனைத்து தனி நபர்களின் தேவை அளவினை ஒன்று கூட்டினால் பண்டத்திற்கான அங்காடித் தேவை வளைகோட்டினைப் பெறலாம். வரைபடம் 2.5ல் தனி நபர் தேவைக்கோடு A, B மற்றும் C ஆகியவற்றைக் கூட்டினால் அங்காடித் தேவை வளைகோட்டினைப் பெறலாம். 

விலை ₹3ஆக இருக்கும்போது 2+2+4=8; விலை ₹1 இருக்கும்போது அங்காடித் தேவை 6+8+8=22.

தனி நபர் தேவைப் பட்டியலின் அடிப்படையில் விலை, இடம் மற்றும் நேரத்தை இணைத்து அங்காடித் தேவை வளைகோட்டைப் பெறலாம்.


4. தேவையைத் தீர்மானிக்கும் காரணிகள் 

1. சுவையிலும், நாகரிகத்திலும் ஏற்படும் மாற்றம்

பல பண்டங்கள் மற்றும் பணிகளின் தேவை, சுவைகள் மற்றும் நாகரிகங்களில் ஏற்படும் மாற்றத்தால் பாதிப்படைகின்றன. 

2. காலநிலையில் மாற்றம்

கோடை காலத்தில் குளிர்பானங்களின் தேவை அதிகரிக்கிறது, மழைக் காலத்தில் குடையின் தேவை அதிகரிக்கலாம். 

3. வரி மற்றும் மானியம்

புதிய வரிவிதிப்பின் காரணமாக பண்டங்களின் விலை அதிகரிக்கலாம். மானியங்கள் விலையைக் குறைக்கலாம். எனவே வரி காரணமாக தேவை குறையும்; மானியங்களினால் தேவை அதிகரிக்கும். 

4. எதிர்பார்ப்புகளில் மாற்றம்

எதிர்பார்ப்புகள் கூட தேவையில் மாற்றத்தைக் கொண்டு வரும். தங்கத்தின் விலை பின்வருங்காலத்தில் இன்னும் கூடலாம் என மக்கள் எதிர்பார்த்தால், தங்கத்தின் உடனடித் தேவை கூடலாம்.

5. சேமிப்பில் மாற்றம்

சேமிப்பும் தேவையும் எதிர்மறையான உறவைக் கொண்டவை.

6. வணிக நிலை

செழுமை காலத்தில் எல்லாப் பண்டங்களின் தேவைகளும் உயரும் போக்கினை கொண்டுள்ளன. மாறாக மந்த நிலையில் தேவையில் பொதுவாக வீழ்ச்சி காணப்படுகிறது.

7. விளம்பரம்

வளர்ந்த முதலாளித்துவ நாடுகளில், சந்தையின் தேவையை உயர்த்துவதில் விளம்பரம் சக்தி வாய்ந்த கருவியாகத் திகழ்கிறது. 

8. வருமானத்தில் மாற்றம்

குடும்ப வருமானத்தில் ஏற்படும் உயர்வு நீடித்த பண்டங்களின் தேவையை உயர்த்துகிறது. எ.கா. தொலைக்காட்சிப் பெட்டி, குளிர்சாதனப் பெட்டி போன்றவைகள். வருமானம் சமமாகப் பங்கிடப்பட்டால், ஏழைகளுக்கு வருமானம் அதிகரிக்கலாம். இவ்வாறு நிகழ்ந்தால் நுகர்வின் அளவு அதிகரிக்கும். 

9. மக்கள் தொகை மாற்றம்

மற்றவை மாறாதிருக்கும்போது, பண்டங்களின் தேவை மக்கள் தொகை அளவினைப் பொறுத்து அமைகிறது. மக்கள் தொகையின் உயர்வு பண்டங்களின் தேவையை உயர்த்துகிறது. மக்கள் தொகையின் குறைவு தேவையைக் குறைக்கிறது. வளர்ந்த நாடுகளில் மக்கள் தொகை குறைவாக இருந்தாலும், அவர்களின் வருமானம் உயர்வாக இருப்பதால், தேவையும் அதிகமாக இருக்கிறது.


5. தேவை விதியின் விதிவிலக்குகள்

பொதுவான தேவை வளைகோடு இடமிருந்து வலமாக கீழ்நோக்கிச் சரியும். ஆனால் சில விதிவிலக்கு தேவைக் கோடுகள் இந்த விதிக்கு கட்டுப்படாமல் மாறிச் செயல்படும்; விலை குறைவு தேவை சுருக்கத்தையும், விலை உயர்வு தேவை விரிவையும் ஏற்படுத்தும். இந்நிலையில் தேவைக்கோடு இடமிருந்து வலமாக மேல்நோக்கி உயரும். இது விதிவிலக்கான தேவைக்கோடு என அழைக்கப்படுகிறது.


வரைபடம் 2.6ல் DD என்பது இடமிருந்து வலமாக மேல் நோக்கி உயரும் தேவைக் கோட்டைக் குறிக்கிறது. OP1 விலையில் தேவை OQ1 அளவில் உள்ளது. விலை. OP2 அளவிற்கு உயரும் போது தேவையும் OQ2 அளவிற்கு உயருகிறது. இந்த மேல் நோக்கிச் செல்லும் தேவை, விதியை விட்டு விலகிச் சென்று விதிவிலக்காக உள்ளது.


6. தேவை விதியின் விதிவிலக்கிற்கான காரணங்கள்

1. கிஃபன் முரண்பாடு (Giffen)

கிஃபன் பண்டங்கள் அல்லது தாழ்ந்தரக பண்டங்கள் தேவை விதியின் விதிவிலக்காகும். தாழ்ந்தரக பண்டங்களின் விலைகுறையும்போது ஏழைகள் அவற்றைக் குறைவாக வாங்குவர். விலை கூடும்போது அதிகம் வாங்குவர். (உ.ம்)அரிசி, ராகி 

2. வெப்ளன் (Veblen) விளைவு அல்லது பகட்டு விளைவு

வெப்ளன் தன்னுடைய பகட்டு நுகர்வுக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு விதிவிலக்கு தேவைக் கோட்டை விளக்குகிறார். பணக்காரர்கள் போல் காட்டிக்கொள்பவர்கள் விலை உயர்வாக இருந்தாலும் சில பண்டங்களை சமூக அந்தஸ்திற்காக அதிகமாக வாங்குகின்றனர் (உ.ம். வைரம்).

3. அறியாமை

சில நேரங்களில் பண்டங்களின் தரம் விலையின் அடிப்படையில் அமைகிறது எனப் பலர் கருதுகின்றனர். அதிக விலையுள்ள பண்டமே சிறந்த பண்டமென சில நுகர்வோர் எண்ணுகின்றனர். எனவே அதை அதிகம் வாங்குகின்றனர். 

4. ஊக விளைவு

ஒரு பண்டத்தின் விலை உயரும்போது, எதிர்காலத்தில் இன்னும் அந்த பண்டத்தின் விலை உயரும் என்ற பயத்தில் நுகர்வோர் தற்போது அதிகம் வாங்குகிறார். எ.கா. தங்கம்.

5. பற்றாக்குறை பயம்

இக்கட்டான சூழல்கள் அல்லது போர்க்காலம் போன்ற நேரத்தில் பண்டங்களுக்கு பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்ற பயத்தில் அதிக விலை என்றாலும் மக்கள் அதிகம் வாங்குகின்றனர். இப்படியான போக்கு இருப்பதால் விலை இன்னும் வேகமாக உயரும்.


7. தேவை விரிவும் தேவைச் சுருக்கமும்

விலையில் ஏற்படும் மாற்றத்தால் மட்டுமே தேவை அளவில் மாற்றம் ஏற்பட்டால் அதனை தேவை விரிவு மற்றும் சுருக்கம் என அழைக்கிறோம். வேறு வகையில் கூறினால், குறைந்த விலையில் அதிக பொருட்களை வாங்குவது தேவை விரிவு; மற்றும், அதிக விலையில் குறைந்த பொருட்களை வாங்குவது சுருக்கம் ஆகும்.


8. தேவை ஒரே வளைகோட்டில் நகர்ந்து செல்லுதல்


வரைபடம் 2.7ல் A புள்ளியில் விலை OP2 மற்றும் தேவை அளவு OQ2, விலை OP3 அளவிற்கு குறையும்போது (தேவை வளைகோட்டில் A புள்ளியிலிருந்து C புள்ளிக்கு நகர்ந்து செல்லுதல், தேவை விரிதல்) அப்புள்ளியில் தேவை அளவு OQ3 அளவிற்கு அதிகரிக்கிறது. இதே போல் விலை OP1 க்கு உயர்ந்தால் தேவை அளவு OQ1 ஆகக் குறைகிறது. A புள்ளியிலிருந்து B புள்ளியை நோக்கி நகர்தல், தேவை சுருங்குதல்.


9. தேவை வளைகோடு இடப்பெயர்வு

தேவைச் சார்பில் விலை தவிர்த்த பிற காரணிகளால் ஏற்படும் மாற்றத்தால் தேவை வளைகோடு இடப் பெயர்வு அடைகிறது. விலை தவிர்த்த ஏனைய காரணிகளில் ஏற்படும் மாற்றங்களால் தேவையில் உயர்வோ, குறைவோ ஏற்படுமாயின் அதை இடம் பெயர்ந்த தேவைக்கோட்டில் குறித்துக் காட்டுகிறோம்.

வரைபடம் 2.8ல் இடது பக்கமுள்ள படத்தில் dd என்பது முதலில் வரையப்பட்ட உண்மையான தேவை வளைகோடாகும். அவ்வளைகோட்டில் விலை OP1 ஆக இருக்கும்போது தேவையின் அளவு OQ1 ஆக இருக்கிறது. தேவையைப் பாதிக்கும் விலை தவிர ஏனைய காரணிகளில் (வருமான மாற்றம், சுவை, பதிலீட்டுப் பண்ட விலை மாற்றம் போன்று) ஏற்பட்ட மாற்றத்தால் தேவை அளவு OQ1 லிருந்து OQ2 ஆக குறைகிறது. இதை இடது பக்கமுள்ள புதிய தேவை வளைகோடு d1d1 ல் குறித்துக் காட்டுகிறோம். இது தேவைக்குறைவு என அழைக்கப்படுகிறது.

வரைபடம் 2.8 ல் வலது புறமுள்ள படத்தில் ஆரம்பவிலை OP1 ஆகவும் தேவை OQ1 ஆகவும் உள்ளன. பிற காரணிகளில் ஏற்பட்ட மாற்றத்தால் வாங்கும் அளவு OQ2 ஆக அதிகரிக்கிறது. எனவே தேவைக்கோடு வலப்புறமாக d1d1 என இடம் பெயர்கிறது. இதை தேவை அதிகரிப்பு என்கிறோம்.

தேவை விரிவு மற்றும் சுருக்கம் விலையில் ஏற்பட்ட மாற்றத்தால் ஏற்பட்டது. தேவை அதிகரிப்பு மற்றும் குறைவு விலை தவிர்த்த பிற காரணிகளில் ஏற்பட்ட மாற்றத்தால் ஏற்பட்டது; இங்கு விலையில் மாற்றம் இருக்காது.Tags : Economics பொருளாதாரம்.
11th Economics : Chapter 2 : Consumption Analysis : Law of Demand Economics in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது பொருளாதாரம் : அத்தியாயம் 2 : நுகர்வு பகுப்பாய்வு : தேவை விதி - பொருளாதாரம் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது பொருளாதாரம் : அத்தியாயம் 2 : நுகர்வு பகுப்பாய்வு