தமிழ்நாடு – மானுடப் புவியியல் - தமிழ்நாட்டின் கனிம வளங்கள் | 10th Social Science : Geography : Chapter 8 : Human Geography of Tamil Nadu
தமிழ்நாட்டின் கனிம வளங்கள்
வெர்மிகுலைட், மேக்னடைட்,
டுனைட், ரூட்டைல், செம்மணிக்கல்,
மாலிப்படினம் மற்றும் இல்மனைட் ஆகிய வளங்களில் தமிழ்நாடு முன்னணி உற்பத்தியாளராக
உள்ளது. பழுப்பு நிலக்கரி 55.3%, வெர்மிகுலைட்
75%, டுனைட் 59%, செம்மணிக்கல் 59, மாலிப்டீனம் 52% மற்றும் டைட்டானியம் 30% தாதுக்கள் நாட்டின் மொத்த உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்களிப்பாகும்.
மாநிலத்தில்
காணப்படும் முக்கியமான தாதுக்கள் பின்வருமாறு : நெய்வேலி, மிகப்பெரிய பழுப்பு
நிலக்கரி வளங்களைக் கொண்டுள்ளது. இராமநாதபுரம் பகுதிகளில் நிலக்கரி
படிமங்கள் காணப்படுகின்றன. காவிரி வடிநிலப் பகுதியில் எண்ணெய்
மற்றும் இயற்கைவாயு படிவுகள் காணப்படுகின்றன.
சேலம்
மாவட்டத்தில் உள்ள கஞ்சமலையிலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலையிலும்
இரும்புத்தாது படிவுகள் காணப்படுகின்றன. சேலம் அருகே மேக்னசைட் தாது கிடைக்கின்றது.
சேர்வராயன் குன்றுகள், கோத்தகிரி, உதகமண்டலம், பழனிமலை மற்றும் கொல்லிமலைப் பகுதிகளில்
பாக்சைட் தாதுக்கள் காணப்படுகின்றன. திருச்சிராப்பள்ளி,
திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர்
மாவட்டங்களில் ஜிப்சம் கிடைக்கிறது. கன்னியாகுமரி கடற்கரை மணல்
பரப்புகளில் இல்மனைட் மற்றும் ரூட்டைல் காணப்படுகிறது. கோயம்புத்தூர்,
கடலூர், திண்டுக்கல், காஞ்சிபுரம்,
கரூர், மதுரை, நாகப்பட்டினம்,
நாமக்கல், பெரம்பலூர், இராமநாதபுரம்,
சேலம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் சுண்ணாம்பு கிடைக்கிறது.
கோயம்புத்தூர், தர்மபுரி, கரூர், நாமக்கல், நீலகிரி,
சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி மற்றும் வேலூர் மாவட்டங்களில் மேக்னசைட் கிடைக்கிறது.
பெல்ட்ஸ்பார்க், படிகக்கல், தாமிரம் மற்றும் காரீயம் ஆகியவை மாநிலத்தின் சில பகுதிகளில் காணப்படுகின்றன.