அமெரிக்க விடுதலைப் போர் | வரலாறு - விளைவுகள் | 9th Social Science : History: The Age of Revolutions
விளைவுகள்
இப்போரின் உடனடி விளைவு அமெரிக்கா சுதந்திரம் பெற்றதாகும். முதன்முதலாக ஒரு காலனியாதிக்கச் சக்தி காலனியாதிக்கத்திற்கு உட்பட்டவர்களால் தூக்கி எறியப்பட்டது. அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஒரு குடியாட்சி அரசு மலர அது வழியமைத்தது. குடியேற்ற நாட்டினர் ஐரோப்பாவின் நிலப்பிரபுத்துவச் சமத்துவமற்ற நிலையிலிருந்து விடுபட விரும்பி அதில் வெற்றியும் பெற்றனர். ஐரோப்பாவில் அறிவொளிக் காலச் சிந்தனைகளைப் பின்பற்றிய பலருக்குச் சுதந்திரப் பிரகடனத்தின் வார்த்தைகள் தங்கள் கொள்கை நிறைவேற்றமாகத் தென்பட்டன. 1776ஆம் ஆண்டு சுதந்திரப் பிரகடனம் பிறப்பால் அனைவரும் சமம்"
எனக் கூறியது.
1777 காலப் பகுதியில் அனைத்துக் குடியேற்றங்களும் எழுதப்பட்ட ஓர் அரசியலமைப்பைப் பெற்றிருந்தன. இவ்வரசியலமைப்புகள் தனிமனித உரிமைகள்,
பத்திரிகைச் சுதந்திரம், மதச் சுதந்திரம் ஆகியவற்றைப் பாதுகாத்தன. கண்டங்களின் மாநாடு, கூட்டமைப்பிற்கான விதிமுறைகளை வரைந்திருந்தது. அரசும் திருச்சபையும் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டன. தாமஸ் ஜெபர்சன் தன்னுடைய வெர்ஜீனியா மதச் சுதந்திர சட்டத் தொகுப்பில் மதச் சுதந்திரத்தை அறிமுகம் செய்திருந்தார். அது பின்னாளில் அமெரிக்க அரசியல் அமைப்பில் இணைத்துக்கொள்ளப்பட்டது.
இங்கிலாந்திற்கு எதிராக வாஷிங்டன் பக்கம் நின்று தொடக்கம் முதல் இறுதிப் போரான 1781ஆம் ஆண்டு நடைபெற்ற யார்க்டவுன் போர்வரை போரிட்ட லஃபாயட் பிரெஞ்சுப் புரட்சியின்போது பிரெஞ்சு தேசியப் பாதுகாவலர்கள் என்ற படைப்பிரிவுக்குத் தலைமையேற்றார். ஜெபர்சனின்
உதவியோடு இவர் மனிதன் மற்றும் கு டி ம க னி ன் உரிமைகள் பற்றிய பிரகடனம்' என்பதை எழுதினார். இதை பிரான்ஸின் தேசியச் சட்டமன்றம் 1789 ஆகஸ்ட் 27இல் ஏற்றது.
காரன்வாலிஸ்:
பிரபுக்கள் குடும்பத்தில் பிறந்த இவர் ஈட்டனிலும், கேம்பிரிட்ஜிலும் கல்வி கற்றார். 1757இல் இராணுவத்தில் சேர்ந்தார். 1762இல் தந்தையார் இறந்தபோது இவர் கோமான் காரன்வாலிஸ் ஆன பின்னர் இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் மேலவையானபிரபுக்கள் அவையில் இடம்பெற்றார்.அமெரிக்கவிடுதலைப்போரின்போது இவர் மேற்கொண்ட போர் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவையாக இருந்தன. சில இடங்களில் அமெரிக்கப் படைகளைத் தோற்கடித்த இவர் இறுதியில் யார்க்டவுனில் தனது படைகளுடன் சரணடைந்தார். இத்தோல்விக்குப் பின்னும் அடுத்தடுத்து வந்த இங்கிலாந்து அரசாங்கங்களின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்து, தொடர்ந்து முக்கியப் பணிகளில் பணியமர்த்தப்பட்டார். 1786இல் நைட் (knight) பட்டம் சூட்டப்பட்ட அவர் அதே ஆண்டில் இந்தியாவில் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியின் கவர்னர் ஜெனரலாகவும், இராணுவத்தின் தலைமைத் தளபதியாகவும் பணியமர்த்தப்பட்டார்.