தாவரவியல் - இலை வகை | 11th Botany : Chapter 3 : Vegetative Morphology of Angiosperm
இலை வகை (Leaf type)
இலையின் வெவ்வேறான கூறுகளை அல்லது பிரிவுகளை உள்ளடக்கிய முறையையே இலை வகை என்கிறோம். பிரிவுகளின் எண்ணிக்கை அடிப்படையில் இலையானது கீழ்வருமாறு பிரிக்கப்படுகின்றது.
I. தனி இலை (Simple leaf)
ஒரு இலைக்காம்பில் ஒரே ஒரு இலைத்தாள் மட்டும் இருந்தால் அதற்குத் தனி இலை என்று பெயர். இந்த இலைத்தாள் பகுப்படையாமல் முழுவதுமாகவோ (எடுத்துக்காட்டு: மா) ஏதோ ஓர் அளவில் ஆழமாகப் பிளவுப்பட்டு, அதேசமயம்பிளவுமைய நரம்புவரையோ அல்லது இலைக்காம்பு வரையோ பரவா வண்ணம் அமைந்திருக்கும். எடுத்துக்காட்டு: குக்கர்பிட்டா.
II. கூட்டிலை (Compound leaf)
ஓர் இலைக்காம்பில் பல இலைத்தாள்களிருந்தால் அதற்குக் கூட்டிலை என்று பெயர். அதிலுள்ள ஒவ்வொரு இலைத்தாளிற்கும் சிற்றிலை என்று பெயர். கூட்டிலைகள் மொத்த இலைப்பரப்பை அதிகரிக்கச் செய்கின்றன. மொத்தக் கூட்டிலைக்கும் ஒரே ஒரு கோணமொட்டு காணப்படுகிறது. ஆனால் சிற்றிலைகளில் எவ்விதக் கோணமொட்டும் கிடையாது.
1. சிறகு வடிவக் கூட்டிலைகள் (Pinnately compound leaf)
சிறகு வடிவக் கூட்டிலைகள் என்பவை கூட்டிலைக் காம்பு
என்ற அச்சில் பல பக்கவாட்டுச் சிற்றிலைகளை மாற்றிலை அமைவிலோ அல்லது எதிரிலை அமைவிலோ
கொண்டு அமைந்திருக்கும். எடுத்துக்காட்டு: டாமரின்டஸ்
(புளி), கேசியா.
i. ஒரு மடிக் கூட்டிலை (Unipinnate) : இவற்றில் கூட்டிலை காம்பு தனித்தும், கிளைகளற்றும், சிற்றிலைகள் நேரடியாக நடு அச்சில் மாற்றிலை அமைவிலோ அல்லது எதிரிலை அமைவிலோ அமைந்திருக்கும். எடுத்துக்காட்டு: ரோஜா, வேம்பு. ஒருமடிக்கூட்டிலை இரண்டு வகைப்படும்.
அ. சிற்றிலைகள் இரட்டைப்படை எண்ணிக்கையில் அமைந்திருந்தால்
அதற்கு இரட்டைப்படை ஒருமடிக்கூட்டிலை என்று
பெயர். எடுத்துக்காட்டு: டாமரின்டஸ்.
ஆ. சிற்றிலைகள் ஒற்றைப் படையில் அமைந்திருந்தால் அதற்கு ஒற்றைப்படை ஒருமடிக்கூட்டிலை என்று பெயர்.
எடுத்துக்காட்டு: அசாடிராக்டா (வேம்பு).
ii. இருமடிக்
கூட்டிலை (Bipinnate) முதல்நிலை கூட்டிலை அச்சிலிருந்து இரண்டாம் நிலை அச்சுகள்
உருவாகி, அதிலிருந்து சிற்றிலைகள் தோன்றுகின்றன. இரண்டாம் நிலை அச்சுகளுக்குப் பின்னா
என்று பெயர். சிற்றினங்களைப் பொறுத்து இந்தப் பின்னாக்களின் எண்ணிக்கை மாறுபடும். எடுத்துக்காட்டு:
டெலோனிக்ஸ் (செம்மயிற்கொன்றை).
iii. மும்மடிக்கூட்டிலை (Tripinnate): இவ்வகையில் கூட்டிலை அச்சு மூன்றாகக் கிளைக்கிறது. அதாவது இரண்டாம் நிலை அச்சு கிளைத்து, இலைகளைத் தாங்கும் மூன்றாம் நிலை அச்சுகளை உருவாக்குகிறது. இதற்கு மும்மடிக்கூட்டிலை என்று பெயர். எடுத்துக்காட்டு: மொரிங்கா (முருங்கை).
iv. பன்மடிக்கூட்டிலை
(Decompound): கூட்டிலைகள் மூன்று முறைக்கும் மேலாகக் கிளைத்திருந்தால்
அதனைப் பன்மடிக்கூட்டிலை என்கிறோம். எடுத்துக்காட்டு:
டாக்கஸ் கரோட்டா, கொரியாண்டர் சட்டைவம் (கொத்தமல்லி).
2. அங்கை வடிவக் கூட்டிலை (Palmately compound leaf)
அனைத்துச் சிற்றிலைகளும் இலைக்காம்பின் நுனியில் ஒரே புள்ளியில் இணைக்கப்பட்டிருந்தால் அதை அங்கை வடிவக் கூட்டிலை என்கிறோம். உள்ளங்கையிலிருந்து விரல்கள் தோன்றுவது போல இங்கு சிற்றிலைகள் ஆரநீட்சிகளாக தோன்றுகிறது. இக்கூட்டிலை பல வகைப்படும். அவையாவன.
i. ஒருசிற்றிலை அங்கைக் கூட்டிலை (Unifoliolate): இலைக்காம்பில் ஒரே ஒரு சிற்றிலை மட்டுமே அமைந்திருந்தால் அதற்கு ஒரு சிற்றிலை அங்கைக்கூட்டிலை என்று பெயர். எடுத்துக்காட்டு: சிட்ரஸ்.
ii. இருசிற்றிலை அங்கைக்கூட்டிலை (Bifoliolate): இலைக் காம்பில் இரண்டு சிற்றிலைகள் அமைந்திருந்தால் அதற்கு இருசிற்றிலை அங்கைக்கூட்டிலை என்று பெயர். எடுத்துக்காட்டு: ஜோர்னியா டைஃபில்லா.
iii. முச்சிற்றிலை அங்கைக் கூட்டிலை (Trifoliolate):
இலைக்காம்பில் மூன்றுசிற்றிலைகள் அதற்கு முச்சிற்றிலை அங்கைக் கூட்டிலை என்று பெயர். எடுத்துக்காட்டு: ஏகில் மார்மிலஸ், டிரைஃபோலியம்.
iv. நாற்சிற்றிலை அங்கைக்கூட்டிலை (Quadrifoliate):
இலைக்காம்பில் நான்கு சிற்றிலைகள் அமைந்திருந்தால் அதற்கு நாற்சிற்றிலை அங்கைக் கூட்டிலை என்று பெயர். எடுத்துக்காட்டு: பாரிஸ் குவாட்டிரிஃபோலியா, மார்சீலியா.
v. பல் சிற்றிலை
அங்கைக் கூட்டிலை (Multifoliate or
Digitate): ஐந்து அல்லது அதற்கு
மேற்பட்ட சிற்றிலைகள் இணைந்து உள்ளங்கையிலிருந்து விரல்கள் அமைந்திருப்பது போல் காணப்படுவதற்கு
பல்சிற்றிலை அங்கைக் கூட்டிலை என்று பெயர்.
எடுத்துக்காட்டு: கிளியோம் பெண்டாஃபில்லா, பாம்பாக்ஸ்
சீபா.