ஆல்டிஹைடுகள் மற்றும் கீட்டோன்களின் இயற்பண்புகள்
அறை வெப்பநிலையில் ஃபார்மால்டிஹைடு வாயுவாகவும், அசிட்டால்டிஹைடு எளிதில் ஆவியாகும் திரவமாகவும் உள்ளது. 11 கார்பன் அணுக்கள் வரை கொண்ட மற்ற எல்லா ஆல்டிஹைடுகளும் கீட்டோன்களும் நிறமற்ற திரவங்களாகவும், உயர் கார்பன் எண்ணிக்கை கொண்டவை திண்மங்களாகவும் காணப்படுகின்றன.
ஓப்பிடத்தக்க மூலக்கூறு நிறைகளை கொண்ட ஹைட்ரோகார்பன்கள் மற்றும் ஈதர்களுடன் ஒப்பிடும்போது ஆல்டிஹைடுகளும், கீட்டோன்களும் அதிக கொதிநிலையை பெற்றுள்ளன. ஆல்டிஹைடுகளிலும், கீட்டோன்களிலும் இருமுனை-இருமுனை இடையீடுகளின் காரணமாக உருவாகும் வலிமை குறைந்த மூலக்கூறு இணைவே இதற்கு காரணமாக அமைகிறது.
இந்த - இருமுனை இடையீடுகளானவை ஹைட்ரஜன் பிணைப்பைவிட வலிமை குறைந்தவை. மூலக்கூறுகளுக்கிடைப்பட்ட ஹைட்ரஜன் பிணைப்பை கொண்டுள்ள ஆல்கஹால்கள் மற்றும் கார்பாக்சிலிக் அமிலங்களுடன் ஒப்பிடும்போது ஆல்டிஹைடுகளும், கீட்டோன்களும் மிகக் குறைந்த கொதிநிலைகளைக் கொண்டுள்ளன.
ஆல்டிஹைடு மற்றும் கீட்டோன் படிவரிசை சேர்மங்களின் ஆரம்ப நிலை மூலக்கூறுகளான ஃபார்மால்டிஹைடு, அசிட்டால்டிஹைடு மற்றும் அசிட்டோன் போன்ற மூலக்கூறுகள் நீருடன் ஹைட்ரஜன் பிணைப்பை உருவாக்குவதால் அவை நீருடன் அனைத்து விகிதங்களிலும் கலக்கின்றன.
கார்பன் சங்கிலியின் நீளம் அதிகரிக்க அதிகரிக்க ஆல்டிஹைடுகள் மற்றும் கீட்டோன்களின் கரைதிறன், குறைகிறது.
ஆல்டிஹைடுகள் மற்றும் கீட்டோன்களிலுள்ள கார்பனைல் தொகுதியானது கார்பன் மற்றும் ஆக்ஸிஜன் அணுக்களுக்கிடையே இரட்டை பிணைப்பை கொண்டுள்ளது. ஆக்ஸிஜன் அணுவானது கார்பன் அணுவைவிட அதிக எலக்ட்ரான் கவர்திறனை பெற்றிருப்பதால், பிணைப்பிலுள்ள பங்கிடப்பட்ட எலக்ட்ரான் இரட்டையை கவர்ந்திழுக்கிறது, இதன் காரணமாக கார்பனைல் தொகுதி முனைவுறுத்தப்படுகிறது. எனவே ஆல்டிஹைடுகளும் கீட்டோன்களும் இருமுனை திருப்புத்திறன்களை பெற்றுள்ளன.