தாவரவியல் - இலை உருமாற்றம் | 11th Botany : Chapter 3 : Vegetative Morphology of Angiosperm

   Posted On :  06.07.2022 12:43 am

11 வது தாவரவியல் : அலகு 3 : உடலப் புற அமைப்பியல்

இலை உருமாற்றம்

இலையின் மிக முக்கியப்பணி ஒளிச்சேர்க்கையின் மூலம் உணவு தயாரித்தல் ஆகும்.

இலை உருமாற்றம் (Modification of Leaf):

இலையின் மிக முக்கியப்பணி ஒளிச்சேர்க்கையின் மூலம் உணவு தயாரித்தல் ஆகும். சில சிறப்பு பணிகளைச் செய்ய இலையானது உருமாற்றம் அடைகின்றது. அவை கீழே விவரிக்கப்பட்டுள்ளன.

I. இலை பற்றுக்கம்பிகள் (Leaf tendrils):

சில தாவரங்கள் மிகவும் நலிந்த தண்டுகளைக் கொண்டுள்ளதால் இவை ஆதாரத்தைப் பற்றிக் கொள்ள சில சிறப்பு பற்றுருப்புகளைப் பெற்றுள்ளன. எனவே இவ்வகைத் தாவரங்களின் இலைகள் பாதியாகவோ அல்லது முழுமையாகவோ பற்றுக் கம்பிகளாக உருமாறியுள்ளன. பற்றுக்கம்பி என்பது மிக மெலிந்த, சுருள் கம்பி போன்றமைந்து பற்றி ஏற உதவும் ஒரு அமைப்பாகும். சில உருமாற்றமடைந்த இலைப்பற்றுக் கம்பிகள் கீழே தரப்பட்டுள்ளன. 

முழு இலை - லத்தைரஸ்; இலையடிச் செதில் - ஸ்மைலாக்ஸ்; நுனிச்சிற்றிலைகள் - நரவேலியா, பைசம்; இலை நுனி - குளோரியோஸா; இலைக்காம்பு - கிளிமாடிஸ்.


II. இலைக் கொக்கிகள் (Leaf hooks):

சில தாவரங்களின் இலைகள் கொக்கி போன்ற அமைப்புகளாக மாறி தாவரங்கள் பற்றி ஏறுவதற்கு உதவுகின்றன. பிக்னோனியா உங்கிஸ்கேட்டி நுனிச்சிற்றிலைகள் மூன்று கூர்மையான, வளைந்த பூனை நகம் போன்ற அமைப்பாக மாறியுள்ளன. இக்கொக்கிகள் மரங்களின் பட்டையை தொற்றிக் கொண்டு ஏறுவதற்குத் துணை செய்கின்றன. அஸ்பராகஸில் (தண்ணீர்விட்டான் கிழங்கு) உருமாற்றம் பெற்ற இலை முட்கள் கொக்கிகளாகச் செயல்படுகின்றன.


III. இலை முட்கள், புறவளரிசிறுமுட்கள் (Leaf spines, Prickles):

சில தாவரங்களின் இலைகள் முட்கள் போன்ற அமைப்பை இலைப்பரப்பின் மீதோ அல்லது இலை விளிம்பிலோ உருவாக்குகின்றன. இந்த முட்கள் மேயும் விலங்குகளிடமிருந்து தப்பிக்கவும், வறண்ட கால நிலைகளைத் தாங்கவும் தோன்றும் தகவமைப்புகளாகும். எடுத்துக்காட்டு: ஜிஜிஃபஸ், ஆர்ஜிமோன் மெக்சிகானா (பிரம்மன் தண்டு), சொலானம் டிரைலோபேட்டம் (தூதுவளை), வறண்ட நிலத்தாவரங்களான ஒபன்ஷியா, யூஃபோர்பியா போன்றவற்றில் இலைகளும் இலையடிச் செதில்களும் முட்களாக உருமாற்றம் அடைந்துள்ளன.

சிறு முட்கள் (Prickles) என்பவை தண்டு அல்லது இலையின் புறத்தோல் திசுவிலிருந்து வெளித் தோன்றுவிகளாக உருவாகும் சிறிய, கூரிய அமைப்புகளாகும். இவை ஆதாரத்தைப் பற்றிப்படர உதவுவதோடு மட்டுமின்றி, மேயும் விலங்குகளிலிடமிருந்தும் தாவரத்தைப் பாதுகாக்கின்றன. எடுத்துக்காட்டு: ரோசா சிற்றினம். 

IV. சேமிக்கும் இலைகள் (Storage Leaves)

உவர் நில மற்றும் வறண்ட நிலத்தில் வாழும் சில தாவரங்களும், கிராசுலேசி குடும்பத்தைச் சார்ந்த சில தாவரங்களும் பொதுவாகச் சதைப்பற்றுடன் கூடிய அல்லது தடித்த இலைகளைக்கொண்டுள்ளன. இந்தச் சதைப்பற்றுள்ள இலைகள் நீரையும், மியூசிலேஜ் அல்லது உணவையும் சேமிக்கின்றன. இவ்வகை இலைகள் வறட்சியைத் தாங்கும் தன்மையைப் பெற்றுள்ளன. எடுத்துக்காட்டு: ஆலோ, அகேவ், பிரையோஃபில்லம்.

V. இலைத்தொழில் காம்பு (Phyllode)

இலைத்தொழில் காம்பு என்பது தட்டையான, பசுமையான இலை போன்று உருமாற்றம் அடைந்த இலைக்காம்பு அல்லது கூட்டிலைக் காம்பாகும். இவற்றில் சிற்றிலைகள் அல்லது இலையின் பரப்பு மிகவும் குறைந்துள்ளது அல்லது உதிர்ந்துவிடுகிறது. இந்த இலைத்தொழில் காம்பானது ஒளிச்சேர்க்கை மற்றும் இலையின் பல்வேறு வேலைகளை மேற்கொள்கின்றது. எடுத்துக்காட்டு: அகேஷியா ஆரிகுலிஃபார்மிஸ் (ஆஸ்திரேலிய அகேஷியா), பார்கின்சோனியா.

VI. குடுவை (Pitcher)

குடுவைத் தாவரத்திலும் (நெப்பந்தஸ்), சர்ரசினியா தாவரத்திலும் இலையானது குடுவை வடிவத்தில் மாறுபாடு அடைந்துள்ளது. நெப்பந்தஸ் தாவரத்தில் இலையின் அடிப்பகுதியானது (இலைக்காம்பு) இலைப்பரப்பாகவும், மைய நரம்பானது சுருள் கம்பி போன்று பற்றுக் கம்பியாகவும், இலையின் மேற்பரப்பானது குடுவையாகவும், இலை நுனியானது குடுவையை மூடும் மூடியாகவும் உருமாற்றமடைந்துள்ளது.

VII. பை (Bladder)

பிளேடர்வார்ட் (யூட்ரிகுலேரியா) ஒரு வேரற்ற, தனித்து மிதக்கும் அல்லது சற்றே மூழ்கி வாழும், மிகவும் பிளவுபட்ட இலைகளையுடைய தாவரமாகும். இந்தப் பிளவுப்பட்ட இலைகளின் சில பகுதிகள் பை போன்று உருமாற்றம் அடைகின்றன. பை போன்ற இந்த அமைப்புகள் நீர் மூலம் உள்ளே செல்லும் சிறு உயிரினங்களைப் பிடித்து உண்ணுகின்றன.

VIII. பூவிலைகள் (Floral leaves)

பூவிதழ்களான அல்லிவட்டம், புல்லிவட்டம், மகரந்தத்தாள் வட்டம், சூலக வட்டம் ஆகியவை அனைத்தும் இலையின் உருமாற்றங்களே ஆகும். துணைவட்டங்களாகக் கருதப்படும் அல்லிவட்டமும், புல்லிவட்டமும் இலையைப் போன்று தோற்றமளிக்கின்றன. இவற்றின் பணி பாதுகாத்தலாகும். இதில் அல்லிவட்டம் மகரந்தச் சேர்க்கைக்குப் பூச்சிகளைக் கவர்வதற்கேற்றவாறு பலவண்ணங்களில் காணப்படுகிறது. மகரந்தத்தூள்களைக் கொண்டுள்ள மகரந்தத்தாள் வட்டம் சிறுவித்தக இலை (மைக்ரோஸ்போரோஃபில்) என்றும், சூலிலைகளைக் கொண்டுள்ள சூலக வட்டம் பெரு வித்தக இலை (மெகாஸ்போரோஃபில்) என்றும் அழைக்கப்படும். 

 

Tags : தாவரவியல்.
11th Botany : Chapter 3 : Vegetative Morphology of Angiosperm : Modification of Leaf in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது தாவரவியல் : அலகு 3 : உடலப் புற அமைப்பியல் : இலை உருமாற்றம் - தாவரவியல் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது தாவரவியல் : அலகு 3 : உடலப் புற அமைப்பியல்