பிரெஞ்சுப் புரட்சி | வரலாறு - புரட்சி வெடித்ததற்கான காரணங்கள் | 9th Social Science : History: The Age of Revolutions
புரட்சி வெடித்ததற்கான காரணங்கள்
பதினைந்தாம் லூயி தனது முப்பாட்டனான பதினான்காம் லூயிக்குப் பின்னர் அரச பதவியேற்று ஐம்பத்தொன்பது ஆண்டுகள் ஆட்சிபுரிந்தார். அரசன் சட்டத்திற்கு அப்பாற்பட்டவனல்ல,
சட்டத்திற்கு உட்பட்டவனே என்பதை நிரூபித்த இங்கிலாந்துப் புரட்சியிலிருந்தும் அப்புரட்சியின்போது இங்கிலாந்து அரசன் முதலாம் சார்லஸின் தலை துண்டிக்கப்பட்டதிலிருந்தும் பதினைந்தாம் லூயி பாடம் எதுவும் கற்றுக்கொள்ளவில்லை . 1774இல் பதினைந்தாம் லூயியைத் தொடர்ந்து அவருடைய பேரன் பதினாறாம் லூயி அரியணை ஏறினார். அவர் முற்றிலும் தனது மனைவி மேரி அன்டாய்னெட்டின் செல்வாக்கிற்குக் கட்டுப்பட்டவராய் இருந்தார். அவரது மனைவி அவரைக் காட்டிலும் தெய்வீக அரசுரிமைக் கோட்பாட்டில் நம்பிக்கை கொண்டிருந்தார். தெய்வீக அரசுரிமைக் கோட்பாட்டின்படி அரசன் இப்பூமியில் கடவுளின் பிரதிநிதியாவார். ஆகவே அவர் தனது அனைத்துச் செயல்பாடுகளுக்கும் கடவுளுக்கு மட்டுமே பதில் சொல்லக் கடமைப்பட்டவர். வேறு யாருக்கும் அவர் விளக்கம் தர வேண்டிய அவசியமில்லை . அரசனும் அரசியும் மக்களால் வெறுக்கப்பட்டனர்.
பிரெஞ்சுப் புரட்சி வெடித்தபோது பிரான்ஸ்பொருளாதாரச் சிக்கல்கள் மிக்க காலத்தினுள் பயணம் செய்துகொண்டிருந்தது. ஏழாண்டுப் போரில் பிரான்ஸ் பங்கேற்றதன் விளை வாகப் பிரான்சின் கருவூலம் காலி யான து . அப்போரில் பிரான்ஸ் தோல்வியடைந்தது. அமெரிக்கச் சுதந்திரப் போரில் பிரான்ஸ் பங்கெடுத்ததால் அதன் பொருளாதாரநிலை மேலும் மோசமடைந்தது. வெர்சே மாளிகையில் அரச குடும்பத்தினரும் பிரபுக்களும் வாழ்ந்த ஆடம்பரமான வாழ்க்கைக்கும் அதற்கு நேர்எதிராகச் சாதாரண மக்களின் கொடூரமான ஏழ்மைநிலையிலான வாழ்க்கைக்கும் இடையே பெரும் இடைவெளி நிலவியது. இதனால் ஏழ்மையில் உழன்ற சாதாரண மக்கள் பதினெட்டாம் நூற்றாண்டின் பிரெஞ்சுத் தத்துவ ஞானிகளின் புதிய சித்தாந்தங்களை ஏற்றுக்கொண்டனர். அரசரின் நிதியமைச்சர்களான டர்காட்,
நெக்கர், கலோன் பிரைன் ஆகியோர் ஒருவர் பின் ஒருவராக அரச குடும்பத்தின் செலவுகள் குறைக்கப்பட வேண்டும், மேலும் முதலிரண்டு பிரிவினரான பிரபுக்கள் மற்றும் மதகுருமார்களின் மீதும் வரிகள் விதிக்கப்பட வேண்டுமென ஆலோசனைகளை வழங்கினர். அவர்களின் ஆலோசனைகள் நிராகரிக்கப்பட்டதோடல்லாமல் அவர்கள் அனைவரும் பதவிநீக்கம் செய்யப்பட்டனர். நெருக்கடியைச் சமாளிப்பதற்காக அரசு பெருமளவில் கடன் வாங்கியதன் விளைவாகப் பெரும்
நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டது. அரசு வருமானத்தில் பாதியளவுப் பணம்,
வாங்கிய கடனுக்கு வட்டியாகச் செலுத்தப்பட்டது. இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் பிரான்சு நாட்டு அரசர் பதினாறாம் லூயி,
பிரபுக்கள், மதகுருமார்கள், சாமானியர்கள் ஆகியோரின் பிரதிநிதிகளைக் கொண்ட ஸ்டேட்ஸ் ஜெனரலைக் (நாடாளுமன்றம்) கூட்ட வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானார்.
ஏற்கெனவே வறுமையில் வாடிய விவசாயிகளின் நிலை தொடர்ந்து வறட்சியாலும் விளைச்சல்கள் பொய்த்துப்போனதாலும் மேலும் மோசமடைந்தது. இதன் விளைவாக ரொட்டியின் விலை மிகவும் உயர்ந்தது. கிராமப்புறங்களைச் சேர்ந்த விவசாயிகளும் நகர்ப்புறங்களைச் சேர்ந்த கைவினைஞர்களும் தொழிலாளர்களுமே மிகவும் பாதிக்கப்பட்டார்கள். பதினாறாம் லூயி அரசரின் ஆட்சியின் தொடக்கக் காலத்தில்பட்டினிக்கலகங்கள் நடைபெற்றன. அவற்றைத் தொடர்ந்து விவசாயிகள் கிளர்ச்சியில் இறங்கினர். பெருவாரியான மக்கள்,
தொழில் ரீதியான பிச்சைக்காரர்களாக மாறினர். பிரான்சில் பதினொரு லட்சம் பிச்சைக்காரர்கள் இருப்பதாக 1777ஆம் ஆண்டு அரசின் புள்ளிவிவரம் அறிவித்தது. விவசாயிகள் பசியோடிருந்தது உணவுக்காக மட்டுமல்ல, விவசாய நிலங்களுக்காகவும்தான். அவர்கள் பிரபுக்களையும் மதகுருமார்களையும் வெறுத்தனர். ஏனெனில் அவர்கள் பல்வேறு சிறப்புரிமைகளையும் சலுகைகளையும் அனுபவித்துவந்தனர். குறிப்பாக வரி செலுத்துவதிலிருந்து அவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.
மதகுருமார்கள் சிறுபான்மையினராக, மொத்தத்தில் 1,30,000 நபர்களாகவே இருந்தபோதிலும் சமூகத்தில் ஒப்பற்ற இடத்தை வகித்துவந்தனர். மதகுருமார்கள் பொதுமக்களிடமிருந்து அவர்களின் வருமானத்தில் அல்லது விளைச்சலில் பத்தில் ஒரு பங்கை ‘டித்’
(தசம பாகம்) எனும் பெயரில் வசூல் செய்தனர். சிறுபான்மையினராய் 1,10,000 எண்ணிக்கையிலிருந்த பிரபுக்கள் மிகப் பெரும் நிலவுடைமையாளர்களாய்,
பிரபுத்துவ உரிமைகளை அனுபவித்து வந்தனர். விவசாயிகளிடமிருந்து அவர்கள் நிலமானிய வரிகளை வசூல் செய்தனர். அவர்களின் நிலங்கள் விவசாயிகளால் உழப்பட்டன. விவசாயிகள் தங்கள் தானியங்களை மாவாகத் திரிக்க வேண்டுமென்றாலும் பிரபுக்களுக்குச் சொந்தமான ஆலைகளில்தான் திரிக்க வேண்டும். மரபுவழிப்பட்ட பரம்பரைப் பிரபுக்கள் வாளேந்திய பிரபுக்கள்'
என அழைக்கப்பட்டனர். அவர்களுக்கு வேட்டையாடும் உரிமை வழங்கப்பட்டிருந்தது. இவர்கள் உருவாகிக் கொண்டிருந்த நடுத்தர வர்க்கத்தினருக்கும் தங்கள் பணிக்காகப் பிரபுத்துவ அந்தஸ்தால் உருவாகியிருந்த புதிய பிரபுத்துவ வர்க்கத்தினருக்கும் எதிராக இருந்தனர். இத்தகைய பிரபுக்கள் அங்கிப்பிரபுக்கள் என அழைக்கப்பட்டனர்.
நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தோரும் விவசாயிகளும் மூன்றாம் பிரிவைச் (Third
Estate) சேர்ந்தோராவர். இவர்களில் ஒரு சிலர் முதலாளித்துவ வர்க்கத்தைச் சேர்ந்தோர் (பூர்ஷ்வாக்கள்) உரிமைகளைப் பெற்றவர்களாய் இருந்தபோதிலும் மூன்றாம் பிரிவைச் சேர்ந்தவர்களில் பெரும்பாலோர் விவசாயிகளாவர். விவசாயிகள் அரசுக்கு டெய்லே (நிலவரி), காபெல்லே (உப்பு வரி) போன்ற வரிகளைச் செலுத்தினர். மேலும் சாலைகள் அமைத்தல் போன்ற பொதுப் பணிகளுக்கு கார்வி' எனப்படும் இலவச உழைப்பையும் வழங்கினர். இவ்வாறு அரசர், பிரபுக்கள், மதகுருமார்கள் ஆகியோரால் பெருஞ்சுமைகளைச் சுமக்க நேர்ந்த விவசாயிகள் பட்டினியால் இறக்கநேரிடும் என்ற நிலையில் விரக்தியுற்றிருந்தனர்.
பிரான்சில் பதினெட்டாம் நூற்றாண்டில் குறிப்பிடத்தகுந்த சிந்தனையாளர்களும் எழுத்தாளர்களும் வாழ்ந்துவந்தனர். இக்காலப் பகுதியைச் சேர்ந்த பெரும்புகழ்பெற்ற பகுத்தறிவு மற்றும் அறிவியல் பற்றி எழுதிய எழுத்தாளர் வால்டேர் (1694-1778) ஆவார்.
அவர் சிறை பிடிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டபோது ஜெனிவாவிற்கு அருகே ஃபெர்னி என்ற இடத்தில் வசித்தார். வால்டேர்,
மாண்டெஸ்கியூ (1689–1755),
ரூசோ ஆகியோர் அன்று பிரான்சில் நிலவிய நிலைமைகளை விமர்சித்தனர். வால்டேர் எழுத்தாற்றல் கொண்டவரும் செயல்பாட்டாளருமாவார். தனது எழுத்துக்களில் திருச்சபையைக் கடுமையாக விமர்சித்தார். கான்டீட் (Candide) வால்டேரின் மிகவும் புகழ் பெற்ற நூலாகும். அவருடைய புகழ் பெற்ற மேற்கோள் முட்டாள்தனமானவற்றை உன்னை நம்பச் செய்ய முடிந்தவர்களால் உன்னை அக்கிரமங்களைச் செய்ய வைக்கவும் முடியும்". ஒருமுறை அவர் ஆச்சரியமாகச் சொன்னதாகச் சொல்லப்படுவது,
"நான் நீ சொன்னதை ஏற்க மறுக்கிறேன். ஆனால் அதைச் சொல்வதற்கான உன் உரிமையை என் உயிரைக் கொடுத்தும் காப்பேன்" என்பதாகும்.
மற்றொரு மகத்தான எழுத்தாளர், வால்டேரின் சமகாலத்தவரும் ஆனால் அவரைக் காட்டிலும் வயதில் இளைய வருமான ஜீன் ஜேக்ஸ் ரூசோ (1712
- 1778) ஆவார். அவருடைய அரசியல் கருத்துக்கள் பலருடைய மனங்களைப் புதிய உறுதியான சிந்தனைகளால் ஒளியேற்றி புதிய முடிவுகளை மேற்கொள்ளச் செய்தது. மகத்தான பிரெஞ்சுப் புரட்சிக்கு மக்களைத் தயார் செய்ததில் இவரின் சிந்தனைகள் முக்கியப் பங்காற்றின. தன்னுடைய சமூக ஒப்பந்தம் (Social Contract) எனும் நூலில் அவர் பதிவு செய்துள்ள புகழ் வாய்ந்த கூற்று மனிதன் சுதந்திரமாகப் பிறக்கிறான். ஆனால் எங்கும் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டுள்ளான் என்பதாகும். மக்களின் பொது விருப்பத்தால் சட்டங்கள் ஆதரிக்கப்படும்போதுதான் அவை மக்களைக் கட்டுப்படுத்தும் என அவர் வாதிட்டார்.
'பாரசீக மடல்கள், சட்டத்தின் சாரம்' (Spirit of Law) என்னும் நூல்களை எழுதிய மாண்டெஸ்கியூ (16 8 9 – 17 5 5 ) , சுதந்திரத்திற்கு ஆதரவாக வாதாடினார். அவர் 'அதிகாரப் பிரிவினை எனும் கோட்பாட்டை முன்வைத்தார்: எந்த ஓர் அரசில் அதனுடைய மூன்று உறுப்புகளான சட்டம் இயற்றுதல், சட்டத்தைச் செயல்படுத்துதல், நீதித்துறை ஆகியவற்றின் அதிகாரங்கள் சரியாகப் பிரிக்கப்பட்டுள்ளதோ அவ்வரசின் ஆட்சியில்தான் தனிமனிதச் சுதந்திரம் சிறப்பாகப் பாதுகாக்கப்படும் என அவர் எடுத்துரைத்தார். இந்த மூன்று உறுப்புகளில் ஏதாவது ஒன்று அதிக அதிகாரத்தைத் தனதாக்கிக் கொள்ள முயல்கையில் தடைகளை ஏற்படுத்தி சமநிலைப்படுத்தும் என்றார்.
பாரீசில் இதே காலப்பகுதியில் கலைக்களஞ்சியம் ஒன்று வெளியிடப்பட்டது. இக்கலைக்களஞ்சியம் தீதரா,
ஜீன்-டி ஆலம்பெர்ட் ஆகிய சிந்தனையாளர்களால் வடிக்கப்பட்ட கட்டுரைகளால் நிரம்பியிருந்தது. இத்தத்துவவாதிகளும் சிந்தனையாளர்களும் மதச் சகிப்பின்மையைச் சாடினர். ஒரு சிலரே அனுபவிக்கும் அரசியல் சமூகச் சலுகைகளை எதிர்த்தனர். பெரும்பாலான சாதாரண மக்களைச் சிந்திக்கவைப்பதிலும் செயல்படத் தூண்டுவதிலும் வெற்றி பெற்றனர்.
1776இல் வெடித்த, அமெரிக்கப் புரட்சி அமெரிக்கக் குடியரசு நிறுவப்பட்டதில் முடிந்தது. இது பிரெஞ்சுப் புரட்சிக்கு ஓர் உந்துசக்தியாகவும், மாதிரி வடிவமாகவும் திகழ்ந்தது. இங்கிலாந்திற்கு எதிராக, அமெரிக்க மக்களுக்கு ஆதரவாக இவ்விடுதலைப் போரில் பிரான்ஸ் பங்கேற்றது. இப்பங்கேற்பு பிரெஞ்சுப் புரட்சியின் மீது இரு வகைகளில் நேரடியான தாக்கங்களை ஏற்படுத்தின: முதலில் பிரெஞ்சுக் கருவூலத்திற்குப் பெரும் செலவீனத்தை ஏற்படுத்தியது. இரண்டாவது அமெரிக்க விடுதலைப் போரில் பங்கேற்ற லஃபாயட் போன்ற பிரெஞ்சு வீரர்கள் மக்களாட்சிக் கோட்பாடுகளோடு நாடு திரும்பி பிரெஞ்சுப் புரட்சியில் முக்கியப் பங்கு வகித்தனர்.