வேதியியல் - கார்பனைல் சேர்மங்கள் மற்றும் கார்பாக்சிலிக் அமிலங்கள் | 12th Chemistry : UNIT 12 : Carbonyl Compounds and Carboxylic Acids
அலகு 12
கார்பனைல் சேர்மங்கள் மற்றும் கார்பாக்சிலிக் அமிலங்கள்
அடால்ப் வான் பேயர்
அடால்ப் வான் பேயர் என்பார் ஜெர்மன் நாட்டினைச் சேர்ந்த வேதியியல் ஆராய்ச்சி அறிஞர். இவர் 1880 ம் ஆண்டு இன்டிகோ சாயத்தினை தொகுத்து 1983 ல் அதன் வடிவ வாய்பாட்டினையும் அளித்தார். இவர் வேதியியல் ஆராய்ச்சிக்கான நோபல் பரிசினை 1905 ஆம் ஆண்டு பெற்றார். தாலைன் நிறமிகள் யூரிக் அமில வழிபொருட்கள் பாலி அசிட்டிலின்கள் மற்றும் ஆக்சோனியம் உப்புகள் ஆகியவை இவரின் அரிய கண்டறிதல்கள் ஆகும். பார்பிட்டியூரேட்கள் என அறியப்படும் மனேவசிய மருத்துகளின் மூலமான பார்பிட்யூரிக் அமிலத்தினை இவர் யூரிக் அமிலத்திலிருந்து ஒரு வழிபொருளாக கண்டறிந்து அளித்தார்.
கற்றலின் நோக்கங்கள் :
இப்பாடப்பகுதியை கற்றறிந்த பின் மாணவர்கள்,
• கார்பனைல் சேர்மங்களை தயாரிக்கும் முக்கிய முறைகளையும், அவைகளின் வேதிவினைகளையும் விவரித்தல்.
• கார்பனைல் சேர்மங்களின் கருக்கவர் பொருள் சேர்க்கை வினைகளின் வினைவழி முறைகளை விளக்குதல்.
• கார்பாசிலிக் அமிலங்கள் மற்றும் அவற்றின் பெறுதிகளின் தயாரித்தல் மற்றும் வேதிவினைகளை விவரித்தல்.
• ஆல்டிஹைடுகள், கீட்டோன்கள் மற்றும் கார்பாசிலிக் அமிலங்களின் பயன்களை பட்டியலிடுதல்.
ஆகிய திறன்களை மாணவர்கள் பெறுவர்.
பாட அறிமுகம்:
தொகுதியை கொண்டுள்ள பல்வேறு கரிமச் சேர்மங்களை நாம் நமது அன்றாட வாழ்வில் கண்டுணர்ந்து வருகிறோம். தாவரங்கள் மற்றும் விலங்கினங்களில் காணப்படும் புரோட்டீன்கள், கார்போஹைட்ரேட்டுகள் போன்ற உயிர் மூலக்கூறுகள் கார்பனைல் தொகுதியைக் கொண்டுள்ளன. எடுத்துக்காட்டாக, பிரிடாக்சால் என்பது விட்டமின் B யிலிருந்து பெறப்படும் ஒரு ஆல்டிஹைடு ஆகும். இது இணை நொதியாக செயல்படுகிறது. இழைகள், நெகிழிகள் மற்றும் மருந்துப் பொருட்களில் கார்பனைல் சேர்மங்கள் முக்கிய பகுதிப்பொருட்களாக காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக பேக்கலைட் தயாரிப்பில் ஃபார்மால்டிஹைடு பயன்படுகிறது, காய்ச்சலை குறைக்க பயன்படுத்தப்படும் பாராசிட்டமால் (P- அசிட்டைலேற்றமடைந்த அமினோ பீனால்) கார்பனைல் தொகுதியைக் கொண்டுள்ளது. இப்பாடப்பகுதியில் நாம் ஆல்டிஹைடுகள், கீட்டோன்கள் மற்றும் கார்பாக் சிலிக் அமிலங்களின் பொதுவான தயாரித்தல் அவைகளின் பண்புகள் மற்றும் பயன்களை கற்றறிவோம்.