வகைகள், பணிகள் - விதை | 11th Botany : Chapter 4 : Reproductive Morphology of Angiosperm
விதை
அனைத்துக் கனிகளும் விதைகளைக் கொண்டுள்ளனவா? இல்லை.
மும்மடிய (டிரிப்ளாய்டி) கனிகள் விதைகளைப்
பெற்றிருப்பதில்லை. விதை என்பது தாவரக் கருவினைக் கொண்ட கருவுற்ற முதிர்ந்த சூலாகும்.
பெரும்பாலும் பாதுகாப்பான உறையைக் கொண்டு உணவைச் சேமித்து வைக்கிறது. கருவுறுதலுக்குப்
பின் சூலில் பல மாற்றங்கள் ஏற்பட்டு விதையாக உருமாறுகிறது.
1.
விதையின் வகைகள்
அ) காணப்படும் விதையிலைகளின் அடிப்படையில் இரண்டு விதமான
விதைகள் கண்டறியப்பட்டுள்ளன
(i) இருவிதையிலை
விதை – இரண்டு விதையிலைகளைக் கொண்ட விதை
(ii) ஒருவிதையிலை
விதை – ஒரு விதையிலையைக் கொண்ட விதை
ஆ) கருவூண் காணப்படுவது அல்லது கருவூண் அற்று காணப்படுவதைப்
பொறுத்து விதைகள் இரண்டு வகைப்படும்
i) கருசூழ் புரதம்
கொண்ட அல்லது கருவூண் கொண்ட விதை
- விதையிலைகள் மெல்லிய சவ்வு போன்று காணப்படும். முதிர்ந்த விதைகளில் கருவூண் நிலைபெற்றுக்
காணப்படும். இவை வளரும் நாற்றுகளுக்கு ஆரம்ப வளர்ச்சியின் போது ஊட்டம் அளிக்கிறது.
எடுத்துக்காட்டு: ஆமணக்கு, சூரியகாந்தி. மக்காச்சோளம்.
செயல்பாடு:
பள்ளி செல்லும் குமரப்பருவ மாணவர்களுக்கு ஏற்ற,
பொதுவாகக் கிடைக்கக்கூடிய விலை குறைந்த பழங்கள், காய்கறிகள், விதைகள் ஆகியவை அடங்கிய
சரிவிகித உணவூட்ட அட்டவணையைத் தயார் செய்க.
ii) கருசூழ் புரதமற்ற
அல்லது கருவூண் அற்ற விதை - இதில் வளரும்
கருவிற்குத் தேவையான உணவுப்பொருள் உள்ளதால் இதனைப் பயன்படுத்தி வளர்கின்றன. அதனால்
முதிர்ந்த விதைகளில் கருவூண் இருப்பதில்லை. இத்தகைய விதைகளில் விதையிலைகள் உணவைச் சேமித்துத்
தடிப்புற்று, சதைப்பற்று மிக்கவையாகக் காணப்படுகிறது. எடுத்துக்காட்டு: பட்டாணி, நிலக்கடலை.
2.
விதையின் பணிகள்
1. விதைகள் அடுத்த தலைமுறைக்கான கருவை மூடி பாதுகாக்கிறது.
2. வளரும் கருவிற்குத் தேவையான உணவைக் கொண்டுள்ளது.
3. விதையானது பரவி, புதிய சிற்றினங்கள் உருவாகக் காரணமாக
உள்ளன.
4. விதை சாதகமற்ற சூழ்நிலையில் பாதுகாப்பாக நிலைத்திருந்து
சாதகமான சூழ்நிலையில் முளைக்கும் திறனைக் கொண்டுள்ளது.
5. பல்வேறு தாவரங்களின் விதைகள் மனிதனுக்கும், விலங்கினங்களுக்கும்
உணவாகப்பயன்படுகின்றன.
6. வேளாண்மைக்கு அடிப்படையாக விளங்குவது விதைகளே ஆகும்.
7. பாலினப்பெருக்கம் மூலம் உருவானதால், விதைகள் தாவரங்களில்
மறுசேர்க்கையின் வாயிலாக மரபியல் வேறுபாடுகளை உண்டாக்குகின்றன.