தாவரவியல் - மலர் , மலரின் பாகங்கள் | 11th Botany : Chapter 4 : Reproductive Morphology of Angiosperm
மலர்
பெரும்பாலான தாவரங்களில் உம்மை அதிகமாக கவரும் உறுப்பு எது? நிச்சயமாக அது மலர்தான். அதன் மணமும், வண்ண மும்தான் அதற்கு காரணம். மூடுவிதைத் தாவரங்களின் (ஆஞ்சியோஸ்பெர்ம்) மலர்தான் ஓர் குறிப்பிடத்தக்க கண்டறியும் அம்சமாகும். இது ஒரு மாறுபாடு அடைந்த குறுகிய இனப்பெருக்க தண்டுத் தொகுதி. மலர்தண்டுத் தொகுதியின் வளர்ச்சி வரம்புடையது.
1. பூவின் வட்டங்கள்:
மலரில் இரண்டுவகைவட்டங்கள் காணப்படுகின்றன அவை துணை வட்டம் மற்றும் இன்றியமையா வட்டம் ஆகும். துணைவட்டம் புல்லிவட்டம், அல்லிவட்டம் கொண்டவை, மகரந்தத்தாள் வட்டம், சூலகவட்டம் இரண்டும் இன்றியமையா வட்டம் ஆகும்.
முழுமையான மலர்: அனைத்து நான்கு வட்டங்களும் கொண்டமலர் முழுமையான மலர் எனப்படும்.
முழுமையற்ற மலர்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வட்டங்கள் காணப்படாத மலர்கள் முழுமையற்ற மலர்கள் எனப்படும்.
2. மலரின் பால் தன்மை :
மலரின்பால் தன்மை ஒரு மலரில் மகரந்தத்தாள் வட்டம், சூலகவட்டம் உள்ளதா அல்லது இல்லையா என்பதை குறிப்பதாகும்.
1. நிறைமலர் அல்லது இருபால் மலர்கள் : மகரந்தத்தாள் வட்டம், சூலகவட்டம் இரண்டும் கொண்ட மலர்கள் நிறைமலர்கள் எனப்படும்.
2. குறைமலர் அல்லது ஒருபால் மலர்கள் :
மகரந்தத்தாள் வட்டம், சூலகவட்டம், இரண்டில் ஒன்றை மட்டுமே கொண்ட மலர்கள் குறைமலர்கள் எனப்படும். இவை இரண்டு வகைப்படும்.
அ) ஆண் மலர்கள் : மகரந்தத்தாள்கள் மட்டுமே கொண்ட மலர்கள்.
ஆ) பெண் மலர்கள் : சூலகவட்டம் மட்டுமே கொண்ட மலர்கள்.
3. தாவரத்தின் பால் தன்மை
ஓர் தனித்தாவரத்தின் மலர்களில் காணும் பல்வகை பால்தன்மைப் பரவியிருத்தலைக் குறிப்பதாகும்.
1. இருபால் மலர்த்தாவரங்கள் : (Hermaphroditic) தாவரத்தின் அனைத்து மலர்களும் இருபால் மலர்களாகும்.
2. ஆண்-பெண் மலர்த்தாவரங்கள் (Monoecious): ஒரே தாவரத்தில் ஆண் மலர்களும், பெண் மலர்களும் காணப்படும். எடுத்துக்காட்டு:
தென்னை .
3. ஒருபால் மலர்த் தாவரங்கள் (Dioecious); ஒருபால் மலர்கள் தனித்தனித் தாவரங்களில் காணப்படும். எடுத்துக்காட்டு: பப்பாளி, பனை.
4. பன்பால் மலர்த்தாவரங்கள் (Polygamous): ஒருபால் மலர்களும் (ஆண்மலர், பெண்மலர்), இருபால் மலர்களும் ஒரே தாவரத்தில் காணப்படுவது பன்பால் மலர்த்தாவரங்கள் எனப்படும்.
எடுத்துக்காட்டு: வாழை, மாஞ்சிஃபெரா.
4. மலர் சீரமைவு:
ஒரு வட்டத்தின் ஆரம் என்றால் என்ன? ஒரு காகிதத்தைவட்ட வடிவில் வெட்டி எடுத்து இரு சமபாகங்கள் வரும்படி மடிக்கவும். எத்தனை தளங்களில் அதை இருசமபாகங்களாக மடிக்க முடியும்? அதே போல் வெள்ளரிக்காயை எத்தனை கோணத்தில் பிரித்தால் இரு சமபாகங்களாகப் பிரிக்க முடியும்? ஒரு மலரை மையத்தின் வழியாக எந்த ஒரு தளத்தில் இரு சமபாதியாகப் பிரிக்க முடிந்தாலும் அது சமச்சீர் மலர் எனப்படும். மலர் சீரமைவு மகரந்தச்சேர்க்கைக்கான தகவமைப்பு கொண்ட அமைப்பு முறையாகும்.
1. ஆரச் சீரமைவு (Radial/Poly Symmetric): மலரின் மையத்தில் செல்லுமாறு எந்த ஆரத்தில் அல்லது எந்த தளத்தில் வெட்டினாலும் இரு பிம்ப உருவங்களாக பிரியும் மலர்கள். பொதுவாகஇரண்டுக்கும் மேற்பட்ட தளங்களில் சீரமைவு கொண்டவை. எடுத்துக்காட்டு: ஹைபிஸ்கஸ், ஊமத்தை.
2. இருபக்க சீரமைவு (Zygomorphic-bilateral/ Monosymmetric): ஒரே ஒருதளத்தில் மட்டுமே மலரை இரு சம்பாகங்களாகப் பிரிக்கமுடியும். இருபக்கச்சீரமைவு கொண்ட மலர்கள் வருகின்ற மகரந்தப்பரப்பிகளுக்கு மகரந்தத்தூள்களைத் திறமையாக மாற்றக்கூடியவை. எடுத்துக்காட்டு: பைசம், பீன்ஸ்.
3. சமச்சீரற்றவை (Amorphic/ Asymmetric) எந்தப்பரப்பிலும் சமச்சீர் இல்லாத மலர்கள். மலரின் எந்த ஆரத்தில் வெட்டினாலும் இரு சம்பாகங்கள் கிடைக்காது. அம்மலர்களின் பாகங்கள் திருகு அமைவாக இருக்கும். எடுத்துக்காட்டு: கேன்னா இண்டிகா.