Home | 11 ஆம் வகுப்பு | 11வது தாவரவியல் | கனிகளின் வகைகள், உலர்கனிகள், தனிச் சதைக்கனி

தாவரவியல் - கனிகளின் வகைகள், உலர்கனிகள், தனிச் சதைக்கனி | 11th Botany : Chapter 4 : Reproductive Morphology of Angiosperm

   Posted On :  06.07.2022 04:43 am

11 வது தாவரவியல் : அலகு 4 : இனப்பெருக்க புற அமைப்பியல்

கனிகளின் வகைகள், உலர்கனிகள், தனிச் சதைக்கனி

1) தனிச் சதைக்கனி II) உலர்கனிகள், உலர் வெடியாக்கனிகள் , பிளவுறு கனிகள்

கனிகளின் வகைகள்

கனிகள் பல வகைகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளது.



தனிக்கனி (Simple fruit)

ஒற்றை மலரின் ஒரு சூலகப்பையிலிருந்து அமாரஸ் உருவாகும் கனியாகும். எடுத்துக்காட்டு: மா, தக்காளி. கனித்தோலின் தன்மையைப்  பொருத்து தனிக்கனிகள் பின்வருமாறு வகைப்படுத்தப்படுகின்றன.


1) தனிச் சதைக்கனி (Simple fleshy fruit)


ஒற்றை மலரின் ஒரு சூலகப்பையிலிருந்து உருவாகும் கனியாகும். இவற்றின் கனித்தோல் சதைப்பற்றுடனும் சாறு நிறைந்தும் காணப்படுகிறது. கனித்தோல் வெளித்தோல், நடுத்தோல், உட்தோல் என வேறுபட்டுக் காணப்படுகிறது. மேலும் இது கீழ்க்கண்ட உட்பிரிவுகளைக் கொண்டுள்ளது. (படம் 4.24)

அ) சதைக்கனி (Berry): இக்கனி இரண்டு அல்லது சூலக இலைகள் இணைந்து உருவாகும் கனியாகும். கனியின் வெளித்தோல் மெல்லியதாகவும், நடுத்தோல் மற்றும் உட்தோல் வேறுபாடற்றும் காணப்படும். இவைகள் சாறு நிறைந்த பகுதியை உருவாக்குகிறது. இதில் விதைகள் புதைந்து காணப்படுகிறது. எடுத்துக்காட்டு : தக்காளி,   பேரிச்சை, திராட்சை, கத்திரி.

ஆ) உள் ஓட்டுச் சதைக்கனி (Drupe): இக்கனி ஒற்றைச் சூலக இலை கொண்ட மேல்மட்டச் சூலகப்பையிலிருந்து உருவாகிறது. இவை பொதுவாக ஒரு விதை கொண்ட கனியாகும். இக்கனித்தோலின் வெளித்தோல் இறுக்கமான தோல் போன்றும், நடுத்தோல் சதைப்பற்றுடன் சாறுநிறைந்தும், உட்தோல் கல் போன்று கடினமாகி விதையைச் சூழ்ந்தும் காணப்படுகிறது. எடுத்துக்காட்டு: மா, தென்னை. 

இ) வெளிஓட்டுச் சதைக்கனி (Pepo): இக்கனி கீழ்மட்டச் சூலகப்பையின் இணைந்த மூன்று சூலக இலை சூலகத்திலிருந்து உருவாகிறது. கனித்தோல் தோல் போன்றோ அல்லது கடினத்தன்மைபெற்றோ, சதைப்பற்றுடன் கூடிய நடுத்தோலையும், மென்மையான உட்தோலையும் சூழ்ந்து காணப்படுகிறது. எடுத்துக்காட்டு: வெள்ளரி, தர்பூசணி, சுரைக்காய், பூசணி.


ஈ) எலுமிச்சை வகைக்கனி (Hesperidium): இக்கனி இணைந்த பல சூலக இலைகளையும், பல சூலக அறைகளையும் கொண்ட மேல்மட்டச் சூலகப்பையிலிருந்து தோன்றுகின்றது. இதன் கனியுறை எண்ணெய் சுரப்பிகளுடன் கூடிய வெளித்தோலாகவும், நார்த்தன்மையுடன் கூடிய நடுத்தோலாகவும் வேறுபாடடைந்து காணப்படுகிறது. உட்தோல் பல தெளிவான அறைகள் கொண்டும் சதைப்பற்றுள்ள பல சாறுநிறைந்த தூவிப் போன்ற அமைப்புகளால் நிரம்பியும் காணப்படுகிறது. எடுத்துக்காட்டு: ஆரஞ்சு, எலுமிச்சை .

உ) பொய்க்கனி (Pome): இக்கனி கீழ்மட்டச் சூலகப்பையின் இணைந்த பல சூலக இலை சூலகத்திலிருந்து தோன்றுகின்றது. இதில் பூத்தளம் சூலகப்பையுடன் இணைந்து கனி உருவாகிறது. இது சதைப்பற்றுள்ளதாக மாறி உண்மைக்கனியை சூழ்ந்து காணப்படும். கனியின் வெளித்தோல் மெல்லிய தோல் போன்றும், உட்தோல் குருத்தெலும்பு போன்றும் காணப்படும். எடுத்துக்காட்டு: ஆப்பிள், பேரி.

ஊ) பலாஸ்டா (Balausta): இது ஒரு சதைப்பற்றுள்ள வெடியாக்கனியாகும். இது இணைந்த பல சூலக இலைகளையும், பல சூலக அறைகளையும் கொண்ட கீழ்மட்டச் சூலகப்பையிலிருந்து தோன்றுகின்றது. இதன் கனித்தோல் கடினமாகவும், தோல் போன்றும் காணப்படும். விதைகள் ஒழுங்கற்ற முறையில் ஒட்டி காணப்படுகின்றன. விதைகளின் வெளியுறை (டெஸ்டா) உண்ணும் பகுதியாகும். எடுத்துக்காட்டு: மாதுளை.


II) உலர்கனிகள் (Dry fruits)


இக்கனி தனி ஒரு சூலகத்திலிருந்து உருவாகிறது. இதன் கனித்தோல் உலர்ந்தும், வெளித்தோல், நடுத்தோல், உட்தோல் என வேறுபாடற்றும் காணப்படுகிறது. இது மேலும் மூன்று துணைபிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. (படம் 4.26)


1. உலர் வெடிகனிகள் (Dry dehiscent fruit)

இக்கனிகள் உலர்ந்த கனித்தோலைக் கொண்டுள்ளன. சூலிணைவுப்பகுதி வெடித்து விதைகளை வெளியேற்றுகிறது. இவை மேலும் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன.

அ) ஒருபுற வெடிகனி (Follicle): இவ்வகை கனிகள் மேல்மட்டச் சூலகப்பையின் ஒரு சூலக இலை சூலகத்திலிருந்து தோன்றுகின்றன. இவற்றில் கனியின் ஒரு விளிம்பு இணைப்பு பகுதியில் மட்டும் வெடிக்கின்றன. எடுத்துக்காட்டு: கலோட்ராபிஸ்.

ஆ) இருபுற வெடிகனி அல்லது நெற்றுக்கனி (Legume or Pod): இக்கனிகள் மேல்மட்டச் சூலகப்பையின் ஒரு சூலக இலை சூலகத்திலிருந்து தோன்றுகின்றன. இக்கனியின் வெளிப்புற, உட்புறச் சூலக இணைவுகள் வெடித்து இரண்டு பகுதிகளாகின்றன. எடுத்துக்காட்டு: பைசம்.

இ) சிலிக்குவா (Siliqua): இக்கனி மேல்மட்டச் சூலகப்பையின் இணைந்த இரு சூலக இலை சூலகத்திலிருந்து தோன்றுகின்றது. இது ஆரம்பத்தில் ஓர் அறை கொண்டது. பிறகு பொய்த் தடுப்புச்சுவர் (ரெப்ளம்) தோன்றுவதால் ஈரறை பெற்றுத் தோற்றமளிக்கும். கனிகளின் இரண்டு சூலிணைப்புகளும் வெடிக்கின்றன. எடுத்துக்காட்டு: பிராஸ்ஸிகா


ஈ) சிலிக்குலா (Silicula): இக்கனி சிலிக்குலா கனியின் ஒரு மாறுபட்ட அமைப்பாகும். ஆனால் இவை குட்டையாகவும், அகன்றும் காணப்படும். எடுத்துக்காட்டு: கேப்செல்லா

உ) வெடிகனி (Capsule): இக்கனிகள் மேல்மட்டச் சூலகப்பையின் இணைந்த பல சூலக இலை சூலகத்திலிருந்து தோன்றுகின்றன. கனிகள் வெடியுறும் வகையின் அடிப்படையில் பின்வரும் துணைப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

i) தடுப்புச்சுவர்வழி வெடிகனி (Septicidal): கனித்தோலின் தடுப்புச்சுவர் வழியாக வெடிப்பு ஏற்படுகிறது. உடைந்த கனிப்பகுதிகள் தடுப்புச்சுவருடன் ஒட்டியே காணப்படும். எடுத்துக்காட்டு: அரிஸ்டலோக்கியா.

ii) அறைவழி வெடிகனி (Loculicidal): இக்கனியின் கனித்தோல் ஒவ்வொரு சூலக அறையின் மையத்தில் வெடிக்கிறது. உடைந்த கனிப்பகுதிகள் தடுப்புச்சுவருடன் ஒட்டியே காணப்படும்.

எடுத்துக்காட்டு: எபெல்மாஸ்கஸ்.

iii) துளைவழி வெடிகனி (Poricidal): இக்கனிகள் நுனித்துளைகளின் மூலம் வெடிக்கின்றன.

எடுத்துக்காட்டு : பப்பாவர்.


2. உலர் வெடியாக்கனிகள் (Dry indehiscent fruit)

இவ்வகை உலர்கனிகள் முதிர்ச்சியடைந்தும் கனித்தோல் வெடிப்பதில்லை. மேலும் இவை கீழ்க்கண்டவாறு பிரிக்கப்பட்டுள்ளது. (படம் 4.30)

அ) உறை ஒட்டா வெடியாக்கனி (Achene): ஓர் அறை கொண்ட, மேல்மட்டச் சூலகப்பையிலிருந்து தோன்றும் இக்கனி ஒருவிதை கொண்ட உலர் கனியாகும். இவைப் பொதுவாக இணையாத சூலக இலையிலிருந்து தோன்றுகின்றன. இந்தக் கனியின் சுவர் விதையுறையுடன் இணையாமல் காணப்படும். எடுத்துக்காட்டு: கிளிமெட்டிஸ், டெல்ஃப்பினியம்.

ஆ) புல்லிமருவு வெடியாக்கனி (Cypsela): இக்கனி கீழ்மட்டச் சூலகப்பையின் இணைந்த இரு சூலக இலை சூலகத்திலிருந்து தோன்றுகின்றன. இது ஒரே ஒரு விதையைப் பெற்றுள்ள உலர்கனியாகும். இதில் புல்லிகள் மருவி செதில் அல்லது தூவி அல்லது இறகு போன்றோ காணப்படும். எடுத்துக்காட்டு : டிரைடாக்ஸ்.


இ) உறை ஒட்டிய வெடியாக்கனி (Caryopsis): இவை ஒருவிதை கொண்ட வெடியாகனியாகும். இது ஒரு சூலக இலை சூலகத்தின் மேல்மட்டச் சூலகப்பையிலிருந்து தோன்றுகிறது. இதில் கனித்தோலும் விதையும் பிரித்தறியாவண்ணம் நெருக்கமாக இணைந்துள்ளன. எடுத்துக்காட்டு: ஒரைசா.

ஈ) கொட்டைக்கனி (Nut): இக்கனிபலசூலக இலைகள் இணைந்து மேல்மட்டச் சூலகப்பையிலிருந்து தோன்றும் கனியாகும். இவற்றின் கனித்தோல் கடினமாகக் கட்டைத்தன்மை அல்லது எலும்பு போன்று காணப்படும். இது ஒருவிதை கொண்ட கனியாகும். எடுத்துக்காட்டு: அனகார்டியம்.

உ) சிறகுடை கனி (Samara): இது ஒரு விதை கொண்ட உலர் வெடியாக்கனியாகும். இவற்றின் மெல்லிய இறகு போன்ற அமைப்பாக மாறிக் கனியைச் சூழ்ந்து காணப்படுகிறது. எடுத்துக்காட்டு: ஏசர்.

ஊ) தளர்உறை வெடியாக்கனி (Utricle) – இக்கனிகள் இரு சூலக இலைகள் இணைந்து ஓரறை கொண்ட மேல்மட்டச் சூலகப்பையிலிருந்து தோன்றுகின்றன. இவற்றின் கனித்தோல் தளர்வாக விதைகளைச் சூழ்ந்து அமைந்துள்ளது.

எடுத்துக்காட்டு : கீனோபோடியம்.


3. பிளவுறு கனிகள் (Schizocarpic fruit)

இக்கனி வெடிகனிக்கும், வெடியாகனிக்கும் இடைப்பட்ட வகையாகும். ஆனால் இவ்வகை கனிகள் வெடிக்காமல், பல பகுதிகளாகப் பிளவுற்றுப் பிரிகின்றன. ஒவ்வொரு பகுதியிலும் ஒன்று அல்லது பல விதைகளைப் பெற்றிருக்கும். இவற்றைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம். (படம் 4.31)

அ) இருசூலக பிளவுறு கனி (Cremocarp): இக்கனி ஈரறை கொண்ட கீழ்மட்டச் சூலகப்பையின் இணைந்த இரு சூலக இலை சூலகத்திலிருந்து தோன்றுகின்றன. இவை ஒரு விதை கொண்ட இரு பகுதிகளாகப் பிரிகிறது. இதற்கு மெரிகார்ப்புகள் என்று பெயர். எடுத்துக்காட்டு: கொத்துமல்லி.


ஆ) பல்சூலக பிளவுறு கனி (Carcerulus): இக்கனி இரண்டு சூலக இலைகள் இணைந்த மேல்மட்டச் சூலகப்பையிலிருந்து தோன்றுகிறது. இக்கனி ஒரு விதை கொண்ட நான்கு பகுதிகளாகப் பிரிகிறது. இவை ஒவ்வொன்றும் மெரிகார்ப்புகள் என்று அழைக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டு: லியுக்கஸ்.

இ) விதையிடைப்பிரி கனி (Lomentum): இக்கனி ஒரு சூலக இலை ஓரறைகொண்ட சூலகப்பையிலிருந்து தோன்றுகிறது. இக்கனிகளில் விதைகளுக்கு இடையே குறுக்கங்கள் காணப்படும். பிறகு கனி முதிரும் போது ஒரு விதை கொண்ட பல வெடிக்காத தனிப்பகுதிகளாகப் பிரிகிறது. எடுத்துக்காட்டு: மைமோசா .

ஈ) மூவறை பிரிகனி (Regma): இது மூன்று அறைகளைக் கொண்ட மேல்மட்டச் சூலகப்பையின் இணைந்த மூன்று சூலக இலை சூலகத்திலிருந்து தோன்றுகின்றன. இவை ஒரு விதை கொண்ட கோளங்களாகப் பிரிந்து கனியின் மைய அச்சுடன் இணைந்து காணப்படும். எடுத்துக்காட்டு: ரிசினஸ்.


Tags : Botany தாவரவியல்.
11th Botany : Chapter 4 : Reproductive Morphology of Angiosperm : Simple Fruits and its Types: Fleshy and Dry Fruit Botany in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது தாவரவியல் : அலகு 4 : இனப்பெருக்க புற அமைப்பியல் : கனிகளின் வகைகள், உலர்கனிகள், தனிச் சதைக்கனி - தாவரவியல் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது தாவரவியல் : அலகு 4 : இனப்பெருக்க புற அமைப்பியல்