பொருளாதாரம் - தேவை நெகிழ்ச்சியின் வகைகள் | 11th Economics : Chapter 2 : Consumption Analysis
தேவை நெகிழ்ச்சியின் வகைகள்
1. விலைத் தேவை நெகிழ்ச்சி
விலைத் தேவை நெகிழ்ச்சி பொதுவாக தேவை நெகிழ்ச்சி என்றே அழைக்கப்படுகிறது. ஏனெனில் தேவையைத் தீர்மானிக்கும் காரணிகளில் விலையே மிக முக்கிய காரணி ஆகும். "விலையில் ஏற்பட்ட மாற்றத்துக்கு தேவை அளவில் ஏற்படும் பதில் மாற்ற விளைவையே தேவை நெகிழ்ச்சி" என்கிறோம். வேறுவகையில் கூறினால்
விலைத் தேவை நெகிழ்ச்சி (EP) = தேவை அளவில் ஏற்பட்ட மாற்ற விகிதம் /விலையில் ஏற்பட்ட மாற்ற விகிதம்
கணித முறைப்படி,
Ep = ΔQ / ΔP × P / Q
ΔQ = மாறிய தேவை அளவு
ΔP = மாறிய விலை
P = ஆரம்ப விலை
Q = ஆரம்ப தேவை
இங்கு , ΔQ = Q1 –Q0, ΔP = P1 – P0
Q1= புதிய தேவை அளவு,
Q0= ஆரம்ப தேவை அளவு,
P1 = புதிய விலை ,
P0 =ஆரம்ப விலை
2. வருமானத் தேவை நெகிழ்ச்சி
பண்டத்தின் தேவையைத் தீர்மானிப்பதில் வருமானமும் ஒரு காரணி ஆகும். "வருமானத்தில் ஏற்பட்ட மாற்றத்தால் தேவையில் ஏற்படும் பதில் மாற்ற விகித அளவே வருமானத் தேவை நெகிழ்ச்சி" ஆகும்.
வருமானத் தேவை நெகிழ்ச்சி கணக்கிடும் முறை
EY = பண்டத்தின் தேவை அளவில் ஏற்படும் விகிதாசார மாற்றம் / வருமான அளவில் ஏற்படும் விகிதாசார மாற்றம்
பெரும்பான்மையான பண்டங்களுக்கு வருவாய் தேவை நெகிழ்ச்சி ஒன்றுக்கு அதிகமாக காணப்படும். அதாவது, தேவையில் ஏற்படும் விகிதாச்சார மாற்றம் வருமானத்தில் ஏற்படும் விகிதாச்சார மாற்றத்தை விட அதிகமாக இருக்கும். வருவாயும், தேவையும் நேர் விகிதத்தில் மாற்றம் காணும். அதாவது வருமானம் அதிகரித்தால் தேவையும் அதிகரிக்கும்; வருமானம் குறைந்தால் தேவையும் குறையும். தரம் தாழ்ந்ததாக கருதப்படும் பொருட்களின் தேவை விலை உயரும்போது குறையலாம்.
3. குறுக்குத் தேவை நெகிழ்ச்சி
ஒரு பண்டத்தின் விலையில் ஏற்படும் மாற்றம் மற்றொரு பண்டத்தின் தேவையில் மாற்றத்தை ஏற்படுத்தும். இம்மாற்றங்களின் விளைவை அளப்பது குறுக்குத் தேவை நெகிழ்ச்சி ஆகும். இவ்வகையான நெகிழ்ச்சி வழக்கமாக ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய பண்டங்களில் ஏற்படும். (உ.ம்.) பதிலீட்டுப் பண்டங்கள், உடனுறு பண்டங்கள். X மற்றும் Y-க்கிடையேயோன குறுக்குத் தேவை நெகிழ்ச்சியினைக் கீழ்வருமாறு குறிப்பிடலாம்.
Ec = X பண்டத்தின் தேவை அளவில் ஏற்படும் விகிதாசார மாற்றம் / Y பண்டத்தின் விலையில் ஏற்படும் விகிதாச்சார மாற்றம்
4. விளம்பரத் தேவை நெகிழ்ச்சி
விளம்பரத்தினாலோ அல்லது பிற வியாபாரத்தை உயர்த்தும் செலவுகளாலோ தேவையில் மாற்றம் ஏற்பட்டால் அதை விளம்பரத் தேவை நெகிழ்ச்சி என்று அழைக்கிறோம்.
Ea = தேவை அளவில் ஏற்படும் விகிதாச்சார மாற்றம் / விளம்பர செலவில் ஏற்படும் விகிதாச்சார மாற்றம்