நீர் வளம்
மனித
குலத்திற்கும் புவியில் வாழும் இலட்சக்கணக்கான உயிரினங்களுக்கும் நீர் இயற்கையின் ஒரு
விலை மதிப்பற்ற பரிசாகும்.
இந்தியப்
பரப்பளவில் 4 சதவிகிதத்தையும் மக்கள் தொகையில் 6 சதவிகிதத்தையும் கொண்டுள்ள
தமிழ்நாடு, இந்திய நீர் வளத்தில் 25 சதவிகிதத்தை
மட்டுமே பெற்றுள்ளது. தமிழ்நாட்டின் மேற்பரப்பு நீரில்
95 சதவிகிதத்திற்கு அதிகமாகவும் மற்றும் நிலத்தடி நீரில் 80 சதவிகிதத்திற்கு அதிகமாகவும் ஏற்கனவே பயன்பாட்டிலிருந்து வருகிறது.
பல்நோக்கு
ஆற்றுப் பள்ளத்தாக்கு திட்டங்கள்,
அடிப்படையில் வேளாண் நீர்ப்பாசன மேம்பாட்டிற்காகவும் மற்றும் நீர் மின்சக்தி
உற்பத்திக்காகவும் மேற்கொள்ளப்படுகின்றன. இருப்பினும் இவை வேறு
பல நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன.
காவிரி
ஆறு சமவெளியில் நுழையும் இடத்திற்கு முன்னுள்ள மலையிடுக்குப் பகுதியில் மேட்டூர் அணை
கட்டப்பட்டுள்ளது.
இது இந்தியாவின் மிகப் பழமையான அணைகளில் ஒன்றாகும். இது சேலம், ஈரோடு, கரூர்,
திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களிலுள்ள விளை நிலத்திற்கு
நீர்ப்பாசன வசதியை அளிக்கிறது.
மேட்டூர் அணை
ஈரோடு
மாவட்டத்தில் அமைந்துள்ள பவானி சாகர் அணை, கோயம்புத்தூர் நகரிலிருந்து ஏறத்தாழ 80 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இது
பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இந்த அணை நாட்டின்
மண்- கல் கலவையால் கட்டப்பட்ட மிகப்பெரிய அணைகளுள் ஒன்றாகும்.
அமராவதி
அணை, திருப்பூர் மாவட்டத்தில்
உடுமலைப் பேட்டையில் இருந்து ஏறத்தாழ 25 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இவ்வணை காவிரியின் துணையாறான
அமராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இவ்வணை நீர்ப்பாசனம்
மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டை முதன்மை நோக்கமாகக் கொண்டது. அண்மையில்
ஒரு சிறிய நீர் மின் நிலையமும் இங்கு நிறுவப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி
அணை, கிருஷ்ணகிரியிலிருந்து
7 கி.மீ தொலைவில் தர்மபுரிக்கு செல்லும் வழியில்
அமைந்துள்ளது.
சாத்தனூர் அணை செங்கம் தாலுகாவில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இது சென்னகேசவ மலையின் நடுவே அமைந்துள்ளது. தண்டராம்பட்டு மற்றும் திருவண்ணாமலை ஒன்றியங்கள் இதன்மூலம் நீர்ப்பாசன வசதியைப் பெறுகின்றன. இங்கு பெரிய முதலைப்பண்ணையும் வண்ணமீன் பண்ணையும் அமைந்துள்ளன. சுற்றுலா பயணிகளுக்காக அணையின் உள்ளே பூங்காக்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்குள்ள பூங்காக்கள் திரைப்படப் படப்பிடிப்புக்குப் பயன்படுத்தப்படுகின்றன.
முல்லைப்பெரியாறு
அணை 1895ஆம் ஆண்டு ஆங்கிலேய
நிர்வாகத்தால் கட்டப்பட்டது. கேரளாவில், தேக்கடி மலையில் உருவாகும் பெரியாறு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நிரந்தரமாக வறட்சிக்குள்ளாகும் சில வேளாண் நிலங்களுக்கு
நீர்ப்பாசனம் அளிப்பதற்காக இது கட்டப்பட்டது.
ஆண்டிப்பட்டிக்கு
அருகே வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. 111 அடி உயரம் கொண்ட இவ்வணையில் 71 அடி உயரம் மட்டுமே நீரை சேமிக்க முடியும். இவ்வணை மதுரையிலிருந்து
70 கி.மீ தூரத்திலும் ஆண்டிப்பட்டியிலிருந்து
7 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது. இவ்வணை 1959 ஆம் ஆண்டு ஜனவரி 21ஆம் நாள் திறக்கப்பட்டது.
திருநெல்வேலி
நகரிலிருந்து ஏறத்தாழ
47கி.மீ தொலைவில் மணிமுத்தாறு அணை கட்டப்பட்டுள்ளது.
திருநெல்வேலியிலிருந்து 49கி.மீ தொலைவில் அமைந்துள்ள பாபநாசம் அணை
‘கரையார் அணை’ என்றும் அழைக்கப்படுகிறது. திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள
நிலங்கள் இதன் மூலம் பாசன வசதியைப் பெறுகின்றன.
இது
தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்டது. பரம்பிக்குளம் மற்றும்
ஆழியாறு பகுதியில் உள்ள ஏழு ஆறுகளின் நீரினைப் பெற்று அங்குள்ள ஏழு நீர்த்தேக்கங்களையும்
ஒன்றோடொன்று இணைக்கும் எதிர்கால நோக்கத்தின் விளைவாக உருவானத் திட்டமாகும்.
பரப்பலாறு
திட்டம் ஒட்டஞ்சத்திரம் அருகே அமைந்துள்ளது. இதன் நீர் கொள்ளளவுத் திறன் 167 மில்லியன் கன அடிகளாகும். பழனி தாலுகாவில் அமைந்துள்ள
இவ்வணை மதுரையிலிருந்து 75 கி.மீ தொலைவில்
அமைந்துள்ளது.
நீர்வள
மேலாண்மை என்பது திட்டமிடல்,
செயல்படுத்துதல், நீர்வளத்தைப் பெருக்குதல்,
விநியோகித்தல் மற்றும் நீர்வளங்களின் உகந்த பயன்பாட்டை நிர்வகிப்பதற்கான
நடவடிக்கையை மேற்கொள்வதாகும். தமிழ்நாட்டில் மக்கள் தொகை அதிகரிப்பு,
பொருளாதார வளர்ச்சி மற்றும் தனிநபரின் நுகர்வு காரணமாக நீரின் தேவை மிகவும்
அதிகரித்துள்ளது. மக்களின் நீர்ப் பயன்பாடு, தொழில் துறைக்கான தேவைகள் மற்றும் இதர தேவைகளுக்கான பயன்பாடு குறிப்பிடத்தக்க
அளவில் அதிகரித்து வருகின்றது. மாநிலமானது நீர் தேவைக்கு பருவமழையைப்
பெரிதும் சார்ந்துள்ளது. பருவ மழை பொய்ப்பதால் கடுமையான நீர்
பற்றாக்குறை ஏற்பட்டு, வறட்சிக்கு வழி வகுக்கின்றது. எனவே நீர் சேமிப்பது நமக்கும் வருங்கால சந்ததியினருக்கும் பயனுள்ளதாக அமையும்.