மஞ்சரி வகைகள் - சைமோஸ் மஞ்சரி | 11th Botany : Chapter 4 : Reproductive Morphology of Angiosperm
மலர்களின் கிளைத்தல், அமைந்திருக்கும் விதம், மற்றும் சில சிறப்பு அமைப்புகளின் அடிப்படையில் மஞ்சரிகளை வகைப்படுத்தலாம்.
I. வரம்பற்ற வளர்ச்சி (ரசிமோஸ்)
II. வரம்புடைய வளர்ச்சி (சைமோஸ்)
III. கலப்பு வகை மஞ்சரி (வரம்புடைய, வரம்பற்ற வளர்ச்சி உடைய வகைகளின் கலவையாக இருக்கும் சில தாவரங்களின் மஞ்சரிகள் ஆகும்).
IV. சிறப்பு வகை மஞ்சரிகள் (மேற்காண் மஞ்சரி வகைகளின் கீழ் வராத மஞ்சரிகள் ஆகும்).
சைமோஸ் மஞ்சரி:
மையத்தண்டு வளர்ச்சி தடைப்பட்டு மலரில் முடிவடையும். கக்கமொட்டுகளின் மூலம் தொடர்ந்து வளர்ச்சி நடைபெறும். முதிர் மலர்கள் மையத்தண்டின் நுனியிலும் இளமலர்கள் அடிப்பகுதியிலும் காணப்படும்.
சைமோஸ் வகைகள்
1. தனிசைம்: (ஒற்றை மலர் சைம்): இது ஒரே ஒரு தனிமலரை மட்டும் கொண்ட வரம்புடைய மஞ்சரி ஆகும். எடுத்துக்காட்டு: ட்ரில்லியம் கிராண்டி ஃபுளோரம் போல் நுனியிலோ (அ) ஹைபிஸ்கஸ் போல் கோணத்திலோ காணப்படும்.
2. ஒருகைக்கிளைக்கும் மஞ்சரி (Monochasial cyme/ Uniporous): மையத்தண்டு ஒரு மலரில் முடிவடையும். பக்கவாட்டில் உள்ள இரண்டு பூவடிச்செதில்களிலிருந்து ஒரு கக்கமொட்டு மட்டும் தொடர்ந்து வளரும். இது ஹெலிகாய்டு, ஸ்கார்பியாய்டு என இருவகைப்படும்.
அ . ஹெலிகாய்டு சைம்: மஞ்சரியின் மையத்தண்டு ஒரு பக்கமாக மட்டுமே வளரும். ஆரம்ப வளர்ச்சியின் போது மட்டும் சுருள் வடிவில் அமைந்திருக்கும். எடுத்துக்காட்டு: ஹெமிலியா, உருளைக்கிழங்கு..
ஆ. ஸ்கார்பியாய்டு சைம் (சின்சின்னஸ்): மஞ்சரியின் கக்கமொட்டுகள் அடுத்தடுத்தப் பக்கங்களில் வலம், இடமாக வளரும். பலசமயம் சுருள் அமைப்பிலும் தோன்றும். எடுத்துக்காட்டு: ஹீலியோட்ராப்பியம்.
3. தனி டைக்கேஷியம் (Biparous) இருகைக் கிளைத்தல்) (Simple dichasium): மைய அச்சு நுனிமலருடன் முடிவடையும். பக்க மொட்டுகள் இரண்டும் தொடர்ந்து வளரும். மொத்தம் மூன்று மலர்கள் கொண்டவை. முதிர்மலர்கள் நுனியிலும், இளம் மலர்கள் பக்கவாட்டிலும் அமைந்தவை. இதுவே மெய் சைம் எனப்படும். எடுத்துக்காட்டு : ஜாஸ்மினம் (மல்லிகை)
4. கூட்டு டைக்கேஷியம்
: பல மலர்கள் கொண்டவை. மைய அச்சு முதிர் மலரில் முடிவடையும்.
பக்கவாட்டு கிளைகள் ஒவ்வொன்றும் தனி டைக்கேஷியங்களைக் கொண்டவை. எடுத்துக்காட்டு: கிளிரோடென்ட்ரான்.
சிறிய அளவிலான தனி டைக்கேஷியம் "சைமூல்" (cymule) எனப்படும்.
5. பல்கைக்கிளைக்கும் மஞ்சரி (Polychasial cyme) (Multiparous): மையத்தண்டு ஒரு மலரில் முடியும். பக்கவாட்டு கிளைகள் மேலும் மேலும் கிளைத்துக் கொண்டே இருக்கும். எடுத்துக்காட்டு: நீரியம்.
சிம்போடியல் சைம்: ஒருகைக் கிளைக்கும் மஞ்சரியில், பக்கவாட்டு கிளைகள் முதலில் இடம் வலமாகவும் பின்னர் நேராகவும் உருவாகி ஒரு நேரான போலி அச்சை உருவாக்கும்.
எடுத்துக்காட்டு: சொலானம் அமெரிக்கானம்.