தாவரவியல் - பாடச் சுருக்கம் - உடலப் புற அமைப்பியல் | 11th Botany : Chapter 3 : Vegetative Morphology of Angiosperm
பாடச் சுருக்கம்
பூக்கும் தாவரங்கள் இரண்டு பெரும் தொகுதிகளைக் கொண்டுள்ளது: அவை மண்ணிற்குக் கீழ் வளரும் வேரமைவு மற்றும் மண்ணிற்கு மேல் வளரும் தண்டமைவு ஆகும். தாவரத்தை நிலைநிறுத்துவதும், மண்ணிலிருந்து சத்துக்களை உறிஞ்சுவதும் வேரின் பணியாகும். சில வேர்கள் கூடுதல் பணியினைச்செய்யதனது வடிவத்திலும், அமைப்பிலும் உருமாற்றம் அடைந்துள்ளன. முளைவேரானது நீண்டு ஆணி வேரை உண்டாக்குகின்றது. இவற்றிலிருந்து பக்க வேர்கள் தோன்றுகின்றன. வேற்றிட வேர்கள் தாவரத்தின் முளைவேரைத் தவிர மற்ற பாகங்களிலிருந்து தோன்றுகின்றன. தண்டானது அதிகபட்ச சூரிய ஒளியைப் பெற இலையையும், மகரந்தச் சேர்க்கை நடைபெற மலர்களையும், விதை பரவுதலுக்கு ஏதுவாக கனிகளையும் கொண்டு காணப்படுகிறது. தண்டானது பொதுவான பணிகளைத் தவிர சேமித்தல், இனப்பெருக்கம், பாதுகாத்தல் போன்ற கூடுதல் பணிகளைச் செய்ய உருமாற்றம் அடைகின்றது. இலைகள் வெளித்தோன்றிகளாக உருவாகுபவையாகும். இவை உணவு தயாரித்தல், நீராவிப்போக்கு போன்ற பணிகளைச் செய்கின்றன. சில இலைகள் கூடுதல் பணிகளைச் செய்ய அவற்றின் புறத்தோற்றத்தில் உருமாற்றம் அடைகின்றன. இலை நரம்பிலுள்ள வாஸ்குலத் திசுக்கள் இலைப்பரப்பிற்கு ஆதாரத்தையும், நீர் மற்றும் சத்து போன்றவற்றை இலைக்குள்ளேயும், இலை தயாரிக்கும் உணவை மற்ற பாகங்களுக்கும் கடத்துக்கின்றன. இலைகள் அமைந்திருக்கும் பல்வேறு முறைகளுக்கு இலை அடுக்கமைவு என்று பெயர்.
செயல்பாடு:
• வேர், இலை, தண்டுகளிலிருந்து தயாரிக்கப்பட்ட மருந்துகளைச் சேகரித்தல்.
• பாரம்பரிய மருத்துவ முறையைப்பற்றி அறிக்கை தயார் செய்தல்.
• வேர், இலை, தண்டு ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட சித்த, ஆயுர்வேத மருந்துகளை வகுப்பறையில் காட்சிப்படுத்துதல்
• வகுப்பறையில் துளிர் தாவரங்களை (மைக்ரோ கிரீன்ஸ்) வளர்த்தல்.