தயாரிப்பு, இயற் பண்புகள் மற்றும் வேதிப் பண்புகள் - அமில அமைடுகள் | 12th Chemistry : UNIT 12 : Carbonyl Compounds and Carboxylic Acids
அமில அமைடுகள்
அமில அமைடுகள் என்பவை கார்பாக்சில் தொகுதியிலுள்ள -OH தொகுதியை – NH2 தொகுதி கொண்டு பதிலீடு செய்வதால் கிடைக்கப்பெறும் கார்பாக்சிலிக் அமில பெறுதிகளாகும். அமைடுகளின் பொதுவான மூலக்கூறு வாய்ப்பாடு பின்வருமாறு.
இங்கு அசிட்டமைடின் வேதியியலைப் பற்றி நமது கவனத்தை திருப்புவோம்.
தயாரிப்பு முறைகள்:
1. அமில பெறுதிகளின் அம்மோனியா பகுப்பு
அமில குளோரைடுகள் அல்லது அமில நீரிலிகளுடன் அம்மோனியாவை வினைப்படுத்தி அமில அமைடுகள் தயாரிக்கப்படுகின்றன.
2) அம்மோனியம் கார்பாக்சிலேட்டுகளை வெப்பப்படுத்துதல்
கார்பாக்சிலிக் அமிலங்களின் அம்மோனியம் உப்புகளை (அம்மோனியம் கார்பாக்சிலேட்டுகள்) வெப்பப்படுத்தும்போது , அவை ஒரு நீர் மூலக்கூறை இழந்து அமைடுகளை உருவாக்குகின்றன.
3) ஆல்கைல் சயனைடுகளின் (நைட்ரைல்கள்) பகுதியளவு நீராற்பகுத்தல்
ஆல்கைல் சயனைடுகளை, குளிர்ந்த , அடர் HCl கொண்டு பகுதியளவு நீராற்பகுக்கும்போது அமைடுகள் உருவாகின்றன.
வேதிப்பண்புகள்
1. ஈரியல்புத் தன்மை :
அமைடு சேர்மங்கள் வலிமை குறைந்த அமிலம் மற்றும் வலிமை குறைந்த காரம் என இரண்டினைப் போலவும் நடந்து கொள்கின்றன, அதாவது ஈரியல்புத் தன்மையை பெற்றுள்ளன. இதனை பின்வரும் வினைகளின் வாயிலாக நிரூபிக்க இயலும்.
அசிட்டமைடு (காரத்தைப் போல), ஹைட்ரோ குளோரிக் அமிலத்துடன் வினைப்பட்டு உப்பைத் தருகிறது.
அசிட்டமைடுஹைட்ரோகுளோரைடு அசிட்டமைடு (அமிலத்தைப் போல), சோடியத்துடன் வினைப்பட்டு சோடியம் உப்பு மற்றும் ஹைட்ரஜன் வாயுவை வெளியேற்றுகிறது.
2) நீராற்பகுத்தல்
அமில அல்லது காரக் கரைசல்களில் தொடர்ந்து வெப்பப்படுத்தும்போது அமைடுகள் நீராற்பகுப்படைகின்றன.
3) நீர்நீக்கம்
P2O5 போன்ற வலிமையான நீர்நீக்கும் காரணிகளுடன் சேர்த்து வெப்பபடுத்தும்போது, அமைடுகள் நீர்நீக்கமடைந்து, சயனைடுகள் உருவாகின்றன.
4) ஹாஃப்மேன் குறைப்பு வினை
காரங்களின் முன்னிலையில் அமைடுகள், புரோமினுடன் வினைப்பட்டு மூல அமைடு மூலக்கூறைவிட ஒரு கார்பன் குறைவாக உள்ள ஓரிணைய அமீனை தருகின்றன.
5) ஒடுக்கம்
அமைடுகளை, LiAlH4 அல்லது சோடியம்- எத்தனால் கலவை கொண்டு ஒடுக்கும்போது அமீன்கள் உருவாகின்றன.