Home | 11 ஆம் வகுப்பு | 11வது தாவரவியல் | இலையின் பாகங்கள்

தாவரவியல் - இலையின் பாகங்கள் | 11th Botany : Chapter 3 : Vegetative Morphology of Angiosperm

11 வது தாவரவியல் : அலகு 3 : உடலப் புற அமைப்பியல்

இலையின் பாகங்கள்

இலையின் மூன்று முக்கிய பாகங்கள் I. இலையடிப்பகுதி (Hypopodium) II. இலைக்காம்பு (Mesopodium) III. இலைப்பரப்பு (Epipodium)

இலையின் பாகங்கள்:


இலையின் மூன்று முக்கிய பாகங்கள்

I. இலையடிப்பகுதி (Hypopodium)

II. இலைக்காம்பு (Mesopodium)

III. இலைப்பரப்பு (Epipodium)


I. இலையடிப்பகுதி

தண்டின் கணுவில் இணைக்கப்பட்டுள்ள இலையின் அடிப்பகுதி இலையடிப்பகுதி எனப்படும். பொதுவாக கோணப்பகுதியில் வளர்ந்து வரும் மொட்டுகளை இவை பாதுகாக்கின்றன.

இலை அதைப்பு: லெகூம் வகைத் தாவரங்களில் இலையடிப்பகுதியானது அகன்றும், பருத்தும் காணப்படுகிறது. இதற்கு இலை அதைப்பு என்று பெயர். எடுத்துக்காட்டு: கிளைட்டோரியா (சங்கு பூ), லாப்லாப் (அவரை), கேஷியா, ப்யூட்டியா.


 

உறை இலையடி : அரிக்கேசி, மியூசேசி, ஜின்ஜிஃபெரேசி, போயேசி போன்ற பல ஒருவிதையிலை குடும்பத் தாவரங்களில் இலையடி நீண்டு, உறைபோன்று மாறி, பகுதியாகவோ அல்லது முழுவதுமாகவோ தண்டின் கணுவிடைப் பகுதியைத் தழுவிக் கொண்டிருக்கும். மேலும் இத்தகைய இலையடி உதிரும்போது நிலையான தழும்பைத் தண்டின் மேல் விட்டுச் செல்கிறது.


II. இலைக்காம்பு (Petiole/ Stipe/ Mesopodium)

இது இலைப்பரப்பைத் தண்டுடன் இணைக்கும் பாலமாகும். இவை உருளை வடிவமாகவோ தட்டையாகவோ காணப்படும். காம்பைப் பெற்றிருக்கும் இலைகளை காம்புடைய இலைகள் என்று அழைக்கின்றோம். எடுத்துக்காட்டு: ஃபைகஸ், ஹைபிஸ்கஸ், காம்பற்ற இலைகளை காம்பிலி இலைகள் என்று அழைக்கின்றோம். எடுத்துக்காட்டு: கலோட்ரோபிஸ் (எருக்கு).


III. இலைப்பரப்பு / இலைத் தாள் (Lamina/ Leaf blade)

இலையின் விரிவாக்கப்பட்ட, தட்டையான, பசுமையான பகுதி இலைப்பரப்பு அல்லது இலைத் தாள் எனப்படும். இது ஒளிச்சேர்க்கை, வளி பரிமாற்றம், நீராவிப்போக்கு மற்றும் தாவரங்களின் பல வளர்ச்சிதை மாற்ற வினைகளின் இருப்பிடமாக உள்ளது. இலைத்தாளின் மையத்தில் மைய நரம்பும், அதிலிருந்து பல பக்கவாட்டு நரம்புகளும், இவற்றிலிருந்து பல மெல்லிய சிறிய நரம்புகளும் பரவியிருக்கின்றன. இலைத்தாளானது வடிவம், விளிம்பு , பரப்பு, தன்மை, வண்ணம், நரம்பமைவு , பிளவுகள் போன்றவற்றில் வேறுபாடுகளைக் கொண்டுள்ளது.


இலையடிச் செதில்கள் (Stipules)

பெரும்பாலான இருவிதையிலைத் தாவரங்களில் இலையடிப்பகுதி ஒன்று அல்லது இரண்டு பக்கவாட்டு வளரிகளைக் கொண்டுள்ளது. இந்தப் பக்கவாட்டு வளரிகளுக்கு இலையடிச் செதில்கள் என்று பெயர். இந்தப் பக்கவாட்டு வளரிகளைக் கொண்ட இலைகள் இலையடிச் செதில் உள்ளவை (Stipulate) என்றும், பக்கவாட்டு வளரிகள் அற்ற இலைகள் இலையடிச் செதிலற்றவை (Stipulate or Exstipulate) என்றும் அழைக்கப்படுகின்றன.

இலையடிச் செதில்கள் பொதுவாக இருவிதையிலைத் தாவரங்களில் காணப்படுகின்றன. சில வகையான புற்களில் (ஒருவிதையிலைத்தாவரம்) இலையடிப் பகுதிக்கும், இலைப்பரப்பிற்கும் இடையில் ஒரு துணைவளரி காணப்படுகிறது. இதற்கு லிக்யூல் என்று பெயர். சில சமயம் சிறிய இலையடிச் செதில் போன்ற வளரிகள் கூட்டிலையின் சிற்றிலைகளின் அடிப்பகுதியில் காணப்படுகின்றன, இதற்கு சிற்றிலையடிச் செதில்கள் என்று பெயர். மொட்டில் உள்ள இலையைப் பாதுகாப்பதே இலையடிச்செதிலின் முக்கியப் பணியாகும்.

 

Tags : தாவரவியல்.
11th Botany : Chapter 3 : Vegetative Morphology of Angiosperm : Parts of the leaf in Tamil : 11th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது தாவரவியல் : அலகு 3 : உடலப் புற அமைப்பியல் : இலையின் பாகங்கள் - தாவரவியல் : 11 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது தாவரவியல் : அலகு 3 : உடலப் புற அமைப்பியல்