பொருளாதாரம் - தேவை நெகிழ்ச்சியைத் தீர்மானிப்பவைகள் | 11th Economics : Chapter 2 : Consumption Analysis
தேவை நெகிழ்ச்சியைத் தீர்மானிப்பவைகள்
தேவை நெகிழ்வின் அளவைப் பல காரணிகள் நிர்ணயிக்கின்றன. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.
அ. பதிலீட்டுப் பொருட்கள்
ஒரு பொருளுக்கு பல பதிலீட்டுப் பொருட்கள் இருந்தால், அப்பொருளின் விலைத் தேவை நெகிழ்வு மிக அதிகமாக இருக்கும். அந்தப் பொருளின் விலை அதிகரித்தால், மக்கள் அதனுடைய பதிலீட்டுப் பொருட்களை வாங்கிப் பயன்படுத்த ஆரம்பித்துவிடுவார்கள். எனவே விலை சிறிது உயர்ந்தால் கூட, அப்பொருளின் தேவை வெகுவாகக் குறைந்து விடும். இங்கு விலைத் தேவை நெகிழ்வு மிக அதிகம். எ.கா. காய்கறிகள்.
உப்புக்கு நெருங்கிய பதிலீட்டுப் பொருட்கள் இல்லை. எனவே உப்பின் விலை உயர்ந்தாலும் தேவை அந்த அளவு குறையாது. பதிலீடுகள் இல்லாத உப்பு போன்ற பொருட்களின் விலைத்தேவை நெகிழ்ச்சி மிகவும் குறைவு.
ஆ. நுகர்வோரின் வருமானத்தின் எவ்வளவு செலவு செய்யப்படுகிறது.
ஒரு பொருளின் மீது (x) நுகர்வோரின் குறைவான விகிதாச்சார வருமானம் செலவு செய்யப்பட்டால் அப்பொருளின் (x) தேவை நெகிழ்வு மிக குறைவாக இருக்கும். உதாரணத்திற்கு உப்பை எடுத்துக் கொள்ளலாம். உப்புக்காக செலவு செய்யப்படும் வருமானம் பங்கு மிகக் குறைவே. அப்படியானால், உப்பின் விலைத் தேவை நெகிழ்வும் மிக குறைவாகவே இருக்கும்.
இ. ஒரு பொருளின் பயன்கள்
ஒரு பொருளின் பயன் மிக அதிகமாக இருப்பின், அப்பொருளின் விலைத் தேவை நெகிழ்வும் மிக அதிகமாக இருக்கும். எடுத்துக்காட்டாக பால். பாலின் விலை சிறிது குறைந்தாலும், பாலை வைத்து மோர், தயிர், நெய், பாயாசம் ஆகியவற்றை உருவாக்கலாம். தேவை மிக அதிகமாகிவிடும். எனவே, பாலின் விலைத் தேவை நெகிழ்வு அதிகமாக இருக்கும்.
ஈ. இணைப்புப் பொருட்கள்
வாகனம் வைத்திருப்போர் பெட்ரோலும், மசகு எண்ணையையும் (Lubricating oil) அதிகம் பயன்படுத்துவர். மசகு எண்ணெய் விலை மட்டும் அதிகரிப்பின் அதன் தேவை குறைவதில்லை . ஏனெனில் அதன் பயன்பாடு பெட்ரோலுடன் இணைந்ததாகும்.
உ. காலம்
நீண்ட காலத்தில் பெரும்பாலான பொருட்களுக்கு விலைத் தேவை நெகிழ்ச்சி அதிகமாக இருக்கும். ஏனெனில் நீண்ட காலத்தில் பல பதிலீட்டுப் பண்டங்கள் உருவாக்கப்பட்டிருக்கும். எனவே குறுகிய காலத்தைவிட நீண்டகாலத்தில் நெகிழ்ச்சி அதிகமாக இருக்கும். குறுகிய காலத்தில் பதிலீட்டுப்பொருட்களை கொண்டுவருவது கடினமாக இருக்கும்.