அறிமுகம் | வரலாறு - பிரெஞ்சுப் புரட்சி | 9th Social Science : History: The Age of Revolutions
பிரெஞ்சுப் புரட்சி
அறிமுகம்
பிரெஞ்சுப்புரட்சி 1789ஆம் ஆண்டுவெடித்தது. பழைய முறையிலான (1789ஆம் ஆண்டுப் புரட்சிக்கு முன்னர் பிரான்சில் நடைமுறையிலிருந்த அரசியல் சமூகஅமைப்பு முறை) பிரெஞ்சு முடியாட்சி,
எதிர்ப்புகள் ஏதுமற்ற 140 ஆண்டு கால ஆட்சியை அனுபவித்தது. பதினான்காம் லூயி மன்னரது ஆட்சியும்,
வெர்சே நகரின் பிரம்மாண்டமான அரண்மனையும் பிரெஞ்சு மன்னர்களின் வரம்பற்ற முடியாட்சியின், பிரான்ஸ் நாட்டின் மேன்மையின் அடையாளச் சின்னங்களாயின. இருந்தபோதிலும் 1789ஆம் ஆண்டு கோடைக் காலத்தில் அரசரின் அதிகாரம் திடீரென ஆட்டங்காணத் தொடங்கியது. மன்னர் பதினாறாம் லூயி 1789 மே மாதம் பிரான்ஸ் நாட்டின் நாடாளுமன்றமான எஸ்டேட்ஸ் ஜெனரல் (Estates General) கூட்டினார். இவ்வமைப்பு மூன்று வர்க்கங்களின் பிரதிநிதிகளைக் கொண்டிருந்தது. அவர்கள் மதகுருமார்கள் (சமயப் பணிகளுக்காகப் பணியமர்த்தப்பட்ட ஆண்களும் பெண்களும்) பிரபுக்கள் மற்றும் வழக்கறிஞர்கள்,
பணம்படைத்த வர்த்தகர்கள், வணிகர்கள், வங்கியாளர்கள், செல்வராக இருந்த நிலவுடைமையாளர்கள் அடங்கிய பொதுமக்கள் ஆவர். மூன்றாவது வர்க்கத்தைச் சேர்ந்த அதாவது பொதுமக்களின் பிரதிநிதிகள் பிரபுக்களுக்குத் தலைவணங்கவும் அரசரின் ஆணைகளுக்குப் பணியவும் மறுத்தனர். தங்களைத் தேசியச் சட்டமன்றமென அறிவித்துத் தாங்கள் கூடியிருந்த அறையிலிருந்து அரசரால் வெளியேற்றப்பட்டபோது,
அங்கேயிருந்த டென்னிஸ் விளையாட்டு மைதானத்தில் ஒன்றுகூடின. அரசர் ஓர் அரசியல் அமைப்பை வழங்குகிறவரை கலைந்துபோவதில்லை என அவர்கள் உறுதி மேற்கொண்டனர். இவ்வாறாக 1789இல் பிரான்ஸில் புரட்சி தொடங்கியது.