வரலாறு - அமெரிக்க விடுதலைப் போர் | 9th Social Science : History: The Age of Revolutions
அமெரிக்க விடுதலைப் போர்
1774இல் குடியேற்ற நாடுகளுக்கும் இங்கிலாந்திற்குமிடையே போர் தொடங்குவதற்குச் சற்று முன்பாக ஜார்ஜ் வாஷிங்டன் வட அமெரிக்காவிலுள்ள சிந்திக்கத் தெரிந்த எந்தவொரு மனிதனும் சுதந்திரத்தை விரும்பமாட்டான்" எனக் கூறினார். இருந்தபோதிலும் அவர்தான் குடியேற்ற நாடுகளின் படைகளுக்குத் தலைமையேற்றார். பின்னர் அமெரிக்கக் குடியரசின் முதல் குடியரசுத் தலைவருமானார். ஆகவே குடியேற்றவாதிகள் விடுதலை பெறுவதற்காகப் போரைத் தொடங்க வில்லை . வரிவிதிப்பும்,
வணிகத்தின் மீதான கட்டுப்பாடுகளுமே அவர்களுக்கிருந்த மனக்குறைகளாகும். தங்கள் விருப்பத்திற்கு எதிராகத் தங்கள் மீது வரிவிதிக்கும் ஆங்கிலேய நாடாளுமன்றத்தின் உரிமைக்கு எதிராக அவர்கள் அறைகூவல் விடுத்தனர். பிரதிநிதித்துவம் இல்லாமல் வரிவிதிப்பில்லை " என்பதே அவர்களின் புகழ்பெற்ற போர் முழக்கமாக இருந்தது.
பாஸ்டன் துறைமுக நிகழ்வுகளால் கலக்கமடைந்த இங்கிலாந்து அரசு எதிர்ப்பை ஒடுக்க வேண்டும் என்று ஆணையிட்டு ஜெனரல் கேஜ் என்பாரை மாசாசூசட்சின் ஆளுநராகப் பணியமர்த்தியது. மேலும் பாஸ்டனுக்குத் துருப்புகளை அனுப்பிவைத் த இங்கிலாந்து அரசு சகிக்க முடியாத சட்டங்கள்' எனும் சட்டத்தை இயற்றியது. அதில் பாஸ்டனில் சட்டத்தை மீறிச் செயல்பட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக இங்கிலாந்து கொண்டு செல்லப்படுவர் எனக் கூறப்பட்டிருந்தது. 1774ஆம் ஆண்டு மே மாதம் வெர்ஜீனியா சட்டமன்றத்தில், தாமஸ் ஜெபர்சன் 1774ஆம் ஆண்டு ஜூன் முதல் நாள் உண்ணாவிரதம் மற்றும் வழிபாட்டுத் தினமாகக் கடைப்பிடிக்கப்படும் என அறிவித்தார். இவ்வறிவிப்பிற்கு எதிர்வினையாக குடியேற்றத்தின் ஆளுநர் சட்டமன்றத்தைக் கலைத்தார். இதன் பின்னர் உறுப்பினர்கள் கண்டங்களின் மாநாடு நடத்துவதற்கான தீர்மானத்தை வரைந்தனர். விரைவில் ஏனைய குடியேற்ற உறுப்பினர்களும் இவர்களுடன் இணைந்தனர். 1774ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ஆம் நாள் முதலாவது கண்டங்களின் மாநாடு பிலடெல்பியாவில் கூடியது. குடியேற்றங்களின் பிரதிநிதிகள் தீர்மானங்களின் மீது வாக்களிக்க மாநாடு ஒப்புக்கொண்டது. அதன்படி சகிக்க முடியாத சட்டம் செல்லத்தக்கதல்ல
என அறிவிக்கப்பட்டுதீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இங்கிலாந்திற்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதிக்குமாறு இம்மாநாடு அறைகூவல் விடுத்தது. கண்டங்களின் மாநாடு அமெரிக்க மக்களின் உரிமைப் பிரகடனத்தை ஏற்றது.
இரண்டாம் கண்டங்களின் மாநாடு 1775ஆம் ஆண்டு மே மாதம் 10ஆம் நாள் பிலடெல்பியாவில் கூடியது. ஜான் ஆடம்ஸ்,
சாம் ஆடம்ஸ், ரிச்சர்டு ஹென்றி லீ, தாமஸ் ஜெபர்சன் ஆகியோர் இம்மாநாட்டின் முக்கிய உறுப்பினர்கள் ஆவர். பாஸ்டனில் திரண்டிருந்த படையினரை 'கண்டங்களின் இராணுவம்' என அறிவித்த இம்மாநாடு ஜார்ஜ் வாஷிங்டனை அப்படையின் தலைமைத் தளபதியாக நியமித்தது. இங்கிலாந்துடன் தற்காலிகப் போர் நிறுத்த ஒப்பந்தமொன்றைச் செய்துகொள்ள இன்னும் வாய்ப்புள்ளதாக நம்பிய இம்மாநாடு பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவர விருப்பம் தெரிவிக்கும் ஆலிவ் கிளை விண்ணப்ப மனுவை இங்கிலாந்து அரசருக்கு அனுப்பிவைத்தது. மேலும் ஆயுதம் தாங்குவதற்கான தேவையும் காரணமும் எனும் பிரகடனம் ஒன்றையும் வெளியிட்டது.
போர் தொடர்ந்த நிலையில், கண்டங்களின் மாநாடு ஓர் அரசைப் போலவே செயல்படத் தொடங்கியது. 1775 ஜுலை மாதத்தில் அமெரிக்கப் பூர்வகுடி மக்களோடு பேச்சுவார்த்தை மேற்கொள்ள ஆணையர்களை நியமித்தது. அஞ்சல் துறையொன்று நிறுவப்பட்டு அதன் தலைமை அதிகாரியாகப் பெஞ்சமின் பிராங்கிளின் அமர்த்தப்பட்டார். அந்நிய நாடுகளின் உதவிகளைப் பெறுவதற்கான வாய்ப்புளைக் கண்டறியத் தனிக் குழுவொன்றும் அமைக்கப்பட்டது.
பங்கர் குன்றுப் போர்
முதலாவது பெரும் போரான பங்கர் குன்றுப் போர் 1775ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 17இல் மாசாசூசட்ஸில் நடைபெற்றது. 2,200 வீரர்களைக் கொண்ட வலிமை வாய்ந்த இங்கிலாந்துப் படைகள் இருமுறை பின்வாங்க நேர்ந்தது. மூன்றாவது முயற்சியில் இங்கிலாந்து வெற்றி பெற்றாலும் ஏறத்தாழ 1,000 வீரர்களைப் பலிகொடுத்தே அவ்வெற்றியைப் பெற்றது. இப்போருக்குப் பின்னர் வாஷிங்டன் அமெரிக்க இராணுவத்தின் தளபதியாகப் பொறுப்பேற்றார். மிக விரைவிலேயே ஆங்கிலேயப் படைகள் பாஸ்டனிலிருந்து பின்வாங்கியது.