தமிழ்நாடு – மானுடப் புவியியல் - வேளாண்மையைத் தீர்மானிக்கும் புவியியல் காரணிகள் | 10th Social Science : Geography : Chapter 8 : Human Geography of Tamil Nadu
வேளாண்மையைத் தீர்மானிக்கும் புவியியல் காரணிகள்
நிலத்தோற்றம், காலநிலை, மண் மற்றும்
நீர்ப்பாசனம் ஆகியவை வேளாண்மை வளர்ச்சியை தீர்மானிக்கும் முக்கிய புவியியல்
காரணிகளாகும்.
தமிழ்நாடானது
மலைகள், பீடபூமிகள் மற்றும் சமவெளிகள் ஆகிய பல்வேறுபட்ட
நில அமைப்புகளைக் கொண்டுள்ளது. மேற்கண்டவற்றுள் சமவெளிகள் வேளாண் உற்பத்திக்கு
ஏற்ற வளமான வண்டல் மண்ணைக் கொண்டுள்ளதால் சமவெளிப் பகுதிகள் வேளாண் தொழிலுக்கு
ஏற்றதாக உள்ளது. எ.கா. வண்டல் மண் நிறைந்துள்ள காவிரி சமவெளி தமிழ்நாட்டின்
குறிப்பிடத்தக்க வேளாண் பகுதியாகும். பீடபூமி, வேளாண்மைக்கு ஓரளவிற்கு
ஏற்றதாகவும், மலைப் பிரதேசங்களில் வேளாண் நடவடிக்கைகள் மிகக்
குறைந்த அளவிலும் உள்ளன.
தமிழ்நாடு
பூமத்தியரேகைக்கு அருகிலும், வெப்ப மண்டலத்திலும் அமைந்துள்ளதால் வெப்ப
மண்டலக் காலநிலையைப் பெறுகிறது. ஆகையால் தமிழ்நாட்டின் வெப்பநிலை ஆண்டு முழுவதும்
அதிகமாக உள்ளது. எனவே வெப்ப மண்டலப் பயிர்கள் மட்டுமே பயிரிடப்படுகின்றன. நீர், வேளாண்மையைக்
கட்டுப்படுத்தும் முக்கியக் காரணியாகும். வடகிழக்கு பருவக்காற்று தமிழ்நாட்டிற்கான
முக்கிய நீர் ஆதாரமாக உள்ளதால், பயிரிடப்படும் முக்கிய காலம் இப்பருவத்தில்
தொடங்குகிறது. இப்பருவத்தில் பெறும் மழையின் அளவு மற்றும் நீர்ப்பாசன வசதி போன்றவை
வேளாண்மையை மிக அதிக அளவில் பாதிக்கிறது.
வேளாண்மையின்
மிக முக்கியமான கூறுகளுள் ஒன்று மண் ஆகும். இது பயிர்கள் மற்றும் தாவரங்களின்
வளர்ச்சிக்குத் தேவையான கனிமசத்துக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களை அளிக்கிறது.
ஆற்றுப்பள்ளத்தாக்குகள் மற்றும் கடற்கரைச் சமவெளிப் பகுதிகளில் வளமான வண்டல் மண்
நிறைந்துள்ளதால் இப்பகுதிகள் மாநில வேளாண் உற்பத்தியில் முக்கிய பங்காற்றுகின்றன.
மாநிலத்தின் பருவமழை சமச்சீரற்ற நிலையில் உள்ளது. மேலும் இவை பருவகாலத்தில் மட்டுமே பொழிகிறது. எனவே மாநிலத்தில் பயிர் சாகுபடி சிறப்பாக நடைபெற நீர்ப்பாசனம் மிகவும் இன்றியமையாததாகும். வறண்ட காலங்களில் மானாவாரிப் பயிர்கள் பயிரிடப்படுகிறது.
வேளாண்
வகை : பயிரிடப்படும்
பகுதிகள்
தீவிர
தன்னிறைவு வேளாண்மை : தமிழ்நாட்டில்
சில பகுதிகள் தவிர்த்து அனைத்து பகுதிகளிலும் பின்பற்றப்படுகிறது
தோட்ட
வேளாண்மை : மேற்கு
மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைச்சரிவுகள்
கலப்பு
வேளாண்மை : காவிரி
மற்றும் தென்பெண்னை ஆற்றுப்படுகைகள்