அறிமுகம் | வரலாறு - அமெரிக்க விடுதலைப் போர் | 9th Social Science : History: The Age of Revolutions
பாடம் 9
புரட்சிகளின் காலம்
கற்றல் நோக்கங்கள்
I. அமெரிக்க விடுதலைப் போர்
❖ ஐரோப்பிய சக்திகளால் அமெரிக்காவில் குடியேற்றங்கள் (காலனிகள்) அமைக்கப்படுதல். பின்னர் அவை ஒருங்கிணைக்கப்பட்டு இங்கிலாந்தின் கீழ் 13 குடியேற்றங்களாக உருவாக்கப்படுதல்
❖ குடியேற்ற நாடுகளுக்கும் இங்கிலாந்துக்குமிடையே முரண்பாடுகள் தோன்றியதற்கான காரணங்கள்
❖ "பிரதிநிதித்துவம் இல்லாமல் வரிவிதிப்பு" என்பதற்குக் குடியேற்ற நாடுகளின் எதிர்ப்பு அமெரிக்க விடுதலைப் போருக்கு இட்டுச்செல்லுதல்
❖ அமெரிக்க விடுதலைப் போரின் போக்கும் விளைவுகளும்
❖ அமெரிக்கப் புரட்சியும், நவீன உலகில் மக்களாட்சிச் சிந்தனையும்
II. பிரெஞ்சுப் புரட்சி
❖ பிரெஞ்சுப் புரட்சி வெடித்ததற்கான அரசியல், சமூக, பொருளாதார, அறிவுசார் காரணங்கள்
❖ நாடாளுமன்றம் கூட்டப்படுவதற்கு வழிகோலிய சூழல்களும் பிரெஞ்சு அரசர் பதினாறாம் லூயி-இன் ஆணைகளை மூன்றாவது பிரிவினர் (பொதுமக்கள் மன்றம்) எதிர்த்ததும்
❖ டென்னிஸ் மைதான உறுதிமொழியும் பாஸ்டில் சிறைத்தகர்ப்பும் முடியாட்சி தூக்கியெறியப்படுதற்கும் தேசியச் சட்டமன்றம் நிறுவப்படுவதற்கும் வழி வகுத்தல்
❖ தேசியச் சட்டமன்றமும், அரியணையிலிருந்து இறக்கப்பட்ட அரசன் ஏனைய ஐரோப்பிய நாடுகளோடு சேர்ந்து புரட்சியை ஒடுக்குவதற்காகச் செய்த சதியும் பிரான்சின் மீது ஆஸ்திரியாவும் பிரஷ்யாவும் படையெடுப்பதற்கு இட்டுச்செல்லுதல்
❖ புரட்சிகர அரசாங்கமான தேசியப் பேரவை நிறுவப்படுதல். பதினாறாம் லூயி கொல்லப்படுதல். பிரான்சில் குடியரசுப் பிரகடனம் செய்யப்படல்
❖ நிலப்பிரபுத்துவமுறை ஒழிப்பு, திருச்சபையின் சொத்துக்கள் பறிமுதல், மக்களின் உரிமைப் பிரகடனம், ஓர் அரசியலமைப்பின் அறிமுகம்
❖ ஜேக்கோபியர் அதிகாரத்தைக் கைப்பற்றுதல். ரோபஸ்பியரின் சர்வாதிகார ஆட்சி
❖ ரோபஸ்பியரின் வீழ்ச்சியும் புரட்சியின் முடிவும்
பதினெட்டாம் நூற்றாண்டில் நடைபெற்ற மூன்று மாபெரும் புரட்சிகள் மேலைச் சமூகத்தில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தின. அவை அமெரிக்கப் புரட்சி, பிரெஞ்சுப் புரட்சி, தொழிற்புரட்சி ஆகியனவாகும். இவற்றுள் அமெரிக்கப் புரட்சியே முதல் அரசியல் புரட்சியாகும். ஐரோப்பாவின் சமூக அடித்தளத்தை ஆட்டங்காண வைத்த பிரெஞ்சுப் புரட்சியைப் போன்று இது இல்லாவிட்டாலும் அமெரிக்கப் புரட்சி ஏற்படுத்திய அரசியல் மாற்றங்கள் இருபதாம் நூற்றாண்டில் ஆசிய - ஆப்பிரிக்க நாடுகளின் காலனியாதிக்க எதிர்ப்புப் போராட்டங்களுக்கு உந்துசக்தியாகத் திகழ்ந்தது.
“சுதந்திரப் பிரகடனத்தை எழுதிய தாமஸ் ஜெபர்சன் 1776ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கூட ஆங்கிலேய முடியாட்சியிலிருந்து தனித்துச் செல்லும் விருப்பமோ ஆர்வமோ அமெரிக்கர்களுக்கில்லை' என உறுதிபடக் கூறினார். அதே ஜெபர்சன் 1776ஆம் ஆண்டு ஜூலையில் தனது "சுதந்திரப் பிரகடனத்தை" 13 குடியேற்ற நாடுகள் பங்கேற்ற, 'கண்டங்களின் மாநாட்டில், "மனிதர்கள் அனைவரும் சமமாகவே படைக்கப்பட்டுள்ளார்கள்" என உறுதிப்பாட்டுடன் ஏற்கச் செய்தார். அரசர்களுக்கும் பிரபுக்களுக்குமான மரியாதை, உலகம் தழுவியதாக இருந்த அக்காலச் சூழலில் இவருடைய கூற்று புரட்சிகரமானதாக இருந்தது. இப்பாடத்தில் அமெரிக்காவில் ஆங்கிலக் குடியேற்றங்கள் நிறுவப்பட்டதும் இங்கிலாந்துக்கு எதிரான அக்குடியேற்ற நாடுகளின் கிளர்ச்சியும் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.