முதல் பருவம் அலகு 1 | 7 ஆம் வகுப்பு கணக்கு - எண்ணியல் | 7th Maths : Term 1 Unit 1 : Number System
இயல் 1
எண்ணியல்
கற்றல் நோக்கங்கள்
• முழுக்களின் கூட்டல் மற்றும் கழித்தலைப் புரிந்துகொள்ளுதல்.
• முழுக்களின் பெருக்கல், வகுத்தல் ஆகியவற்றைப் புரிந்துகொள்ளுதல்
• முழுக்கள் மீதான நான்கு அடிப்படை செயலிகளின் பண்புகளைப் புரிந்துகொள்ளுதல்.
• முழுக்களின் நான்கு அடிப்படைச் செயல்பாடுகளைப் பயன்படுத்தி வாழ்வியல் பயன்பாட்டுக் கணக்குகளுக்குத் தீர்வு காணுதல்.
மீள்பார்வை
இயல் எண்கள், பூச்சியம் மற்றும் குறை எண்களின் தொகுப்பு முழுக்களாகும்.
இதனை Z என்ற குறியீட்டால் குறிக்கிறோம்.
எண் கோட்டில் பூச்சியத்திற்கு இடப்புறமாகக் குறை முழுக்களையும் பூச்சியத்திற்கு வலப்புறமாக மிகை முழுக்களையும் குறிக்கிறோம்.
எண்வரிசையில் ஒவ்வொரு முழுவும் இடமிருந்து வலமாக நகரும்போது ஏறுவரிசையில் இருக்கும்.
படத்தில் A,B,C,D என்ற புள்ளிகள் குறிக்கும் முழுக்கள் பின்வருமாறு
A = +3, B = +7, D = -1 மற்றும் C = -5.
இவற்றை முயல்க
1. கீழ்க்காணும் முழுக்களை ஏறுவரிசையில் எழுதுக: -5, 0, 2, 4, -6, 10, -10
விடை : –10, –6, –5, 0, 2, 4, 10
2. -15, 12, -17, 5, -1, -5, 6 ஆகிய எண்கள் எண்கோட்டில் குறிக்கப்பட்டால் இடது புறத்தில் குறிக்கப்பட்ட கடைசி எண் –17
3. கீழ்க்காணும் தொடரைப் பூர்த்தி செய்க:
50, ____ , 30, 20, ____, 0, -10, ____, ____-40, ___, ___.
50, 40, 30, 20, 10, 0, –10 , –20, –30, –40 , –50, –60.
4. கீழ்க்காணும் எண்களை ஒப்பீட்டு "<”,">" அல்லது "=" குறியிடுக.
(a) -65 _______ 65 (b) 0 ______ 1000 (c) -2018 _______ -2018
(a) –65 < 65 (b) 0 < 1000 (c) –2018 = – 2018
5. கீழ்க்காணும் முழுக்களை இறங்கு வரிசையில் எழுதுக:
-27, 19, 0, 12, -4, -22, 47, 3, -9, -35
விடை : 47, 19, 12, 3, 0, –4, –9, –22, –27, –35
அறிமுகம்
முழுக்களை வரிசைப்படுத்துதலையும், ஒப்பிடுதலையும் பற்றி ஆறாம் வகுப்பில் பயின்றோம். முழுக்களின் கூட்டல் மற்றும் கழித்தலைப் பற்றி இங்குக் காண்போம்.
7-5 = 2 என்பது நாம் அறிந்ததே. ஆனால் 5-7= ? எண்கோட்டினைப் பயன்படுத்தி 5 லிருந்து 7 வரை கழிக்க முயல்வோம். எண்கோட்டில் இடதுபுறமிருந்து. வலதுபுறம் நகரும் பொழுது எண் மதிப்பு அதிகரிப்பதால், எண்களைக் கழிப்பதற்கு இடதுபுறம் நகர வேண்டும். ஆகவே, 5 லிருந்து 7 ஐக் கழிப்பதற்குப் பூச்சியத்திற்கு இடதுபுறம் நகர வேண்டும்
இப்படிச்செய்வது தேவையா? இதுபோன்ற சூழலை உங்கள் வாழ்க்கையில் சந்தித்திருக்கிறீர்களா? ஆம், பல்வேறு சூழல்கள் வெப்ப நிலை ஏற்ற இறக்கங்கள், வங்கிக் கணக்கில் பணம் செலுத்துதல், பணம் எடுத்தல், வணிகத்தில் ஏற்படும் இலாப, நட்டம் ஆகிய அனைத்திலும் முழு எண்கள் பயன்படுத்தப்படுகின்றன.
எங்கும் கணிதம்-அன்றாட வாழ்வில் எண்ணியல்