மலர் | தாவரவியல் - புல்லிவட்டம் | 11th Botany : Chapter 4 : Reproductive Morphology of Angiosperm
புல்லிவட்டம் (calyx)
புல்லிவட்டம் மலரை அதன் மொட்டுப் பருவத்தில் மூடிப் பாதுகாக்கிறது. மலரின் வெளி வட்டம் புல்லிவட்டமாகும். இது புல்லி இதழ்களால் ஆனது. பொதுவாக பச்சை வண்ணத்தில் காணப்படும்.
1. இணைவு:
அ. இணையாப் புல்லிவட்டம் (Aposepalous/ Polysepalous) இணையாத புல்லி இதழ்கள் கொண்ட மலர்கள். எடுத்துக்காட்டு: பிராஸிக்கா, அன்னோனா.
ஆ. இணைந்த புல்லிவட்டம் (Synsepalous/ Gamosepalous):
இணைந்த புல்லி இதழ்கள் கொண்ட மலர்கள். எடுத்துக்காட்டு: ஹைபிஸ்கஸ்.
2. மலர் உறுப்புகளின் ஆயுட் காலம்
கத்திரிக்காயின் பச்சைநிறப் பாகம் என்ன? அதுபோல மற்ற கனிகளில் பார்த்திருக்கிறீர்களா?
அ. விரைவுதிர்பவை (Caducous or fugacious): மலர் உருவாகும் ஆரம்ப நிலையிலேயே புல்லி இதழ்கள் உலர்ந்து உதிர்ந்து விடும். எடுத்துக்காட்டு: பப்பாவர்.
ஆ. முதிர் உதிருபவை: மலர் மலர்ந்த பின் அல்லி இதழ்களுடன் புல்லி இதழ்களும் உதிர்ந்துவிடும். (ஆந்தெசிஸ்) எடுத்துக்காட்டு: நிலம்போ .
இ. நிலைத்தவை : புல்லிவட்டம் நிலையானவை கனியுடன் தொடர்ந்து வளர்ந்து கனியின் அடியில் கோப்பை வடிவத்தில் ஒட்டிக் காணப்படும். எடுத்துக்காட்டு: கத்தரி
ஈ. கனிவளர்புல்லி : புல்லிவட்டம் நிலையானவை. கனி உருவாகும் போது தொடர்ந்து வளர்ந்து கனியை முழுவதும் அல்லது பகுதியை மூடியிருக்கும். எடுத்துக்காட்டு: பைசாலிஸ்.
3. புல்லியின் வடிவங்கள்
செம்பருத்தியின் புல்லிவட்டத்தைக் கவனித்திருக்கிறீர்களா? மணிவடிவத்தில் இருப்பதால் அது மணிவடிவம் எனப்படும். வைத்தானியாவில் கனிந்த புல்லிவட்டம் தாழி (urn) வடிவத்தில் இருக்கும். அது தாழிவடிவம் எனப்படும். ஊமத்தையில் புல்லிவட்டம் குழல் வடிவத்தில் இருக்கும். அது குழல் வடிவம் எனப்படும் ஈருதட்டாளான புல்லிவட்டம் ஆசிமம் (துளசி) பூவில் காணப்படும். சிலநேரங்களில் புல்லிவட்டம் வண்ணம் பெற்று காணப்படும். அவை அல்லி ஒத்தவை எனப்படும். எடுத்துக்காட்டு: சரக்கா மற்றும் மூசேண்டா. ஆஸ்டரேஸியின் டிரைடாக்சில் ரோமம் போன்று உருமாறி செதில் வடிவில் காணப்படும். அவை பேப்பஸ் எனப்படும்.