தமிழ்நாடு – மானுடப் புவியியல் - தமிழ்நாட்டின் முக்கிய பயிர்களின் பரவல் | 10th Social Science : Geography : Chapter 8 : Human Geography of Tamil Nadu
தமிழ்நாட்டின் முக்கிய பயிர்களின் பரவல்
நெல்
தமிழ்நாட்டின் முக்கியமான உணவுப்பயிர் நெல் ஆகும். பொன்னி மற்றும் கிச்சடி சம்பா தமிழகத்தில் பயிரிடப்படும் முக்கிய நெல் வகைகளாகும். இப்பயிர் தமிழகம் முழுவதும் பயிரிடப்பட்டாலும் தஞ்சாவூர், திருவாரூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் அதிகளவில் பயிரிடப்படுகிறது. நெல் உற்பத்தி செய்யும் இந்திய மாநிலங்களில் தமிழகம் மூன்றாம் இடத்தை வகிக்கிறது. தமிழ்நாட்டில் காவிரி டெல்டா பகுதி அதிக நெல் உற்பத்தி செய்யும் பகுதியாகும். (பிரிக்கப்படாத தஞ்சாவூர்) எனவே இப்பகுதி தமிழ்நாட்டின் "நெற்களஞ்சியம்" என்றழைக்கப்படுகிறது.
உங்களுக்குத்
தெரியுமா?
தமிழ்நாடு
வேளாண் பல்கலைக்
கழகத்தின் (TANU) கீழ் செயல்பட்டுவரும் தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி
நிறுவனம் (TRRI) நெல் ஆராய்ச்சியை மேற்கொள்ளும் ஓர் இந்திய
நிறுவனமாகும். இது தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆடுதுறை என்னுமிடத்தில் 1985ஆம்
ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டது. இந்நிறுவனம் இப்பகுதியிலுள்ள கல்லூரிகள்
மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு நெல் சாகுபடி மற்றும் உற்பத்தி முறை குறித்த
ஆராய்ச்சிகளுக்கு தேவையான உதவிகளைச் செய்து வருகிறது.
தமிழ்நாட்டின்
மக்கள் தொகையில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கு பகுதியினரின் முக்கியமான உணவு தினை
வகைளாகும். சோளம், கேழ்வரகு மற்றும் கம்பு ஆகியன முக்கிய தினைப்
பயிர்களாகும். இவ்வகை பயிர்கள் வறண்ட பிரதேசங்களில் மட்டுமல்லாமல் கடற்கரைச்
சமவெளிகளிலும் விளைகின்றன. கோயம்புத்தூர் பீடபூமியிலும், கம்பம்
பள்ளத்தாக்கிலும் சோளம் பயிரிடப்படுகின்றன. கோயம்புத்தூர், தர்மபுரி, வேலூர்
மற்றும் கடலூர் மாவட்டங்களில் கேழ்வரகு பயிரிடப்படுகிறது. இராமநாதபுரம், திருநெல்வேலி, கரூர், பெரம்பலூர்
மற்றும் சேலம் மாவட்டங்களில் கம்பு பயிரிடப்படுகிறது.
இந்தியா, 2018ஆம்
ஆண்டை தினைப்பயிர்களின் தேசிய ஆண்டாக அனுசரித்தது. உலக உணவு மற்றும் வேளாண்மைக்
கழகம் (FAO), 2023ஆம் ஆண்டை சர்வதேச தினைப்பயிர்கள் ஆண்டாக
அனுசரிக்கத் தீர்மானித்துள்ளது.
பருப்பு வகைகள்
பருப்பு
வகைகள் புரதச்சத்தின் முக்கிய ஆதாரமாக உள்ளன. கொண்டைக்கடலை, உளுந்து, பச்சைப்பயறு, துவரம்பருப்பு, தட்டைப்பயறு மற்றும் கொள்ளு
ஆகியன தமிழ்நாட்டில் விளையும் முக்கிய பருப்பு வகைகளாகும். பருப்பு வகைகள்
காலநிலைக்கு ஏற்றாற் போல் பரவலாகப் பயிரிடப்படுகின்றன. வறண்ட நிலப்பகுதிகளில்
நீர்ப்பாசன வசதியுடனோ அல்லது நீர்பாசனமின்றியோ பயிரிடப்படுகின்றன. மிதமான
குளிர்கால நிலை மற்றும் குறைந்த மழைப்பொழிவு இங்கு பயிரிட உகந்த சூழல்களாகும்.
பருப்பு வகைகள் கால்நடைகளுக்கு மிகச்சிறந்த தீவனமாக உள்ளன. சென்னை, நீலகிரி
மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் பருப்பு வகைகள்
பயிரிடப்படுகின்றன. கோயம்புத்தூர் மாவட்டம் கொண்டக்கடலை உற்பத்தியில் மாநிலத்தில்
முதன்நிலை வகிக்கிறது. வேலூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் துவரம் பருப்பு
கூடுதலாக உற்பத்தி செய்யப்படுகின்றன. திருவாரூர், நாகப்பட்டினம்
மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள் அதிக அளவில் பச்சைப் பயறு மற்றும் உளுந்து ஆகியவற்றை
உற்பத்தி செய்கின்றன. தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கொள்ளுப் பயிர்
கூடுதலாக பயிரிடப்படுகிறது.
நிலக்கடலை, எள், ஆமணக்கு, தென்னை, சூரியகாந்தி
மற்றும் கடுகு ஆகியன தமிழ்நாட்டில் பயிரிடப்படும் முக்கிய எண்ணெய் வித்துக்கள் ஆகும்.
உணவுப் பயன்பாட்டிற்கு மட்டுமல்லாமல் தொழிலகங்களில் மசகு எண்ணெய், மெருகு
எண்ணெய் பொருள்கள், சோப்பு, மெழுகுவர்த்தி, அழகுசாதனப்
பொருள்கள் மற்றும் மருந்து பொருள்கள் ஆகியவற்றின் உற்பத்திக்கும் இவைப்
பயன்படுகின்றன. நிலக்கடலை மாநிலத்தின் முக்கிய எண்ணெய் வித்துப் பயிராகும். வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், சேலம்
மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் நிலக்கடலை உற்பத்தியானது செறிந்து
காணப்படுகிறது. தர்மபுரி, கடலூர், பெரம்பலூர், மதுரை, ஈரோடு, இராமநாதபுரம், சிவகங்கை மற்றும்
விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இவை சிறிய அளவில் பயிரிடப்படுகிறது. கோயம்புத்தூர், தஞ்சாவூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில்
தென்னை மரங்கள் அதிகம் காணப்படுகின்றன.
இரண்டாவது
பசுமைப்புரட்சி (இயற்கை வேளாண்மை அல்லது கரிம வேளாண்மை):
இயற்கை
வேளாண்மையில் செயற்கை உரங்கள், பூச்சிகொல்லிகள், தாவர
வளர்ச்சி சீராக்கிகள் (செயற்கை இரசாயனம்) கால்நடை தீவனக் கலப்புகள்
பயன்படுத்துவதில்லை. இவ்வகை விவசாயம், பயிர் சுழற்சி, பயிர்
கழிவுகள், விலங்குகளின் கழிவுகள், விவசாயம்
அல்லாத கரிம கழிவுகள், உயிரியல் பூச்சிக்கொல்லிகள் ஆகியனவற்றை மண்வளப்
பாதுகாப்பிற்கு நம்பியுள்ளனர். குறைவான விவசாயிகளே இம்முறையினைப்
பின்பற்றுகின்றனர்.
கரும்பு
தமிழ்நாட்டின் முக்கியமான வாணிபப் பயிராகும். இது ஓராண்டு பயிராகும். இதற்கு
அதிக வெப்பநிலை மற்றும் அதிக மழைப் பொழிவும் தேவைப்படுகிறது. இது வெப்பமண்டல பிரதேசங்களில் நன்கு வளரக்கூடியவை. திருவள்ளூர்,
காஞ்சிபுரம், வேலூர், கடலூர்,
திருநெல்வேலி, கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு ஆகியன
கரும்பு பயிரிடும் மாவட்டங்களாகும்.
பருத்தி
ஓர் இழைப்பயிர் மற்றும் வாணிபப் பயிராகும். கரிசல்மண், நீண்ட பனிப்பொழிவற்ற
காலம், மிதவெப்பம் மற்றும் ஈரப்பத வானிலை ஆகியவை பருத்தி பயிரிடுவதற்கு
உகந்தவையாகும். பருத்தி வளரும் காலத்தில் ஈரப்பத காலநிலையும்,
அறுவடை காலத்தில் வறண்ட காலநிலையும் பயிருக்கு ஏற்றதாகும். கோயம்புத்தூர் பீடபூமி பகுதியிலும், வைகை மற்றும் வைப்பாறு
ஆற்றுவடிநிலப் பகுதிகளிலும் பருத்தி பயிரிடப்படுகின்றது. மதுரை,
இராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, சேலம்
மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களிலும் இவைப் பயிரிடப்படுகின்றது.
டான்
டீ (TANTEA) இந்நிறுவனம்
இந்தியாவில் கருப்பு வகை தேயிலை உற்பத்தியிலும், கலப்பு வகை தேயிலை
உற்பத்தியிலும் முன்னனி வகிக்கும் நிறுவனங்களுள் ஒன்றாகும். (தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழகம்) இந்நிறுவனத்தின் தேயிலை
பயிரிடும் பரப்பு ஏறத்தாழ 4,500 ஹெக்டேர் ஆகும்.
தேயிலை, காபி, இரப்பர், மற்றும் முந்திரி ஆகியன மாநிலத்தின் முக்கிய
தோட்டப் பயிர்களாகும். இந்தியாவில் அசாம் மாநிலத்திற்கு அடுத்தபடியாக
தமிழ்நாடு தேயிலை பயிரிடும் பரப்பு மற்றும் உற்பத்தியில் இரண்டாமிடம் வகிக்கிறது. நீலகிரி மலைகள் மற்றும்
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மலைகளில் தேயிலை தோட்டங்கள் காணப்படுகின்றன.
மேற்கு தொடர்ச்சி மலைகள் மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகளில் காபி பயிரிடப்படுகின்றது.
நீலகிரி மலைகள் மற்றும் சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு மலைச்சவுகளில்
காபி குறிப்பிடத்தகுந்த அளவில் பயிரிடப்படுகிறது. திண்டுக்கல்,
மதுரை மற்றும் தேனி மாவட்டங்களிலுள்ள மலைச் சரிவுகளிலும் காபி பயிரிடப்படுகின்றது.
காபி உற்பத்தியில் கர்நாடகா மாநிலத்திற்கு அடுத்து தமிழ்நாடு இரண்டாமிடம்
வகிக்கிறது. இரப்பர் தோட்டங்கள் கன்னியாகுமரியில் அதிகமாகக் காணப்படுகிறது.
தமிழ்நாட்டிலுள்ள, மேற்கு தொடர்ச்சி மலை மற்றும்
கிழக்கு தொடர்ச்சி மலைகளின் சரிவுகளில் மிதவெப்பம் மற்றும் ஈரமான காலநிலை உள்ள பகுதிகளில்
மிளகு விளைகின்றது. கடலூர் மாவட்டத்தில் பெரும் பகுதிகளில் முந்திரி
பயிரிடப்படுகின்றது.
இயற்கை
வேளாண்மையை மேம்படுத்தும் நோக்கத்தோடு மத்திய அரசானது தேசிய இயற்கை கரிம வேளாண்மைத்
திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. - விழிப்புணர்வு ஏற்படுத்துதல், இயற்கை உரங்களை மேம்படுத்துதல், பயிற்சியளித்தல் போன்றவற்றை
இத்திட்டம் செயல்படுத்துகிறது. மேலும் கரிமப் பொருள்களை மறுசுழற்சி
செய்யவும், தொழிற்கூடங்கள், உயிரி உரங்கள்,
உயிரி பூச்சிகொல்லிகள் உற்பத்தி செய்யவும் தொழிற்கூடங்களுக்கு மாநிலத்தில்
நிதி உதவி அளித்தல், தரமேம்பாட்டு வளர்ச்சி மற்றும் அதனை நடைமுறைப்படுத்தும்
குழுமத்தின் மனிதவளத்தை மேம்படுத்துதல் போன்றவை இத்திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படுகிறது.