தமிழ்நாடு – மானுடப் புவியியல் - தமிழ்நாட்டில் உள்ள மக்கள் தொகை | 10th Social Science : Geography : Chapter 8 : Human Geography of Tamil Nadu
மக்கள் தொகை
ஒரு நாட்டின்
வரையறுக்கப்பட்ட பகுதியில் வாழும் மக்களின் எண்ணிக்கையே மக்கள் தொகை
எனப்படுகிறது. மக்கள் தொகைப் பண்புகள் பற்றிய புள்ளி விவர ஆய்வுகள் ‘மக்கட்தொகையியல்’ என
அழைக்கப்படுகின்றது.
கோவை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம்,
தர்மபுரி, சேலம், மதுரை மற்றும்
திருநெல்வேலி ஆகியவை தமிழ்நாட்டில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட மாவட்டங்களாகும்.
இம்மாவட்டங்களில் அதிக அளவிலான மக்கள் தொகை இருப்பதற்குக் காரணம் விவசாயம்
மற்றும் தொழில் துறை மேம்பாடு ஆகும்.
திருவண்ணாமலை, கடலூர், திருச்சி மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் 30 - 35 இலட்சம் மக்கள் தொகையைப் பெற்றுள்ளன. வேலூர்,
திண்டுக்கல், விருதுநகர் மற்றும் தூத்துக்குடி
மாவட்டங்கள் ஒவ்வொன்றும் 15 - 20 இலட்சம் மக்கள் தொகையைக் கொண்டுள்ளன.
விவசாயம், சிறிய அளவிலான தொழில்கள் தவிர கடலோரப்
பகுதிகளில் மீன்பிடித்தல் ஆகியவை இம்மாவட்டங்களின் முக்கியத் தொழில்களாகும்.
கடலோர
மாவட்டங்களான நாகப்பட்டினம்,
திருவாரூர், புதுக்கோட்டை,இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகியவை 15 இலட்சத்திற்கும்
குறைவான மக்கள் தொகையைப் பெற்றுள்ளன. நீலகிரி மாவட்டம்
10 இலட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகையைக் கொண்டுள்ளது.
இந்தியாவின்
மக்களடர்த்தியில் நமது மாநிலம்
12வது இடத்தில் உள்ளது. 2011ஆம் ஆண்டு மக்கள்தொகைக்
கணக்கெடுப்பின்படி தேசிய சராசரி மக்களடர்த்தி 382 ஆகும்.
சென்னை ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 26,903 மக்களடர்த்தி
கொண்ட மாவட்டமாகும். இதையடுத்து கன்னியாகுமரி, திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை,
கோயம்புத்தூர், கடலூர், தஞ்சாவூர்,
நாகப்பட்டினம், சேலம், வேலூர்
மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்கள் அதிக மக்களடர்த்தி கொண்ட மாவட்டங்களாகும்.
நீலகிரி மாவட்டத்தில் குறைந்த அளவு மக்களடர்த்தி (288ச.கி.மீ) பதிவாகியுள்ளது. மற்ற மாவட்டங்கள் மிதமான மக்களடர்த்தியைக்
கொண்டுள்ளன.
இந்து, கிறித்தவம் மற்றும்
இஸ்லாம் நமது மாநிலத்தின் முக்கிய மதங்களாகும். நமது மாநிலத்தின்
மொத்த மக்கள் தொகையில் இந்துக்கள் அதிகமாகவும் அதனைத் தொடர்ந்து கிறித்தவர்கள்,
இஸ்லாமியர்கள், சமணர்கள், சீக்கிய மதத்தினர் மற்றும் புத்த மதத்தினரும் பிற மதங்களைச் சார்ந்தவர்களும்
உள்ளனர்.
பாலின
விகிதம் என்பது 1,000 ஆண்களுக்கு இணையாக உள்ள பெண்களின் எண்ணிக்கையைக் குறிக்கிறது. பாலின விகிதம் அதிகம் கொண்ட மாவட்டங்களாக நீலகிரியும் (1,041) அதைத் தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்டமும் (1,031) காணப்படுகின்றன.
குறைவான பாலின விகிதம் கொண்ட
மாவட்டங்களாகத் தர்மபுரியும்
(946) அதனைத் தொடர்ந்து சேலமும் (954) உள்ளன.
கன்னியாகுமரி
மாவட்டம் அதிக அளவில் கல்வியறிவு விகிதம் கொண்ட மாவட்டமாகவும், தர்மபுரி மாவட்டம்
மிகக் குறைந்த கல்வியறிவு கொண்ட மாவட்டமாகவும் உள்ளது. மேலும்
அதிக கல்வியறிவு கொண்ட மாவட்டங்களாக சென்னை, தூத்துக்குடி,
நீலகிரி மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்கள் உள்ளன.