ரசிமோஸ், சைமோஸ், கலப்பு வகை மஞ்சரிகள் - கிளைக்கும் தன்மை, பிற பண்புகளின் அடிப்படையில் மஞ்சரி வகைகள் | 11th Botany : Chapter 4 : Reproductive Morphology of Angiosperm
கிளைக்கும்
தன்மை, பிற பண்புகளின் அடிப்படையில் மஞ்சரி வகைகள்
மலர்களின் கிளைத்தல், அமைந்திருக்கும் விதம், மற்றும்
சில சிறப்பு அமைப்புகளின் அடிப்படையில் மஞ்சரிகளை வகைப்படுத்தலாம்.
I. வரம்பற்ற வளர்ச்சி
(ரசிமோஸ்)
II. வரம்புடைய
வளர்ச்சி (சைமோஸ்)
III. கலப்பு வகை
மஞ்சரி (வரம்புடைய, வரம்பற்ற வளர்ச்சி
உடைய வகைகளின் கலவையாக இருக்கும் சில தாவரங்களின் மஞ்சரிகள் ஆகும்).
IV. சிறப்பு வகை
மஞ்சரிகள் (மேற்காண் மஞ்சரி வகைகளின் கீழ்
வராத மஞ்சரிகள் ஆகும்).
I.
ரசிமோஸ் மஞ்சரி
மஞ்சரியின் மைய அச்சின் (மஞ்சரி அச்சு) நுனி மொட்டு
தொடர்ந்து வளர்ந்து பக்கவாட்டில் மலர்களை உருவாக்குவது ரசிமோஸ் மஞ்சரி எனப்படும். முதிர்
மலர்கள் அச்சின் அடியிலும் இளம் மலர்கள் மற்றும் மொட்டுகள் நுனியிலும் இருக்கும். மைய
அச்சின் வளர்தன்மை அடிப்படையில் இம்மஞ்சரியை மேலும் மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.
1.
மைய அச்சு நீண்டவை
இவ்வகை மஞ்சரிகளின் மையத்தண்டு நீண்டு வளர்ந்து காம்புள்ள
அல்லது காம்பற்ற மலர்கள் கொண்டுள்ளன. மைய
அச்சு நீண்ட மஞ்சரிகளைக் கீழ்க்கண்ட வகைகளாகப் பிரிக்கலாம்.
அ. தனி ரசிம்
: கிளைக்காத மைய அச்சின் மீது காம்புடைய மலர்கள் அடி முதல் நுனி நோக்கிய வரிசையில் அமைந்திருக்கும்.
எடுத்துக்காட்டு: குரோட்டலேரியா ரெட்டியுசா,
கடுகு.
ஆ. கதிர்
(Spike): காம்பற்ற மலர்கள் வரம்பற்ற வளர்ச்சியுடைய
கிளைக்காத மஞ்சரித்தண்டில் காணப்படும். எடுத்துக்காட்டு : அக்கிராந்தஸ் (நாயுருவி)
இ. சிறுகதிர்
(Spikelet): கிளைத்த மஞ்சரித்தண்டில்
ஒவ்வொரு கிளையும் சிறுகதிர் எனப்படும்.
காம்பற்ற மலர்கள் அடி முதல் நுனி நோக்கிய
வரிசையில் அமைந்துள்ளன. அடியில் குளூம்கள்
எனப்படும் ஒரு இணை மஞ்சரி அடிச்செதில்கள்
காணப்படும். ஒவ்வொரு காம்பற்ற மலரிலும் ஒரு லெம்மா
(பூவடிச்செதில்) மற்றும் ஒரு பேலியா
(பூக்காம்புச்செதில்) உள்ளது. பூவிதழ்கள் நிறமற்ற செதில் (லாடிகியூல்) இலைகளாக குறுகி
இருக்கும். ஒவ்வொரு மலரும் மகரந்தத்தாள் மற்றும் சூலகம் மட்டும் கொண்டது. எடுத்துக்காட்டு:
நெல், கோதுமை.
ஈ. தொங்குகதிர்
(Catkin): நீண்ட தொங்கும் மைய அச்சில் சிறிய
இரு (அல்லது) ஒருபால் மலர்கள் பெற்றவை. இது ‘அமெண்ட்'
எனவும் அழைக்கப்படும். எடுத்துக்காட்டு : அகாலிஃபா
ஹிஸ்பிடா, புரோசோபிஸ் ஜீலிஃபுளோரா.
உ. மடல் கதிர்
(ஸ்பாடிக்ஸ்): எண்ணற்ற காம்பற்ற
ஒருபால் மலர்கள், தடித்த அல்லது சதைப்பற்றுடைய மையத்தண்டின் மீது அடி முதல் நுனி நோக்கிய
வரிசையில் அமைந்துள்ளன. பொதுவாக பெண் மலர்கள் மஞ்சரித்தண்டின் கீழ்ப்பகுதியிலும், ஆண்
மலர்கள் நுனிப் பகுதியிலும் காணப்படும். முழு மஞ்சரியும் ஸ்பேத் எனப்படும் பகட்டான வண்ண அல்லது கடினமான மடலால் மூடப்பட்டிருக்கும்.
எடுத்துக்காட்டு : அமோர்ஃபோ ஃபேலஸ், கொலக்கேஸியா.
ஊ. கூட்டுரசிம் (பானிக்கிள்) : கிளைத்த ரசிம்
பானிக்கிள் எனப்படும். எடுத்துக்காட்டு: மாஞ்சிஃபெரா, வேம்பு. இது கூட்டு ரசிம் அல்லது ரசிம்களின் ரசிம் எனப்படும்.
2.
மைய அச்சு குட்டையானது:
மஞ்சரித்தண்டு குன்றிய வளர்ச்சி உடையது. இவை காரிம்ப்,
அம்பெல் என இருவகைப்படும்.
அ. காரிம்ப்: இதில் குட்டையான காம்புடைய மலர்கள் மஞ்சரித்தண்டின்
நுனியிலும் நீள காம்புடைய மலர்கள் அடிப்பகுதியிலும் இருக்கும் மஞ்சரி ஆகும். இதில்
மலர்கள் குவிய வடிவில் அல்லது தட்டையாக ஒரே மட்டத்தில் காணப்படும் ரசிமோஸ் வகை மஞ்சரி ஆகும். எடுத்துக்காட்டு:
சீசல்பினியா. கூட்டு காரிம்ப் : கிளைத்த காரிம்ப் கூட்டு காரிம்ப் எனப்படும். எடுத்துக்காட்டு:
காலிஃபிளவர்.
ஆ. அம்பெல் : வரம்பற்ற காம்புடைய மலர்கள் மஞ்சரிக்காம்பின் நுனியில்
பொதுவான ஒரு இடத்திலிருந்து தோன்றும். எடுத்துக்காட்டு: அல்லியம் சீபா (வெங்காயம்).
கூட்டு அம்பெல்
: இது ஒரு கிளைத்த அம்பெல் மஞ்சரி ஆகும். ஒவ்வொரு கிளையும்
அம்பெல்லூல் என அழைக்கப்படும். எடுத்துக்காட்டு
: டாக்கஸ் கரோட்டா (கேரட்), கோரியாண்ட்ரம் சட்டைவம் (கொத்தமல்லி).
3.
மையத்தண்டு தட்டையானது:
மஞ்சரியின் மைய அச்சு பெரும்பாலும் தட்டையானது (குவி
அல்லது குழி) அல்லது உருண்டையானது. வரம்பற்ற வளர்ச்சி உடைய பூத்தளத்தின் மேல் காம்பற்ற
அல்லது மிகச்சிறிய காம்புடைய மலர்கள் கூட்டமாக உருவாகும். பெரும்பாலும் வட்டப்பூவடிச்செதில்கள்
சூழக் காணப்படும் மஞ்சரி வகை சிரமஞ்சரி
அல்லது கேப்பிடுலம் ஆகும்.
அ. சிரமஞ்சரி ஆஸ்டரேசி, ரூபியேசி மற்றும் மைமோசேசி குடும்பத்தின்
முக்கியப்பண்பு ஆகும். இருவகை சிறுமலர்கள் பூத்தளத்தின் மீது காணப்படும். அவை
1. வட்டுச் சிறுமலர்கள் அல்லது குழல் வடிவ சிறுமலர்.
2. கதிர் சிறுமலர்கள் அல்லது நா வடிவ சிறுமலர்கள்.
ஒரு மலரின் அல்லது மஞ்சரியின் அடியில்
உள்ள இலை போன்ற உறுப்புக்கு பூவடிச்செதில் என்று பெயர், சூரியகாந்தியில், முழுமஞ்சரியையும்
சுற்றி கிண்ணம் போன்ற அமைப்பில் பூவடிச்செதில்கள் வட்டமாக புல்லிவட்டம் போல் உள்ளதை
நீங்கள் கவனித்திருக்கலாம். அவை வட்டப் பூவடிச்செதில்கள்
(Involucre) எனப்படும். இந்த மஞ்சரியின்
உறுப்பு மலர்களின் அடியில் காணப்படும் பூவடிச்செதில்கள் குறுவட்ட பூவடிச்செதில்கள் (Involucel)
எனலாம்.
சிரமஞ்சரி இருவகைப்படும்.
i. ஓரின சிரமஞ்சரி
: ஒரே வகையான சிறுமலர்கள் காணப்படும். தட்டு சிறுமலர்கள்
மட்டும் உள்ள சிரமஞ்சரி எடுத்துக்காட்டு: வெர்னோனியா.
கதிர் சிறுமலர்கள் மட்டும் உள்ள சிரமஞ்சரி எடுத்துக்காட்டு: லானியா.
ii. ஈரின சிரமஞ்சரி: இருவகை சிறுமலர்களையும் உடையவை. எடுத்துக்காட்டு:
ஹீலியாந்தஸ், டிரைடாக்ஸ்.
தட்டு சிறுமலர்கள் சிரமஞ்சரியின் மையத்திலும் குழல்
வடிவத்திலும் இருபால் மலர்களைக் கொண்டிருக்கும். அதேபோல் சிரமஞ்சரியின் விளிம்பில்
நாவடிவ சிறுமலர்கள் (ஒரு பால் மலர்கள்) காணப்படும்.
II.
சைமோஸ் மஞ்சரி:
மையத்தண்டு வளர்ச்சி தடைப்பட்டு மலரில் முடிவடையும்.
கக்கமொட்டுகளின் மூலம் தொடர்ந்து வளர்ச்சி நடைபெறும். முதிர் மலர்கள் மையத்தண்டின்
நுனியிலும் இளமலர்கள் அடிப்பகுதியிலும் காணப்படும்.
சைமோஸ் வகைகள்
1. தனிசைம்:
(ஒற்றை மலர் சைம்): இது ஒரே ஒரு தனிமலரை
மட்டும் கொண்ட வரம்புடைய மஞ்சரி ஆகும். எடுத்துக்காட்டு: ட்ரில்லியம் கிராண்டி ஃபுளோரம் போல் நுனியிலோ (அ) ஹைபிஸ்கஸ் போல் கோணத்திலோ காணப்படும்.
2. ஒருகைக்கிளைக்கும்
மஞ்சரி (Monochasial cyme/ Uniporous): மையத்தண்டு ஒரு மலரில் முடிவடையும். பக்கவாட்டில்
உள்ள இரண்டு பூவடிச்செதில்களிலிருந்து ஒரு கக்கமொட்டு மட்டும் தொடர்ந்து வளரும். இது
ஹெலிகாய்டு, ஸ்கார்பியாய்டு என இருவகைப்படும்.
அ . ஹெலிகாய்டு சைம்: மஞ்சரியின் மையத்தண்டு ஒரு பக்கமாக மட்டுமே வளரும். ஆரம்ப வளர்ச்சியின் போது மட்டும் சுருள் வடிவில் அமைந்திருக்கும். எடுத்துக்காட்டு: ஹெமிலியா, உருளைக்கிழங்கு..
ஆ. ஸ்கார்பியாய்டு சைம் (சின்சின்னஸ்): மஞ்சரியின் கக்கமொட்டுகள் அடுத்தடுத்தப் பக்கங்களில் வலம், இடமாக வளரும். பலசமயம் சுருள் அமைப்பிலும் தோன்றும். எடுத்துக்காட்டு: ஹீலியோட்ராப்பியம்.
3. தனி டைக்கேஷியம் (Biparous) இருகைக் கிளைத்தல்) (Simple dichasium): மைய அச்சு நுனிமலருடன் முடிவடையும். பக்க மொட்டுகள் இரண்டும் தொடர்ந்து வளரும். மொத்தம் மூன்று மலர்கள் கொண்டவை. முதிர்மலர்கள் நுனியிலும், இளம் மலர்கள் பக்கவாட்டிலும் அமைந்தவை. இதுவே மெய் சைம் எனப்படும். எடுத்துக்காட்டு : ஜாஸ்மினம் (மல்லிகை)
4. கூட்டு டைக்கேஷியம்
: பல மலர்கள் கொண்டவை. மைய அச்சு முதிர் மலரில் முடிவடையும்.
பக்கவாட்டு கிளைகள் ஒவ்வொன்றும் தனி டைக்கேஷியங்களைக் கொண்டவை. எடுத்துக்காட்டு: கிளிரோடென்ட்ரான்.
சிறிய அளவிலான தனி டைக்கேஷியம் "சைமூல்"
(cymule) எனப்படும்.
5. பல்கைக்கிளைக்கும் மஞ்சரி (Polychasial cyme) (Multiparous): மையத்தண்டு ஒரு மலரில் முடியும். பக்கவாட்டு கிளைகள் மேலும் மேலும் கிளைத்துக் கொண்டே இருக்கும். எடுத்துக்காட்டு: நீரியம்.
சிம்போடியல் சைம்: ஒருகைக் கிளைக்கும்
மஞ்சரியில், பக்கவாட்டு கிளைகள் முதலில் இடம் வலமாகவும் பின்னர் நேராகவும் உருவாகி
ஒரு நேரான போலி அச்சை உருவாக்கும்.
எடுத்துக்காட்டு: சொலானம் அமெரிக்கானம்.
III.
கலப்பு வகை மஞ்சரிகள்:
ரசிமோஸ், சைமோஸ் மஞ்சரிகளின் உருவாக்க வகை கலந்து,
ஒரே மஞ்சரியாக வெளிப்படும். அவை இருவகைப்படும்.
1. திர்சஸ் (Thyrsus): இது ரசிம் அச்சில் அமைந்த சைம்கள் ஆகும். வரம்பற்ற
மைய அச்சில் பக்கவாட்டில் காம்புடைய சைம் மலர்கள் (தனி டைக்கேஷியம் அல்லது கூட்டு டைக்கேஷியம்)
அமைந்திருக்கும். எடுத்துக்காட்டு: ஆசிமம்
(துளசி).
2. வெர்ட்டிசில்
அல்லது வெர்ட்டிசிலாஸ்டர் (Verticillaster): மைய அச்சு இரண்டு எதிர் எதிர் பக்கவாட்டு காம்பற்ற
சைம்களைக் கணுவில் கொண்டவை. ஒவ்வொரு கிளையும் ஒருகைக்கிளைத்த, இடம்வலமாக ஸ்கார்பியாய்டுசைம் போல் உருவாவதால் மலர்கள்
கணுவைச் சுற்றி கூட்டமாகக் காணப்படும். எடுத்துக்காட்டு: லியூக்கஸ் (தும்பை).
IV. சிறப்பு வகை
மஞ்சரி:
எந்த ஒரு வகையான வளர்ச்சி முறையையும் காட்ட இயலாத மஞ்சரிகள்,
சிறப்பு வகை மஞ்சரிகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
1. சையாத்தியம்
: முழு மலர் மஞ்சரியும் ஒரு தனி மலரைப் போல் காணப்படும்.
சிறிய ஒருபால் மலர்கள் கோப்பை வடிவவட்டப் பூவடிச்செதில் (Involucre) சூழக் காணப்படும். ஆண் மலர்கள் ஸ்கார்பியாய்டு முறையில் அமைந்திருக்கும். பெண்மலர் தனித்து , மையப்பகுதியில்
நீண்ட பூக்காம்புடன் காணப்படும். ஆண் மலர்கள் மகரந்தத்தாள் மட்டும், பெண் மலர் சூலகவட்டம்
மட்டுமே கொண்டவை. மஞ்சரி ஆரச்சீராகவோ (யூஃபோர்பியா),
இருபக்கச்சீராகவோ (பெடிலேந்தஸ்) காணப்படும்.
தேன் சுரப்பி வட்ட பூவடிச்செதிலின்மேல் (Involucre)
காணப்படும்.
2. ஹைபந்தோடியம்
: உள்ளீடற்ற கோளவடிவ பூத்தளத்தின் உட்சுவரில் ஒரு பால்
மலர்கள் அமைந்த மஞ்சரி. வரிசையான பூவடிச்செதில்களால் சூழப்பட்ட சிறிய திறப்பான ஆஸ்டியோல்
தவிர பூத்தளம் மூடப்பட்டிருக்கும். ஆண்மலர்கள் திறப்பருகில் மேற்புறமும், பெண் மலர்கள்,
பால் நடுநிலை (பாலிலா) மலர்கள் நடுவிலிருந்து அடிப்புறத்திலும், கலந்து காணப்படும்.
எடுத்துக்காட்டு: ஃபைகஸ் சிற்றினங்கள் (ஆலமரம், அத்தி, அரசமரம்).
3. சீனாந்தியம்: வட்டமான தட்டுப்போன்ற திறந்த பூத்தளத்தின் மீது பெண்மலர்கள் நடுவிலும், ஆண்மலர்கள் விளிம்பிலும் காணப்படும். எடுத்துக்காட்டு டார்ஸ்டீனியா.