இயற்கணிதம் | அலகு 3 | 8 ஆம் வகுப்பு கணக்கு - வரைபடங்கள்: நேர்க்கோடு வரைதல் | 8th Maths : Chapter 3 : Algebra
வரைபடங்கள்
7. நேர்க்கோடு வரைதல்
இப்போது நாம் வரைபடத்தாளில் புள்ளிகளை எவ்வாறு குறிப்பது என்பதைத் தெரிந்துக்கொண்டோம். வரைபடத்தாளில் புள்ளிகள் வெவ்வேறு வரிசைகளில் அமைந்திருக்கும். ஏதேனும் இரு புள்ளிகளை இணைத்தால் நமக்கு ஒரு நேர்க்கோடு கிடைக்கும்.
எடுத்துக்காட்டு 3.41
A(–2, 6) மற்றும் B(4,–3) ஆகிய புள்ளிகளை இணைத்து ஒரு நேர்க்கோடு வரைக.
தீர்வு:
கொடுக்கப்பட்ட முதல் புள்ளி A(–2, 6) ஆனது இரண்டாம் கால்பகுதியில் அமைந்துள்ளது. அதனைக் குறிக்கவும். இரண்டாவது புள்ளி B(4,–3) ஆனது நான்காம் கால்பகுதியில் அமைந்துள்ளது, அதனையும் குறிக்கவும்.
இப்போது புள்ளி A மற்றும் புள்ளி B ஐ அளவுகோலைப் பயன்படுத்தி இணைத்து, நீட்டித்தால் நமக்கு ஒரு நேர்க்கோடு கிடைக்கும்.
குறிப்பு: இந்த நேர்க்கோடானது X அச்சை (2, 0) என்ற புள்ளியிலும், Y அச்சை (0,3) என்ற புள்ளியிலும் வெட்டிச் செல்கிறது.
எடுத்துக்காட்டு 3.42
A (2,5) B(–5, –2) மற்றும் M(–5,4) N(1,–2) என்ற புள்ளிகளை இணைத்து நேர்க்கோடுகள் வரைக. மேலும் அவ்விரு நேர்க்கோடுகளும் வெட்டிக்கொள்ளும் புள்ளியைக் காண்க.
தீர்வு:
முதல் சோடிப் புள்ளிகளான A மற்றும் B ஐ I மற்றும் III ஆம் கால்பகுதியில் குறிக்கவும். அந்தப் புள்ளிகளை இணைத்து AB என்ற நேர்க்கோட்டைப் பெறவும். இரண்டாவது சோடிப் புள்ளிகளான M மற்றும் Nஐ II மற்றும் IV ஆம் கால் பகுதியில் குறிக்கவும். அந்தப் புள்ளிகளை இணைத்து MN என்ற நேர்கோட்டைப் பெறவும்.
இப்போது இரண்டு நேர்க்கோடுகளும் P(–2, 1) என்ற புள்ளியில் வெட்டிக் கொள்கிறது.
1. AB என்ற நேர்க்கோடு X அச்சை R(–3,0) என்ற புள்ளியிலும், Y அச்சை Q(0,3) என்ற புள்ளியிலும் வெட்டிச் செல்கிறது.
2. MN என்ற நேர்க்கோடு X அச்சை S(–1,0) என்ற புள்ளியிலும், Y அச்சை T(0,– 1) என்ற புள்ளியிலும் வெட்டிச் செல்கிறது.