மஞ்சரி வகைகள் - ரசிமோஸ் மஞ்சரி | 11th Botany : Chapter 4 : Reproductive Morphology of Angiosperm
மலர்களின் கிளைத்தல், அமைந்திருக்கும் விதம், மற்றும் சில சிறப்பு அமைப்புகளின் அடிப்படையில் மஞ்சரிகளை வகைப்படுத்தலாம்.
I. வரம்பற்ற வளர்ச்சி (ரசிமோஸ்)
II. வரம்புடைய வளர்ச்சி (சைமோஸ்)
III. கலப்பு வகை மஞ்சரி (வரம்புடைய, வரம்பற்ற வளர்ச்சி உடைய வகைகளின் கலவையாக இருக்கும் சில தாவரங்களின் மஞ்சரிகள் ஆகும்).
IV. சிறப்பு வகை மஞ்சரிகள் (மேற்காண் மஞ்சரி வகைகளின் கீழ் வராத மஞ்சரிகள் ஆகும்).
I. ரசிமோஸ் மஞ்சரி
மஞ்சரியின் மைய அச்சின் (மஞ்சரி அச்சு) நுனி மொட்டு தொடர்ந்து வளர்ந்து பக்கவாட்டில் மலர்களை உருவாக்குவது ரசிமோஸ் மஞ்சரி எனப்படும். முதிர் மலர்கள் அச்சின் அடியிலும் இளம் மலர்கள் மற்றும் மொட்டுகள் நுனியிலும் இருக்கும். மைய அச்சின் வளர்தன்மை அடிப்படையில் இம்மஞ்சரியை மேலும் மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.
1. மைய அச்சு நீண்டவை
இவ்வகை மஞ்சரிகளின் மையத்தண்டு நீண்டு வளர்ந்து காம்புள்ள அல்லது காம்பற்ற மலர்கள் கொண்டுள்ளன. மைய அச்சு நீண்ட மஞ்சரிகளைக் கீழ்க்கண்ட வகைகளாகப் பிரிக்கலாம்.
அ. தனி ரசிம்: கிளைக்காத மைய அச்சின் மீது காம்புடைய மலர்கள் அடி முதல் நுனி நோக்கிய வரிசையில் அமைந்திருக்கும்.
எடுத்துக்காட்டு: குரோட்டலேரியா ரெட்டியுசா,
கடுகு.
ஆ. கதிர் (Spike): காம்பற்ற மலர்கள் வரம்பற்ற வளர்ச்சியுடைய கிளைக்காத மஞ்சரித்தண்டில் காணப்படும். எடுத்துக்காட்டு : அக்கிராந்தஸ் (நாயுருவி)
இ. சிறுகதிர்
(Spikelet): கிளைத்த மஞ்சரித்தண்டில்
ஒவ்வொரு கிளையும் சிறுகதிர் எனப்படும்.
காம்பற்ற மலர்கள் அடி முதல் நுனி நோக்கிய
வரிசையில் அமைந்துள்ளன. அடியில் குளூம்கள்
எனப்படும் ஒரு இணை மஞ்சரி அடிச்செதில்கள்
காணப்படும். ஒவ்வொரு காம்பற்ற மலரிலும் ஒரு லெம்மா
(பூவடிச்செதில்) மற்றும் ஒரு பேலியா
(பூக்காம்புச்செதில்) உள்ளது. பூவிதழ்கள் நிறமற்ற செதில் (லாடிகியூல்) இலைகளாக குறுகி
இருக்கும். ஒவ்வொரு மலரும் மகரந்தத்தாள் மற்றும் சூலகம் மட்டும் கொண்டது. எடுத்துக்காட்டு:
நெல், கோதுமை.
ஈ. தொங்குகதிர் (Catkin): நீண்ட தொங்கும் மைய அச்சில் சிறிய இரு (அல்லது) ஒருபால் மலர்கள் பெற்றவை. இது ‘அமெண்ட்' எனவும் அழைக்கப்படும். எடுத்துக்காட்டு : அகாலிஃபா ஹிஸ்பிடா, புரோசோபிஸ் ஜீலிஃபுளோரா.
உ. மடல் கதிர் (ஸ்பாடிக்ஸ்): எண்ணற்ற காம்பற்ற ஒருபால் மலர்கள், தடித்த அல்லது சதைப்பற்றுடைய மையத்தண்டின் மீது அடி முதல் நுனி நோக்கிய வரிசையில் அமைந்துள்ளன. பொதுவாக பெண் மலர்கள் மஞ்சரித்தண்டின் கீழ்ப்பகுதியிலும், ஆண் மலர்கள் நுனிப் பகுதியிலும் காணப்படும். முழு மஞ்சரியும் ஸ்பேத் எனப்படும் பகட்டான வண்ண அல்லது கடினமான மடலால் மூடப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டு : அமோர்ஃபோ ஃபேலஸ், கொலக்கேஸியா.
ஊ. கூட்டுரசிம்
(பானிக்கிள்): கிளைத்த ரசிம் பானிக்கிள் எனப்படும். எடுத்துக்காட்டு: மாஞ்சிஃபெரா, வேம்பு. இது கூட்டு ரசிம் அல்லது ரசிம்களின் ரசிம் எனப்படும்.
2. மைய அச்சு குட்டையானது:
மஞ்சரித்தண்டு குன்றிய வளர்ச்சி உடையது. இவை காரிம்ப், அம்பெல் என இருவகைப்படும்.
அ. காரிம்ப்: இதில் குட்டையான காம்புடைய மலர்கள் மஞ்சரித்தண்டின்
நுனியிலும் நீள காம்புடைய மலர்கள் அடிப்பகுதியிலும் இருக்கும் மஞ்சரி ஆகும். இதில்
மலர்கள் குவிய வடிவில் அல்லது தட்டையாக ஒரே மட்டத்தில் காணப்படும் ரசிமோஸ் வகை மஞ்சரி ஆகும். எடுத்துக்காட்டு:
சீசல்பினியா. கூட்டு காரிம்ப் : கிளைத்த காரிம்ப் கூட்டு காரிம்ப் எனப்படும். எடுத்துக்காட்டு:
காலிஃபிளவர்.
ஆ. அம்பெல் : வரம்பற்ற காம்புடைய மலர்கள் மஞ்சரிக்காம்பின் நுனியில் பொதுவான ஒரு இடத்திலிருந்து தோன்றும். எடுத்துக்காட்டு: அல்லியம் சீபா (வெங்காயம்).
கூட்டு அம்பெல்: இது ஒரு கிளைத்த அம்பெல் மஞ்சரி ஆகும். ஒவ்வொரு கிளையும்
அம்பெல்லூல் என அழைக்கப்படும். எடுத்துக்காட்டு:
டாக்கஸ் கரோட்டா (கேரட்), கோரியாண்ட்ரம் சட்டைவம் (கொத்தமல்லி).
3. மையத்தண்டு தட்டையானது:
மஞ்சரியின் மைய அச்சு பெரும்பாலும் தட்டையானது (குவி
அல்லது குழி) அல்லது உருண்டையானது. வரம்பற்ற வளர்ச்சி உடைய பூத்தளத்தின் மேல் காம்பற்ற
அல்லது மிகச்சிறிய காம்புடைய மலர்கள் கூட்டமாக உருவாகும். பெரும்பாலும் வட்டப்பூவடிச்செதில்கள்
சூழக் காணப்படும் மஞ்சரி வகை சிரமஞ்சரி
அல்லது கேப்பிடுலம் ஆகும்.
அ. சிரமஞ்சரி ஆஸ்டரேசி, ரூபியேசி மற்றும் மைமோசேசி குடும்பத்தின் முக்கியப்பண்பு ஆகும். இருவகை சிறுமலர்கள் பூத்தளத்தின் மீது காணப்படும். அவை
1. வட்டுச் சிறுமலர்கள் அல்லது குழல் வடிவ சிறுமலர்.
2. கதிர் சிறுமலர்கள் அல்லது நா வடிவ சிறுமலர்கள்.