Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | பிரெஞ்சுப் புரட்சியின் போக்கு

பிரெஞ்சுப் புரட்சி | வரலாறு - பிரெஞ்சுப் புரட்சியின் போக்கு | 9th Social Science : History: The Age of Revolutions

   Posted On :  06.09.2023 06:35 am

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : புரட்சிகளின் காலம்

பிரெஞ்சுப் புரட்சியின் போக்கு

அரசரால் வெளியேற்றப்பட்ட சாமானியர்களின் பிரதிநிதிகள் டென்னிஸ் மைதானத்தில் ஒன்று கூடி தங்கள் பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும்வரை கலைந்து செல்வதில்லை என உறுதியேற்றதைத் தொடர்ந்து நெருக்கடி முற்றியது. அரசர் இவர்களைக் கலைக்கப் படைகளைப் பயன்படுத்த முயன்றார்.

பிரெஞ்சுப் புரட்சியின் போக்கு

 

பாஸ்டில் சிறையின் வீழ்ச்சி

அரசரால் வெளியேற்றப்பட்ட சாமானியர்களின் பிரதிநிதிகள் டென்னிஸ் மைதானத்தில் ஒன்று கூடி தங்கள் பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும்வரை கலைந்து செல்வதில்லை என உறுதியேற்றதைத் தொடர்ந்து நெருக்கடி முற்றியது. அரசர் இவர்களைக் கலைக்கப் படைகளைப் பயன்படுத்த முயன்றார். அவருடைய வீரர்களே அவரது ஆணைகளுக்குப் பணிய மறுத்தனர். இதனைத் தொடர்ந்து தனது நாட்டு மக்களைச் சுட்டுத்தள்ளுவதற்காக அரசர் லூயி அயல்நாட்டுப் படைகளைத் தருவிப்பதற்கான சதி ஆலோசனைகளில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் 1789 ஜூலை 14இல் பாரிஸ் நகரில் கிளர்ச்சியில் இறங்கினர். அவர்கள் பாஸ்டில் சிறையைத் தகர்த்து அங்கே சிறைவைக்கப்பட்டிருந்தவர்களை விடுதலை செய்தனர். பாஸ்டில் சிறையின் வீழ்ச்சி புரட்சியில் முக்கியத் திருப்புமுனையாகும். இதன் நினைவாக ஜூலை14ஆம் நாள் இன்றுவரை பிரான்சில் தேசிய தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் நடைபெற்ற எழுச்சிகள்  தேசியச் சட்டமன்றத்திற்கு விரைந்து செயல்படும் தைரியத்தைக் கொடுத்தன.


 

தேசியச் சட்டமன்றம்

மிதவாதத் தாராளவாதிகளைக் கொண்டிருந்த தேசியச் சட்டமன்றம் இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளில் உள்ளதைப் போல ஓர் அரசியலமைப்பை உருவாக்க விரும்பியது. இவர்களின் தலைவர் மிரபு என்பவராவார். இந்தச் சட்டமன்றம் நடுத்தர வர்க்கத்தினரால் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. விவசாயிகளுக்கும் சாமானியர்களுக்கும் இதில் பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை . தேசியச் சட்டமன்றமானது பண்ணை அடிமைமுறை, நிலப்பிரபுத்துவத் தனியுரிமைகள், வரிக்கட்டுவதிலிருந்து பிரபுக்களுக்கும் மதகுருமார்களுக்கும் அளிக்கப்பட்டிருந்த விலக்கு, அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த பட்டங்கள், நிலப்பிரபுத்துவ நீதிமன்றங்கள் ஆகியனவற்றை ஒழித்துக் கட்டியது. இதனைத் தொடர்ந்து மனிதன் மற்றும் குடிமகனின் உரிமைகள் பிரகடனம்" இயற்றப்பட்டது.

இப்பிரகடனத்தின் உள்ளடக்கம் அமெரிக்கச் சுதந்திரப் பிரகடனத்திலிருந்து பெறப்பட்டதாகும். ஆனால் அமெரிக்கப் பிரகடனம் சுருக்கமாக இருந்தது. பிரெஞ்சுப் பிரகடனம் விரிவானதாக அமைந்தது. மனிதனின் உரிமைகள் என்பது சமத்துவம், சுதந்திரம், மகிழ்ச்சி ஆகிய உரிமைகளை உள்ளடக்கியதாகவும் அவற்றை உறுதிப்படுத்துவதாகவும் அமைந்தன. தேசியச் சட்டமன்றம் வேறுசில சீர்திருத்தங்களையும் அறிமுகம் செய்தது. திருச்சபையின் பெருமளவிலான சொத்துக்களைப் பறிமுதல் செய்தது. நிர்வாக அமைப்பு நன்கு செயல்பட நாடு 80 பிரிவுகளைக் கொண்டதாகப் பிரிக்கப்பட்டது. பழைய நிலப்பிரபுத்துவ நீதிமன்றங்கள் ஒழிக்கப்பட்டுப் புதிய சிறப்பான நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டன.

மனிதன் மற்றும் குடிமகனின் உரிமைகள் பிரகடனம்: இப்பிரகடனம் லஃபாயட், தாமஸ் ஜெபர்சன், மிரபு ஆகியோர்களால் எழுதப்பட்டது. மனிதர்கள் மனிதர்களாய் இருப்பதினாலேயே இயல்பாகவே சில உரிமைகளைப் பெற்றுள்ளார்கள் என்பதை உறுதிப்படுத்தும் இயற்கை விதியை இது அடிப்படையாகக் கொண்டது. அவ்வுரிமைகள் உலகம் தழுவியவை அனைத்து இடங்களிலும் அனைத்துக் காலங்களிலும் செல்லத்தக்கவை. அறிவொளிக் காலத்துத் தத்துவஞானிகளால் ஈர்க்கப்பட்டு எழுதப்பட்ட இப்பிரகடனம் பிரெஞ்சுப் புரட்சியினுடைய லட்சியங்களின் சாரத்தை விளக்குவதாய் அமைந்தது. உலகளாவிய அளவில் சுதந்திரமும் ஜனநாயகமும் தழைத்தோங்குவதில் பெரும் தாக்கத்தை இப்பிரகடனம் ஏற்படுத்தியது.


 

வெர்செய்ல்ஸ் நோக்கி அணிவகுப்பு


எப்படியிருந்தபோதிலும், பாரிஸ் நகரில் நெருக்கடிகள் முற்றின. ரொட்டியின் விலை வாங்க முடியாத அளவுக்கு அதிகரித்ததால் கலகங்கள் வெடித்தன.பாரிஸ்நகரப்பெண்கள் அரசனிடமிருந்து ரொட்டியைப் பெறுவதற்காக வெர்செய்ல்ஸ் அரண்மனையை நோக்கிப் பேரணியாய்ப் புறப்பட்டுச் சென்றனர். கூட்டம் ஆக்ரோஷமான மனநிலையைக் கொண்டிருந்தது. தங்களுக்கு ரொட்டி வழங்க வேண்டுமெனக் கூட்டத்தினர் கோரிக்கைக் குரல் எழுப்பினர். உடனடியாக ரொட்டிகள் விநியோகம் செய்யப்பட வேண்டுமென அரசர் ஆணை பிறப்பித்தபோதிலும் கூட்டத்தினர் அரசர் உள்ளிட்ட அரச குடும்பத்தினர் அனைவரையும் சூழ்ந்துகொண்டு அவர்களைத் தங்களோடு பாரிஸ் நகரத்திற்கு வரக் கட்டாயப்படுத்தினர்.

 

வெர்னேஸுக்குத் தப்பியோடுதல்

அரசரின் நிலை மென்மேலும் ஆட்டங்கண்டது. தேசியச் சட்டமன்றம் இயற்றிய சட்டங்களை அவரால் தாங்கிக்கொள்ளமுடியவில்லை. பாரீஸை விட்டுத் தப்பியோட முடிவு செய்தார். ஒரு வேலைக்காரரைப் போல் வேடமணிந்து தனது குடும்ப உறுப்பினர்களுடன் வெர்னே என்னும் எல்லையோர நகருக்குத் தப்பிச் சென்றார். இருந்தபோதிலும் ஓர் அஞ்சல்துறைப் பணியாளரால் அடையாளம் காணப்பட்டு தேசியப் பாதுகாப்புப்படை வீரர்களால் கைது செய்யப்பட்டு பாரீஸ் நகருக்கு அழைத்துவரப்பட்டார். அது முதல் அவர் பாரிஸ் நகரில் ஒரு சிறைக் கைதியாகவே இருந்தார்.

 

ஜெரோண்டியரும் ஜேக்கோபியரும்

தாராளவாதத்தன்மை கொண்ட மிதவாதிகள் குறைந்தபட்ச அதிகாரங்களைக் கொண்ட வரையறுக்கப்பட்ட முடியாட்சியை அமைக்க விரும்பினர். இவர்கள் தங்களை ஜெரோண்டியர் கட்சியினர் என்றழைத்துக் கொண்டனர். தீவிரவாதத்தன்மை கொண்ட குடியரசுவாதிகள் ஜேக்கோபியராவர். இவர்களைத் தவிரப் புரட்சியின்போது பிரான்சிலிருந்து தப்பிச் சென்று வெளிநாடுகளில் குறிப்பாக இங்கிலாந்தில் குடியேறிய பிரான்ஸ் நாட்டுப் பிரபுக்கள் புரட்சிக்கு எதிராகத் தொடர்ந்து சதி செய்துகொண்டிருந்தனர். இவர்கள் குடியேறிகள் (Emigres) என அழைக்கப்பட்டனர். பிரான்ஸ் நாட்டுப் பெரும்பான்மை மக்களின் பேரெழுச்சியால் திகிலடைந்த ஐரோப்பாவின் அனைத்து அரசர்களும் பேரரசர்களும் புரட்சிகர பிரான்சுக்கு எதிராக அணி திரண்டனர்.

 

1791 ஆம் ஆண்டின் அரசியலமைப்பு

1791ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தேசியச் சட்டமன்றம் தனது முதல் அரசியலமைப்பை உருவாக்கியது. அரசியலமைப்புக்கு உட்பட்ட முடியாட்சி முறையை அது முன்வைத்தது. 750 உறுப்பினர்களையும் ஒரே அவையையும் கொண்ட சட்டமன்றம் பரிந்துரைக்கப்பட்டது. குறிப்பிட்ட அளவு சொத்துடையவர்களுக்கே வாக்குரிமை வழங்கப்பட்டது. அரசரே நிர்வாகத்தின் தலைவராகத் தொடர்வார் என்றும் ஆனால் அவருடைய அதிகாரங்கள் பெருமளவில் குறைக்கப்பட்டிருக்கும் என்றும் கூறப்பட்டிருந்தது. ஆனால் பாஸ்டில் சிறையை உடைத்த பொதுமக்கள் இவ்வேறுபாடுகளில் திருப்தியற்றவர்களாயினர். தங்களின் புரட்சிகர சக்திக்கு அவர்கள் வேறொரு வடிகாலைக் கண்டுகொண்டனர். அதுவே பாரிஸ் கம்யூன் ஆகும். பாரிஸ் கம்யூன் மக்களோடு நேரடித் தொடர்பு கொண்டிருந்தது. இக்கம்யூன் மிதவாதப் போக்குடைய மத்தியத்தர உறுப்பினர்களைக் கொண்ட தேசியச் சட்டமன்றத்திற்குப் போட்டியாக மாறியது.

 

குடியேறியவர்களும் புரட்சிகரப்போரும்

1792 ஆகஸ்டு மாதத்தில் அரசருடைய அரண்மனையைத் தாக்கவும் ஆணை பிறப்பித்தது. அரசன் தன்னுடைய சுவிட்சர்லாந்து நாட்டுக் காவலர்களை மக்களை நோக்கிச் சுடுமாறு ஆணை பிறப்பித்தாலும் அவர் முடிவில் பதவிநீக்கம் செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். சுவிட்சர்லாந்து நாட்டு காவலர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலர் கொல்லப்பட்டதால் ஆத்திரம் கொண்ட பொதுமக்கள் அரச ஆதரவாளர்களை மாரட் என்பவரின் தலைமையில் வேட்டையாடினர்.


செப்டம்பர் மாதம் 2ஆம் நாள் தொடங்கி மூன்று நாட்களில் மாற்றுக் கருத்துடைய எதிரிகள் என்ற சந்தேகத்தின் பேரில் 1,500 நபர்கள் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். விசாரணைக்குப் பின்னர் அவர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர். பிரான்ஸ் நாட்டு வரலாற்றில் இது 'செப்டம்பர் படுகொலை என அழைக்கப்படுகிறது. அதே மாதத்தில் வால்மி போர்க்களத்தில் ஆஸ்திரிய மற்றும் பிரஷ்யப் படைகளைப் பிரெஞ்சுப் படைகள் வெற்றி கொண்டன. இவ்வெற்றி புரட்சியைக் காப்பாற்றியது. 1792 செப்டம்பர் 21ஆம் நாள் தேசியப் பேரவை கூடியது.

 

தேசியப் பேரவையும் (National Convention) பயங்கரவாத ஆட்சியும் ( ஜூன் 1793 – ஜூலை1794)

புதிய அரசியல் அமைப்பின்படி தேர்தல்கள் நடைபெற்று அதனடிப்படையில் உருவாக்கப்பட்ட தேசியப் பேரவை கூடியது. கூடியவுடன் அது மேற்கொண்ட முதல் பணி பிரான்சைக் குடியரசு நாடாக அறிவித்ததாகும். பதினாறாம் லூயி விசாரிக்கப்பட்டு மரணதண்டனைக்குள்ளானார். அவர் கில்லட்டின் எனும் கொலைக் கருவியில் கொல்லப்பட்டார். அதே கில்லட்டினுடைய படிகளில் ஏறி நின்றுகொண்டு புரட்சியின் மாபெரும் தலைவரான டாண்டன் கூடியிருந்த மக்களிடையே உரையாற்றினார். ஏனைய ஐரோப்பிய அரசர்களுக்கு நேரடிச் சவால் விடுத்தார். புதிய பிரெஞ்சுக் குடியரசு கட்டாய இராணுவச் சேவைச் சட்டத்தின் மூலம் வலிமை மிக்க படையை உருவாக்கியது. இது குறிப்பாக ஆஸ்திரியாவிற்கும் பிரஷ்யாவிற்கும் எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகும் . பின்னர் பிரெஞ்சுக் குடியரசு இங்கிலாந்தோடும் மோத நேர்ந்தது. இவற்றின் காரணமாகப் புதிய அரசால் உள்நாட்டுச் சமூகப் பிரச்சனைகளில் போதிய கவனம் செலுத்த முடியவில்லை .


புரட்சிக்கு முந்தைய ஆட்சி முறையிலிருந்து முற்றிலும் விலகும் நோக்கத்தில் தேசியப் பேரவையானது பிரான்ஸ் நாட்டுக்காகப் புதிய குடியரசின் நாள்காட்டியை அறிமுகம் செய்தது. பழைய நாள்காட்டியில் இடம் பெற்றிருந்த மதம் சார்ந்த பெயர்களும் குறிப்புகளும் நீக்கப்பட்டன. ஒரு வாரம் என்பது பத்து நாட்களைக் கொண்டதாக மாற்றப்பட்டது. மதச்சார்பற்ற இந்நாட்காட்டியில் பன்னிரண்டு மாதங்களுக்கும் இயற்கைச் சக்திகளின் பெயர்கள் சூட்டப்பட்டன. நாட்களுக்குச் சூட்டப்பட்டிருந்தப் புனிதர்களின் பெயர்களும் கிறித்துவ விழாக்களின் பெயர்களும் நீக்கப்பட்டு ஒவ்வொரு நாளுக்கும் விதை, மரம், மலர், கனி, விலங்குகள், கருவிகள் ஆகியவற்றின் பெயர்கள் சூட்டப்பட்டன. (குடியரசின் புதிய நாள்காட்டி நெப்போலியனால் 1806 ஜனவரி முதல் நாள் கைவிடப்பட்டது.) நடைமுறையிலிருந்த அளவை முறைகள் மாற்றப்பட்டு கிலோகிராம், மீட்டர் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட மெட்ரிக் முறை அறிமுகம் செய்யப்பட்டது.

1793ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பேரவை 'சந்தேகத்துக்குரியவர் சட்டம்' என்னும் சட்டத்தை நிறைவேற்றியது. அதன்படி புரட்சிக்கு எதிரானவர்கள் எனச் சந்தேகிக்கப்படுபவர்களைக்  கைது செய்யும் அதிகாரமும் குழுவிற்கு வழங்கப்பட்டது. ஒரு மாதத்திற்குப் பின்னர் பேரவையின் ஜெரோண்டின் கட்சியைச் சேர்ந்த இருபத்திரண்டு உறுப்பினர்கள் புரட்சிகர நீதி மன்றத்தால் விசாரிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டனர். இவ்வாறு பயங்கரவாத ஆட்சி துவங்கியது.


டாண்டன், ஹெர்பர்ட், ரோபஸ்பியர் ஆகியோர் தேசியப் பேரவையின் முக்கியத் தலைவர்களாய் உருவாயினர். இருந்தபோதிலும் அவர்கள் பல விசயங்களில் முரண்பட்டிருந்தனர். பொதுப் பாதுகாப்புக் குழுவைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த ரோபஸ்பியர் தனது எதிரிகளைத் தீர்த்துக் கட்டினார். வெண்டி பகுதியில் கட்டாய இராணுவச் சேவைக்கெதிராக விவசாயிகள் பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். வெண்டி கிளர்ச்சி மிகக் கொடூரமான முறையில் அடக்கப்பட்டது. கிறித்தவத்திற்கு எதிராக வலுவான இயக்கமொன்று நடைபெற்றது. இவ்வியக்கத்தை நடத்தியவர்கள் பகுத்தறிவைப் பின்பற்றும்படி கூறினர். பாரிஸ் நகரில் நோட்ரிடான் திருக்கோவிலில் சுதந்திரத்திற்கும் பகுத்தறிவிற்கும் பெரும்விழா எடுக்கப்பட்டது. ஆனால், ரோபஸ்பியர் மத விசயங்களில் பழைமைவாதியாவார். அவரோ டாண்டனோ இவ்வியக்கத்தை அங்கீகரிக்கவில்லை. இவ்விழாவை நடத்திய ஹெர்பர்ட்டும் அவரின் ஆதரவாளர்களும் கில்லட்டினுக்கு இரையாக்கப்பட்டனர். இதனால் ஜேக்கோபியன் கட்சியில் முதல் பிளவு ஏற்பட்டது.

பெரும் எண்ணிக்கையிலான மக்களை கில்லட்டின் கொலைக் கருவியால் ரோபஸ்பியர் கொல்வதைத் டாண்டனும் வேறு சிலரும் எதிர்த்தனர். அதனால் அவர்களும் கொல்லப்பட்டனர். தற்போது மக்களிடமிருந்து முற்றிலுமாக அந்நியமாகி நின்ற ரோபஸ்பியர் எதிரிகளால் சூழப்பட்டார். ரோபஸ்பியரும் அவரின் சிறு குழுவினரும் பயங்கரவாதத்தை மேலும் தீவிரப்படுத்த விரும்பினர். சந்தேகத்திற்குரியவர் சட்டம், தவறான செய்திகளைப் பரப்புவதன் மூலம் மக்களைப் பிரிப்பதும், தூண்டிவிடுவதும் தண்டனைக்குரிய குற்றமென அறிவித்தது. இச்சட்டத்தின் அடிப்படையில் ஏராளமான மக்கள் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு மரணதண்டனை வழங்கப்பட்டனர். பயங்கர ஆட்சி நாற்பத்தாறு நாட்கள் நீடித்தது. 1794 ஜூலை 27இல் தேசியப் பேரவை திடீரென ரோபஸ்பியருக்கும் அவரின் ஆதரவாளர்களுக்கும் எதிராகத் திரும்பியது. மறுநாள் ரோபஸ்பியர் கில்லட்டினுக்கு அனுப்பப்பட்டார்.


ரோபஸ்பியரின் வீழ்ச்சியுடன் பயங்கரவாத ஆட்சியும் முடிவுக்கு வந்தது. தேசியப் பேரவையின் சர்வாதிகாரியாகத் திகழ்ந்த ரோபஸ்பியர் நேர்மையானவராக, நாட்டுப்பற்றுடையவராக, நாணயமானவராக இருந்தபோதிலும் தன்னுடன் பணியாற்றிய பலரை கில்லட்டினுக்கு அனுப்பியதால் அவப்பெயரைப் பெற்றார். 1795 அக்டோபரில் தேசியப் பேரவை கலைக்கப்பட்டு ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட இயக்குநர் குழு ஆட்சிப் பொறுப்பேற்றது.


இயக்குநர் குழுவின் ஆட்சியும் அற்ப ஆயுள் கொண்டதாகவே இருந்தது. இவ்வியக்குநர் குழு அகற்றப்பட்டு நெப்போலியனை முதல் கான்சலாகக் கொண்ட கான்சலேட் ஆட்சி பொறுப்பேற்றது. பின்னர் அதுவும் ஒழிக்கப்பட்டு நெப்போலியன் பிரான்ஸ் நாட்டின் பேரரசனாகத் தனக்குத்தானே முடிசூட்டிக் கொண்டார். இவ்வாறு லட்சியவாதிகளின் கனவுகளையும் ஏழைகளின் நம்பிக்கையையும் சிதைக்கும் வகையில் புரட்சி தோல்வியடைந்தது. இருந்தபோதிலும் குடியரசுக் கொள்கையும், சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் எனும் கோட்பாடுகளும் எதிர்காலச் சந்ததியினர் மீது தொடர்ந்து செல்வாக்கு செலுத்தியது.

Tags : The French Revolution | History பிரெஞ்சுப் புரட்சி | வரலாறு.
9th Social Science : History: The Age of Revolutions : Course of the French Revolution The French Revolution | History in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : புரட்சிகளின் காலம் : பிரெஞ்சுப் புரட்சியின் போக்கு - பிரெஞ்சுப் புரட்சி | வரலாறு : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : புரட்சிகளின் காலம்