அமெரிக்க விடுதலைப் போர் - ஐரோப்பிய சக்திகளின் குடியேற்றங்கள் | 9th Social Science : History: The Age of Revolutions
ஐரோப்பிய சக்திகளின் குடியேற்றங்கள்
போர்த்துகீசியர், ஸ்பானியர் ஆகியோரே புதிய நிலப்பரப்புக் காண்பதற்கான கடலாய்வுப் பயணங்களை மேற்கொண்டதிலும் குடியேற்றங்கள் பலவற்றை நிறுவியதிலும் முன்னோடிகளாவர். குடியேற்றங்களை உருவாக்கும் முயற்சிகளில் ஆங்கிலேயர் மிகவும் பின்தங்கியே இருந்தனர். ஜான் கேபட் (1497) என்பார் வட அமெரிக்காவின் நோவா ஸ்காட்டியா கடற்கரையை ஒட்டி மேற்கொண்ட கடல் பயணத்தின் அடிப்படையில் ,
ஆங்கிலேயர் வட அமெரிக்காவின் தலை நிலப் பகுதியின் (mainland)
மீது பெயரளவில் உரிமை கொண்டாடினார்கள். ஆனால் அவ்வுரிமையை உறுதிப்படுத்தும் வழிமுறைகளையோ விருப்பத்தையோ இங்கிலாந்து 16ஆம் நூற்றாண்டில் கொண்டிருக்கவில்லை. அமெரிக்காவில் இங்கிலாந்து நிறுவிய முதல் குடியேற்றம் ஜேம்ஸ்ட வுன் (1607) என்பதாகும். இங்கிலாந்தின் பிளைமவுத் நகரிலிருந்து புராட்டஸ்டண்ட் மதப் பிரிவைச் சேர்ந்த பியூரிட்டானியர் என்னும் ஒரு குழுவினரை ஏற்றிக்கொண்டு மேபிளவர் என்னும் கப்பல் 1620இல் அமெரிக்கா வந்தது. வடஅமெரிக்காவில் இறங்கிய அவர்கள் அவ்விடத்தைப் புதிய பிளைமவுத் என அழைத்தனர். மற்றொரு பியூரிட்டானியர் குழுவினர் ஜான் வின்திராப் என்பாரின் தலைமையில் மாசாசூசட்ஸ் குடியேற்றத்தை நிறுவினர்.
இங்கிலாந்து திருச்சபையைச் சீர்திருத்த வேண்டும் என்னும் நோக்கத்தில் செயல்பட்ட மதச் சீர்திருத்த இயக்கத்திற்குத் தலைமையேற்ற சீர்திருத்தவாதிகள், ரோமானியக் கத்தோலிக்கத் திருச்சபையின் போதனைகளையும் நடைமுறைகளையும் ஏற்க மறுத்தனர்.
இவர்களே பியூரிட்டானியர்
(தூய நெறியாளர் எனப் பொருள்)
என அறியப்பட்டனர்.
இங்கிலாந்து திருச்சபையைச் சீர்திருத்த இவர்கள் மேற்கொண்ட முயற்சிகளை முதலாம் ஜேம்ஸ், முதலாம் சார்லஸ் ஆகியஸ்டூவர்ட் வம்ச அரசர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை
. இவ்வரசர்கள் மேற்கொண்ட அடக்குமுறை நடவடிக்கைகளால் பெருவாரியானபியூரிட்டானியர் இங்கிலாந்திலிருந்து புலம் பெயர்ந்து வேறு பகுதிகளில் குடியேறினர்.
தாங்கள் உருவாக்கிய குடியேற்றங்களில் இவர்கள் பியூரிட்டானியர் வாழ்க்கை முறையை மேற்கொண்டனர்.
பியூரிட்டானியருக்கு முன்னரே பல குழுக்களைச் சேர்ந்தவர்கள் வட அமெரிக்கக் கிழக்குக் கடற்கரையின் ஏனைய பகுதிகளில் குடியேறினர். இவர்களைத் தொடர்ந்து மேலும் பலர் அமெரிக்கா சென்றனர். இவ்வாறு அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரையில் வடக்கேயிருந்து தெற்காக அனைத்து இடங்களிலும் பல குடியேற்றங்கள் உருவாயின. இவற்றுள் சில கத்தோலிக்கக் குடியேற்றங்கள்.
சில குடியேற்றங்கள் இங்கிலாந்தைச் சேர்ந்த கவேலியர்கள் என அறியப்பட்ட இராணுவப் பாரம்பரியம் கொண்ட பிரபுக்களால் உருவாக்கப்பட்டவை. மற்றும் சில குவேக்கர்கள் காலனிகளாகும். (பென் என்ற குவேக்கரால் நிறுவப்பட்ட குடியேற்றம் அவரின் பெயரால் பென்சில்வேனியா என அழைக்கப்பட்டது.)
குவேக்கர்கள் இங்கிலாந்தில் ஜார்ஜ் பாக்ஸ் என்பவரால் நிறுவப்பட்ட நண்பர்கள் குழாம் என்னும் கிறித்துவ மதக் குழுவின் உறுப்பினர் ஆவர்.
புனித ஆவிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்த இவர்கள் சடங்குச் சம்பிரதாயங்களையும், சமயக் குருமார் அமைப்பையும் எதிர்த்தனர்.
இவர்கள் போருக்கு எதிராகவும் அமைதிக்கு ஆதரவாகவும் மேற்கொண்ட பணிகளுக்காக நற்பெயர் பெற்றவர்களாவர்.
டச்சுக்காரர் அமெரிக்காவில் நியூ ஆம்ஸ்டர்டாம் என்ற பெயரில் ஒரு நகரத்தை நிறுவினர். பின்னர் இது ஆங்கிலேயரால் நியூயார்க் எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டது. நாளடைவில் ஜெர்மனியர், டேனியர், பிரெஞ்சுக்காரர் ஆகியோரும் குடியேறினர். பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரையிலிருந்த 13 குடியேற்ற நாடுகள் இங்கிலாந்தின் கட்டுப்பாட்டின் கீழிருந்தன.
அவை 1. ரோடு ஐலண்டு 2. நியூ ஹாம்ப்ஷ யர் 3. மாசாசூசட்ஸ் 4. கனெடிகட் 5. நியூயார்க் 6. நியூ ஜெர்சி 7. பென்சில்வேனியா 8. டெலாவர் 9. மேரிலேண்டு 10. வெர்ஜீனியா 11. வட கரோலினா 12. தென் கரோலினா 13. ஜார்ஜியா என்பனவாகும். இப்பதிமூன்று குடியேற்றங்களிலும் மக்கள் தொகை சீராக வளர்ச்சி பெற்று 1775இல் முப்பது இலட்சமாக இருந்தது. இது இங்கிலாந்தின் அப்போதைய மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்காகும்.