தயாரிப்பு, இயற் பண்புகள் மற்றும் வேதிப் பண்புகள் - எஸ்டர்கள் | 12th Chemistry : UNIT 12 : Carbonyl Compounds and Carboxylic Acids
எஸ்டர்கள்
தயாரிப்பு முறைகள்
1. எஸ்டராக்கல்
ஆல்கஹால்களை, கனிம அமிலங்கள் முன்னிலையில் கார்பாக்சிலிக் அமிலங்களுடன் வினைப்படுத்தும் போது எஸ்டர்கள் உருவாகின்றன என்பதை நாம் முன்னரே கற்றறிந்தோம். அதிகளவு வினைப்பொருட்களை பயன்படுத்தியோ அல்லது வினைக்கலவையிலிருந்து நீரை நீக்கியோ இந்த வினையானது முடித்துவைக்கப்படுகிறது.
2. அமில குளோரைடு அல்லது அமில நீரிலிகளை ஆல்கஹால் கொண்டு பகுத்தல்
அமில குளோரைடுகள் அல்லது அமில நீரிலிகளை, ஆல்கஹாலுடன் வினைப்படுத்தும் போதும் எஸ்டர்கள் உருவாகின்றன.
இயற் பண்புகள்
எஸ்டர்கள் நிறமற்ற திரவங்களாகவோ அல்லது திண்மங்களாகவோ உள்ளன. இவை தங்களுக்கே உரித்தான தனித்தன்மை வாய்ந்த பழ நறுமணத்தை பெற்றுள்ளன. சில குறிப்பிட்ட எஸ்டர்களின் நறுமணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
எஸ்டர் : நறுமணம்
1. அமைல் அசிட்டேட் : வாழைப்பழ மணம்
2. எத்தில் பியுட்டிரேட் : அன்னாசிப்பழ மணம்
3. ஆக்டைல் அசிட்டேட் : ஆரஞ்சுபழ மணம்
4. ஐசோபியுட்டைல் ஃபார்மேட் : ராஸ்பெர்ரி பழ மணம்
5. அமைல் பியுட்டிரேட் : வாதுமைப் பழ மணம்
வேதிப் பண்புகள்
1. நீராற்பகுத்தல்
எஸ்டர்கள் நீராற்பகுப்படைந்து ஆல்கஹால்கள் மற்றும் கார்பாக்சிலிக் அமிலங்கள் உருவாகின்றன என்பதை நாம் ஏற்கனவே கற்றறிந்தோம்.
2. ஆல்கஹால் உடன் வினை (டிரான்ஸ் எஸ்டராக்கல்)
ஒரு ஆல்கஹாலின் எஸ்டரானது, கனிம அமிலங்களின் முன்னிலையில் மற்றொரு ஆல்கஹாலுடன் வினைப்பட்டு இரண்டாம் ஆல்கஹாலின் எஸ்டரை உருவாக்குகிறது. எஸ்டர்களுக்கிடையே நிகழும் இந்த ஆல்கஹால் பகுதி பரிமாற்றமானது, டிரான்ஸ் எஸ்டராக்கல் எனப்படுகிறது.
குறைந்த கார்பன் எண்ணிக்கை கொண்ட ஆல்கஹாலின் எஸ்டர்களிலிருந்து உயர் ஆல்கஹால் எஸ்டர்களை தயாரிக்க இந்த வினை பயன்படுத்தப்படுகிறது.
3. அம்மோனியா (அம்மோனியா பகுத்தல்) உடன் வினை
எஸ்டர்கள், அம்மோனியா உடன் மெதுவாக வினைபுரிந்து அமைடுகளையும், ஆல்கஹால்களையும் உருவாக்குகின்றன.
4. கிளெய்சன் குறுக்கம்
குறைந்தபட்சம் ஒரு ∝- ஹைட்ரஜன் அணுவை கொண்டுள்ள எஸ்டர்கள், சோடியம் ஈத்தாக்சைடு போன்ற வலிமை மிகு காரங்களின் முன்னிலையில், சுய குறுக்க வினைக்கு உட்பட்டு β- கீட்டோ எஸ்டர்களை உருவாக்குகின்றன.
5. PCI3 உடன் வினை
எஸ்டர்கள், PCI3 உடன் வினைப்பட்டு அசைல் மற்றும் ஆல்கைல் குளோரைடுகளின் கலவையை தருகின்றன.
தன் மதிப்பீடு
அசைலேற்ற வினைகளை நிகழ்த்துவதற்கு அசிட்டைல் குளோரைடைவிட அமில நீரிலிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகின்றன ஏன்?