அமெரிக்க விடுதலைப் போர் | வரலாறு - அதிகமான வரிவிதிப்புகள் | 9th Social Science : History: The Age of Revolutions
அதிகமான வரிவிதிப்புகள்
ஒவ்வொரு குடியேற்றமும் ஓர் ஆளுநரையும் அவருடைய அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும் ஒரு சட்டமன்றத்தையும் கொண்டிருந்தது. தொடக்க காலத்தில் இங்கிலாந்துக்கும் குடியேற்ற நாடுகளுக்குமிடையே அவரவர் விருப்பங்களில் முரண்பாடுகள் ஏதுமில்லை . ஆங்கிலேய அரசரும் பெரும் நிலப்பிரபுக்களும் இக்குடியேற்றங்களில் பெருமளவில் முதலீடு செய்யும் ஆர்வம் கொண்டிருந்தனர். குடியேற்ற நாடுகளைக்,
குறிப்பாக வடஅமெரிக்கக் குடியேற்றங்களைக், கட்டுப்படுத்துவதை மையமாகக் கொண்டு இங்கிலாந்துக்கும் பிரான்சுக்குமிடையே ஏழாண்டுப் போர் (1756–63) நடைபெற்றது. இப்போரில் இங்கிலாந்து பிரான்சைத்தோற்கடித்து, கனடாவைத் தனது கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டுவந்தது. ஆனால் இப்போரினால் இங்கிலாந்து பெருமளவில் பணம் செலவு செய்ய நேர்ந்தது. செலவான தொகையில் ஒரு பகுதியை அமெரிக்கக் குடியேற்ற நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டுமென இங்கிலாந்து அமைச்சர்கள் சிலர் கருத்துத் தெரிவித்தனர். இதனால் குடியேற்ற நாடுகளின் மீது ஒன்றன்பின் ஒன்றாகப் பல வரிகள் விதிக்கப்பட்டன. இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் அமெரிக்கர்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை என்பதை இங்கு குறிப்பிட வேண்டும்.
ஐரோப்பியர் அமெரிக்காவில் குடியேறுவதற்கு முன்பாகவே அம்மண்ணின் மைந்தர்களாக அமெரிக்காவைச் சொந்த நாடாகக் கொண்ட பூர்வ குடிகள் பொதுவாகச் செவ்விந்தியர் என அழைக்கப்பட்டவர்கள்
(தற்போது அச்சொல் இழிவானதெனக் கருதப்படுவதால் வரலாற்று அறிஞர்கள் அச்சொல்லைப் பயன்படுத்துவதில்லை)
அமெரிக்கா முழுவதும் பரவலாக வாழ்ந்துவந்தனர்.
பல இனக் குழுக்களாகப் பிரிந்திருந்த அவர்கள் தங்களுக்குள்ளே போரிட்டுக்கொண்டிருந்தனர்.
மேலும் அடிமைச் சூழலில் வேலை செய்யவும் அவர்கள் மறுத்தனர்.
அரசியல் தந்திரம், வன்முறை ஆகிய இரண்டின் மூலமாக ஐரோப்பியர் அவ்வினக்குழுக்களைத் தோற்கடித்து அவர்களது இடங்களைக் கைப்பற்றினர்.
எண்ணிக்கையில் மிகக் குறைந்துவிட்ட அவர்கள் இன்றைய தினம் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளில் வாழ்கின்றனர்.
1764ஆம் ஆண்டின் சர்க்கரைச் சட்டம் இறக்குமதி செய்யப்படும் வெல்லப்பாகு, மதுபானங்கள், பட்டு, காப்பி முதலான ஏனைய ஆடம்பரப் பொருட்களின் மீது புதிய வரியை விதித்தது.
இச்சட்டம் இரக்கமற்று நடைமுறைப்படுத்தப்பட்டதால் வர்த்தகர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும், பொதுமக்களும் இதனை எதிர்த்தனர். சர்க்கரைச் சட்டத்தின் முகவுரையே "பிரதிநிதித்துவம் இல்லையேல் வரி இல்லை" எனும் முழக்கம் உருவாகக் காரணமாயிற்று. அதே ஆண்டின் (1764) பிற்பகுதியில் இயற்றப்பட்ட செலாவணிச் சட்டம் குடியேற்ற நாடுகள் இங்கிலாந்திடமிருந்து பெற்ற கடனைக் காகிதப்பணமாக அல்லாமல் தங்கமாகவும் வெள்ளியாகவும் திரும்பச் செலுத்த வற்புறுத்தியது. குடியேற்ற நாடுகளின் பொருளாதாரத்திற்கு இது மிகப் பெரும் சுமையானது. 1765ஆம் ஆண்டு படைவீரர் தங்குமிடச் சட்டம் அமெரிக்காவில் ஆங்கிலப் படைகளைத் தங்க வைப்பதால் ஏற்படும் செலவுகளைக் குடியேற்ற நாடுகள் ஏற்கும்படி செய்தது. மேலும் 1765ஆம் ஆண்டின் முத்திரைத்தாள் சட்டம் குடியேற்ற நாடுகளின் பல்வகைப்பட்ட ஆவணங்கள் லண்டனில் தயாராகும் முத்திரையிடப்பட்ட தாள்களிலேயே அச்சிடப்பட வேண்டுமெனக் கூறியது.