பொருளாதாரம் - விலைத் தேவை நெகிழ்ச்சி அளவுகள் | 11th Economics : Chapter 2 : Consumption Analysis
விலைத் தேவை நெகிழ்ச்சி அளவுகள்
விலையில் ஏற்படும் மாற்றத்தின் காரணமாக தேவையில் ஏற்படும் மாற்றம் விலைத் தேவை நெகிழ்ச்சியாகும்.
1. முற்றிலும் நெகிழ்ச்சியுள்ள தேவை (Ep = ∞)
விலையில் சிறிய மாற்றம் உள்ளபோது அல்லது விலையில் மாற்றமே இல்லாதபோது தேவையில் பெரிய அளவு மாற்றமோ அல்லது முடிவில்லா மாற்றமோ ஏற்பட்டால் அதை முற்றிலும் நெகிழ்ச்சியுள்ள தேவை என்கிறோம். இப்படிப்பட்ட தேவைக் கோடு படுக்கை கோடாக X அச்சுக்கு இணையாக இருக்கும். வரைபடம் 2.9ல் இது விளக்கப்பட்டுள்ளது.
2. முற்றிலும் நெகிழ்ச்சியற்ற தேவை (Ep=0)
விலையில் ஏற்படும் சிறிய அல்லது பெரிய மாற்றம் தேவையில் எந்தவித மாற்றத்தையும் உண்டாக்கவில்லை எனில் அது முற்றிலும் நெகிழ்ச்சியற்ற தேவை எனப்படும். இங்கு தேவைக் கோடானது y அச்சுக்கு இணையாக செங்குத்துக் கோடாக இருக்கும். வரைபடம் 2.10ஐப் பார்க்கவும்.
வரைபடத்தில் விலை P1, P2 மற்றும் P3 ஆக மாறினாலும் தேவை அளவு மாற்றமில்லாமல் OQ அளவில் இருக்கிறது. அப்படியானால் முற்றிலும் நெகிழ்ச்சியற்ற தேவையாகும்.
3. மிகைத் தேவை நெகிழ்ச்சி (Ep>1)
விலையில் ஏற்பட்ட மாற்ற விகிதத்தைவிட தேவை மாற்ற விகிதம் அதிகமாக இருந்தால் அதனை மிகைத் தேவை நெகிழ்ச்சி என்கிறோம். இங்கு தேவைக் கோடு மெதுவாகச் சரிகிறது.
வரைபடம் 2.11 ஐப் பார்க்கவும். இதில் விலையானது ₹10 -லிருந்து 9ஆக குறைந்துள்ளது, இது 10% குறைவு ஆகும். தேவை 5 லிருந்து 10 ஆக உயர்கிறது, இது 100% உயர்வாகும். எனவே, இவ்வரைபடம் மிகைத் தேவை நெகிழ்ச்சியைக் காட்டுகிறது.
4. குறைவான நெகிழ்ச்சியுள்ள தேவை / குறைத் தேவை நெகிழ்ச்சி (Ep<1)
விலையில் ஏற்பட்ட பெரிய சதவீத மாற்றம் தேவையில் சிறிய சதவீத மாற்றத்தை ஏற்படுத்துமாயின் அதை குறைத்தேவை நெகிழ்ச்சி என்கிறோம் அல்லது ஒன்றுக்கு குறைவான நெகிழ்ச்சி என்றும் அழைக்கிறோம். இங்கு தேவைக்கோடு வேகமாக சரிகிறது. இங்கு விலை OP1 லிருந்து OP2 ஆக அதிக அளவில் குறையும்போது தேவை OQ0 லிருந்து OQ1 வரை குறைந்த அளவே அதிகரித்திருக்கிறது.
5. அலகுத் தேவை நெகிழ்ச்சி (Ep=1)
விலையில் ஏற்படும் சதவீத மாற்ற அளவு அதே சமஅளவு சதவீத மாற்றத்தினை தேவையில் தோற்றுவிக்குமானால் அதனை அலகுத்தேவை நெகிழ்ச்சி என்கிறோம். இங்கு தேவைக்கோடு செவ்வக அதிபரவளையமாக (Rectangular Hyperbola) உள்ளது. ஒன்றுக்குச் சமமான பகுதியை இது குறிக்கிறது.
இங்கு OP0R0Q0 = OP1R1Q1.
மேலே குறிப்பிடப்பட்டவை விலைத் தேவை நெகிழ்ச்சியின் சில வகைகளாகும். தேவையின் வகைகளைப் பொறுத்து ஒரு நிறுவனம் தன் பண்டத்திற்கான விலையைத் தீர்மானிக்க வேண்டியுள்ளது. அதற்கு இவை உதவி புரிகின்றன. விலை மாற்றத்திற்கேற்ப எவ்வாறு தனிநபர் தன் தேவையை மாற்றிக் கொள்கிறார் என்பதைப் பொறுத்து நிறுவனம் விலையை நிர்ணயிக்க வேண்டியுள்ளது.