அமெரிக்க விடுதலைப் போர் - பெருந்தோட்டங்களும் அடிமை உழைப்பும் | 9th Social Science : History: The Age of Revolutions
பெருந்தோட்டங்களும் அடிமை உழைப்பும்
அமெரிக்கப் பூர்வகுடி மக்கள் பெருந்தோட்டங்களில் (பண்ணைகள்) வேலை செய்ய முன்வராததால்,
ஐரோப்பிய தோட்ட முதலாளிகள், குறிப்பாக வெர்ஜீனியா, கரோலினா, ஜார்ஜியா ஆகிய தெற்கு மாநிலங்களைச் சேர்ந்த புகையிலை உற்பத்தியாளர்கள், வேலையாட்கள் தேவைக்காக ஆப்பிரிக்காவிலிருந்து அடிமைகளை விலை கொடுத்து வாங்கினர். ஆப்பிரிக்காவின் அப்பாவி மக்கள்,
மனித வேட்டையில் பிடிக்கப்பட்டு கொடூரமான, மனிதாபிமானமற்ற முறையில் கடல்கடந்த நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர். அமெரிக்காவின் வட மாநிலங்களில் நிலைமைகள் மாறுபட்டிருந்தன. அப்பகுதிகளிலிருந்த தோட்டங்கள் அளவில் சிறியவை. அவை தென் மாநிலங்களில் இருந்தவை போல மிகப்பெரிய பண்ணைகளல்ல. அச்சிறிய பண்ணைகளுக்கு அதிக அளவிலான வேலையாட்கள் தேவைப்படவில்லை. இவ்வாறு இக்குடியேற்றங்களில் இரு வேறுபட்ட பொருளாதார முறைகள் வளரலாயின. அமெரிக்கப் பூர்வகுடி மக்கள் இவ்விரண்டிலும் பங்குபெறவில்லை. ஆகவே அவர்கள் நாளடைவில் படிப்படியாக மேற்கு நோக்கித் தள்ளப்பட்டனர். அமெரிக்கப் பூர்வகுடி மக்களிடையே நிலவிய ஒற்றுமையின்மையும் பிரிவினையும் இதை எளிதாக்கியது.