அமெரிக்க விடுதலைப் போர் | வரலாறு - போர் | 9th Social Science : History: The Age of Revolutions
போர்
1776ஆம் ஆண்டு ஜூலை திங்கள் 2ஆம் நாள் ஜெனரல் ஹோவ் என்பாரின் தலைமையிலான ஆங்கிலேயர் படை இழந்தவற்றை மீட்கும் முயற்சியை மேற்கொண்டது. வாஷிங்டன் லாங் தீவிலிருந்து வெளியேறும் நிலைக்கு ஆளானார். அமெரிக்க இராணுவத்தின் முக்கியப் படைப்பிரிவு பென்சில்வேனியாவை அடைந்தது. ஜெனரல் ஹோவ் நியூயார்க்கில் குளிர்காலம் கடந்து செல்லட்டும் எனக் காத்திருந்த வேளையில் கிறிஸ்துமஸ் இரவன்று டிரன்டன் எனுமிடத்தில் வாஷிங்டன் துணிச்சல் மிகுந்த தாக்குதலை நடத்தினார். இங்கிலாந்து நாட்டுப் படைகள் பிரின்ஸ்டன் என்ற இடத்தில் தோற்கடிக்கப்பட்டன.
1777ஆம் ஆண்டு குடியேற்ற நாடுகளை இரு பிரிவுகளாகப் பிரிக்கும் நோக்கத்தில் இங்கிலாந்து இராணுவம் வடக்கேயிருந்து மேற்கொண்ட தாக்குதல் முயற்சி தோல்வியடைந்தது. இருந்தபோதிலும், பிலடெல்பியாவைக் கைப்பற்றுவதில் அது வெற்றி பெற்றது. பிலடெல்பியாவுக்கு அருகேயுள்ள ஒரு சிறிய நகரத்தைக் கைப்பற்ற வாஷிங்டன் மேற்கொண்ட முயற்சிகளைக் காரன்வாலிஸ் முறியடித்தார். ஆனால் இங்கிலாந்து நாட்டுப் படைகள் சாரடோகா என்னும் இடத்தில் தோற்கடிக்கப்பட்டன. இத்தோல்வியானது அமெரிக்காவுக்கும் பிரான்சுக்குமிடையே கூட்டு ஏற்பட வழியமைத்தது. 1778 பிப்ரவரி 6இல் பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் இரண்டு உடன்படிக்கைகளில் கையெழுத்திட்டன. அவற்றின்படி பிரான்ஸ்,
அமெரிக்க ஐக்கிய நாடுகளை அங்கீகரித்து வணிகச் சலுகைகளையும் வழங்கியது. இதனைத் தொடர்ந்து 1778 ஜூன் மாதத்தில் இங்கிலாந்திற்கும் பிரான்சுக்குமிடையே போர் மூண்டது.
செப்டம்பர் மாதம் ஜார்ஜ் வாஷிங்டன் அமெரிக்க, பிரான்சு துருப்புகளைக் கொண்ட கூட்டுப் படையுடன் யார்க்டவுனைத் தாக்கினார். 1781 அக்டோபர் 19இல் காரன்வாலிஸ் சரணடைந்தார். 1783இல் பாரிஸ் அமைதி உடன்படிக்கை கையெழுத்தானது. இங்கிலாந்து, அமெரிக்க ஐக்கிய நாடுகளின் சுதந்திரத்தை ஏற்றுக்கொண்டது. 1781இல் இங்கிலாந்து படைகள் யார்க்டவுனிலிருந்து வெளியேறியபோது அமெரிக்க இராணுவ இசைக்குழு உலகம் தலைகீழாய் மாறியது" என்ற பாடலை இசைத்தனர்.