தமிழ்நாடு – மானுடப் புவியியல் - தமிழ்நாட்டில் உள்ள தொழிலகங்கள் | 10th Social Science : Geography : Chapter 8 : Human Geography of Tamil Nadu
தொழிலகங்கள்
மூலப்பொருள்களை
இயந்திரங்களின் மூலம் உற்பத்திப் பொருள்களாகவோ அல்லது பயன்படுத்தக்கூடிய பொருள்களாகவோ
மாற்றப்படும் இடமே தொழிலகங்களாகும். பருத்தி நெசவாலை, சர்க்கரை ஆலை,
காகித ஆலை, தோல் தொழிலகம், சிமெண்ட் ஆலை, மின்சாதனப் பொருள்கள் உற்பத்தி ஆலை,
வாகன உதிரிபாகங்கள், தகவல் தொழில் நுட்பம் மற்றும்
சுற்றுலாத் துறை ஆகியன தமிழ்நாட்டின் முக்கிய தொழிலகங்கள் ஆகும்.
பருத்தி
நெசவாலைகள் தமிழ்நாட்டின் பாரம்பரியமிக்க நன்கு வளர்ந்த ஒரு தொழிலகமாகும். பருத்தி நெசவாலைகள்
கோயம்புத்தூர், திருப்பூர், சேலம்,
பல்லடம், கரூர், திண்டுக்கல்,
விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை மற்றும் ஈரோடு ஆகிய பகுதிகளில் செறிந்து
காணப்படுகின்றன.
தமிழ்நாட்டில்
உள்ள ஈரோடு கைத்தறி,
விசைத்தறி மற்றும் ஆயத்த ஆடைகளின் விற்பனைக்கு புகழ்பெற்றது.
கோயம்புத்தூர் ‘தமிழ்நாட்டின் மான்செஸ்டர்' என்று
அழைக்கப்படுகிறது. கோயம்புத்தூர், திருப்பூர்,
ஈரோடு மாவட்டங்கள் நெசவுத்தொழில் மூலம் மாநில பொருளாதாரத்திற்கு முக்கிய
பங்களிப்பை அளிக்கின்றன. எனவே இப்பகுதி ‘தமிழ்நாட்டின் ஜவுளி
பள்ளத்தாக்கு’ எனக் குறிப்பிட்டப்படுகிறது. கரூர் 'தமிழ்நாட்டின் நெசவுத்தலைநகரம்' என்றழைக்கப்படுகிறது.
பருத்தி நெசவாலை
நாட்டின்
பட்டு உற்பத்தியில் தமிழ்நாடு நான்காவது இடத்தை வகிக்கிறது. காஞ்சிபுரம் பட்டு'
என்பது அதன் தனித்தன்மை, தரம் மற்றும் பாரம்பரிய
மதிப்பு ஆகியவற்றால் உலகம் முழுவதும் அறியப்படுகிறது. காஞ்சிபுரம்,
ஆரணி, கும்பகோணம், சேலம்,
கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகியவை
தமிழ்நாட்டின் முக்கிய பட்டு நெசவு மையங்களாகும். இராமநாதபுரத்தின்
சில பகுதிகளில் செயற்கைப் பட்டு துணிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இந்தியாவில், தோல் பதனிடும் தொழிலகங்களில்
தமிழ்நாடு 60% உற்பத்தியையும் காலணிகள், தோல் ஆடைகள், மற்றும் தோல் உபபொருள்கள் உற்பத்தியில்
38% பங்களிப்பையும் அளிக்கிறது. வேலூர் மற்றும்
அதனைச் சுற்றியுள்ள இராணிப்பேட்டை, ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி
நகரங்களில் நூற்றுக்கணக்கான தோல் பதனிடும் தொழிலகங்கள் அமைந்துள்ளன. அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி நிறுவனம் (CSIR) கீழ்
மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ஆய்வகம் (CLRI), சென்னையில்
அமைந்துள்ளது.
புவியியல்
குறியீடு
(GI Tag)
புவியியல்
குறியீடு என்பது ஒரு குறிப்பிட்ட புவியியல் பிரதேசத்தில் தயாரிக்கப்படும் பொருள்களின்
மீது பயன்படுத்தப்படும் குறிப்பாகும். இது உற்பத்தி செய்யும் உரிமையாளர்களுக்கு உரிமைகள்
மற்றும் பாதுகாப்பை வழங்குகிறது.
சில முக்கியப் புவியியல் குறியீடுகள்:
கரூர் மாவட்டம் காகிதபுரத்தில் தமிழக அரசு நிறுவனமான தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம் (TNPL) அமைந்துள்ளன. இது செய்தித்தாள், அச்சுக் காகிதம் மற்றும் எழுதப் பயன்படும் காகிதம் ஆகியவற்றை உற்பத்தி செய்கின்றது.
தமிழ்நாடு
செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம் உலகளவில் திறன் படைத்த ஆலைகளில் ஒன்றாகும். இவ்வாலை கரும்புச்சக்கை
மற்றும் மரக்கூழிலிருந்து பலவகையான காகிதங்களை சிறந்த தரத்துடன் உற்பத்தி செய்கின்றன.
புக்காதுரை, பவானிசாகர்,
பள்ளிபாளையம், பரமத்தி வேலூர், கோயம்புத்தூர், உடுமலைப்பேட்டை, தொப்பம்பட்டி, நிலக்கோட்டை மற்றும் சேரன்மாதேவி ஆகிய
இடங்களில் காகித ஆலைகள் உள்ளன.
சிமெண்ட்
தொழிலகம் பொருளாதார மந்த நிலையிலும் உற்பத்தி மற்றும் நுகர்வில் தொடர்ந்து வளர்ச்சி
அடைந்து வந்துள்ளது.
இந்தியா மிகப்பெரிய சிமெண்டு உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றாகவும்,
181 மில்லியன் டன்கள் வருடாந்திர உற்பத்தியுடன் உலகில் இரண்டாவது இடத்தை
வகிக்கும் நாடாகவும் உள்ளது. தமிழ்நாட்டின் முக்கிய சிமெண்ட் உற்பத்தியாளர்களில், தமிழ்நாடு சிமெண்ட்
கழகமும் (TANCEM) ஒன்றாக உள்ளது. அரியலூர்
மற்றும் ஆலங்குளம் ஆகிய இடங்களில் சிமெண்ட் உற்பத்தி ஆலைகள் இயங்குகின்றன. ஆலங்குளத்தில் உள்ள கல்நார் சிமெண்ட் அட்டை அலகும், விருத்தாசலத்தில்
உள்ள கற்கலன் குழாய் அலகு ஆகியன மாநிலத்தின் மற்ற அலகுகளாகும். சங்கர் சிமெண்ட், ஜூவாரி சிமெண்ட், அல்ட்ராடெக் சிமெண்ட், மதராஸ் சிமெண்ட் மற்றும் டால்மியா
சிமெண்ட் ஆகியன தமிழ்நாட்டின் முக்கிய தனியார் சிமெண்ட் உற்பத்தி நிறுவனங்களாகும்.